அநீதியை எதிர்க்கும் பெண்கள்

By செய்திப்பிரிவு

க்ருஷ்ணி

உலகம் முழுவதும் அதிகாரத்தின் கொடுங் கரங்கள் மக்களை நசுக்கும்போதெல்லாம் அதற்கு எதிராகக் குரல்கொடுப்பதிலும் செயலாற்றுவதிலும் பெண்கள் தவறுவதில்லை. நீதியைப் பெற்றுத்தரும் அதிகாரத்தில் தாங்கள் இல்லாதபோதும் அநீதிக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. நீதியின் பொருட்டு நம்பிக்கை தகர்ந்துபோன இருட்டறையில் சுடர்விடும் சிற்றகலாகச் சில நேரம் அவர்களின் செயல்பாடு அமைந்துவிடுவதுண்டு.

அமெரிக்கக் காவல் அதிகாரி டெரிக் சாவின் என்பவரால் ஆப்ரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்டு கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியது. ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடந்தது. தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று ஃபிளாய்ட் கூறியும் அவரது கழுத்தைத் தன் முழங்காலால் ஒன்பது நிமிடங்கள்வரை வைத்து அழுத்திய அமெரிக்கக் காவல் அதிகாரி டெரிக் சாவின் மீது வழக்குப் பதியப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அநீதிக்கு எதிரான நிலைப்பாடு

அவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்ட மறுநாள் சாவினுடைய மனைவி கெல்லி மே சாவின், விவாகரத்து மனுவைத் தாக்கல் செய்தார். சாவினால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்டின் குடும்பத்துக்குத் தன் வருத்தத்தைத் தெரிவிப்பதாக அவர் சொல்லியிருக்கிறார். சாவினைவிட ஒரு வயது மூத்தவரான கெல்லி, தன் பெயருக்குப் பின்னால் இருக்கும் சாவினின் பெயரை அகற்றும்படியும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். வேறு எந்தக் குற்ற வழக்கில் இருந்து தப்புவதற்கும் ஏமாற்றுவதற்கும் அல்ல இந்தப் பெயர் நீக்கம் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார். தன் கணவரிடமிருந்து எந்த வகையான பொருளாதார உதவியையும் இழப்பீட்டையும் தான் எதிர்பார்க்கவில்லை எனவும் கெல்லி சொல்லியிருக்கிறார்.

உயிரைவிட மேலானது

அமெரிக்காவைச் சேர்ந்த கெல்லி மேயின் செயல்பாடு ஒருவகை என்றால் சாத்தான்குளம் சம்பவத்தில் காவல் நிலையத்தில் நடந்தவற்றை வாக்குமூலமாக அளித்த தலைமைக் காவலர் ரேவதியின் செயல்பாடு இன்னொரு வகை. சாமானியர்கள் இருவர் மீது தன் கண் முன்னாலேயே நிகழ்த்தப்பட்ட கொடூரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் உண்மையின் பக்கம்நின்று தன் கையறுநிலைக்கும் குற்ற உணர்வுக்கும் ரேவதி பதில்சொல்லியிருக்கிறார். தந்தை, மகன் இருவரையும் காவல் நிலையத்திலேயே வைத்துக் கொன்றவர்கள், அதை விசாரிக்க வந்த நீதித்துறை அதிகாரிகளை உங்களால் ஒன்றும் செய்துவிட முடியாது என மிரட்டியவர்கள் தன்னையும் ஏதாவது செய்துவிடுவார்கள் என்பதை ரேவதி உணராமல் இல்லை.

ஆனால், தன் வேலை, தனிப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றைவிடவும் தன் உயிரைவிடவும் இரு உயிர்களின் மரணத்துக்குக் கிடைக்க வேண்டிய நீதி ரேவதிக்குப் பெரிதாகத் தெரிந்திருக்கிறது. அதுதான் காவல் நிலைய அநீதி குறித்துத் தன் கணவரிடம் வேதனைப்பட வைத்ததுடன் நீதிபதிகளிடம் துணிந்து உண்மையைச் சொல்லவும் வைத்திருக்கிறது. தற்போது ரேவதியின் வீட்டுக்குப் பாதுகாப்பு அளித்திருப்பதை வைத்தே நம் நாட்டில் நீதியின் பக்கம் நிற்கிறவர்களின் நிலையைப் புரிந்துகொள்ளலாம்.

பெண்களுக்கும் பங்குண்டு

அநீதி இழைத்தவர்களுக்குப் பக்கபலமாகவும் துணையாகவும் இருப்பதன்மூலம் நாமும் ஏதோவொரு வகையில் அந்தக் குற்றச் செயலுடன் தொடர்பில் இருக்கிறோம் என்கிற சிந்தனைதான் ரேவதி, கெல்லி மே இருவரையும் அநீதிக்கு எதிராக வெவ்வேறு வகையில் செயலாற்ற உந்தியிருக்கிறது. குற்றச் செயலைக் கண்டிக்கும்வகையில் பெண்களின் மனத்தில் தோன்றுகிற எதிர்ப்பு உணர்வின் வெளிப்பாடாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம்.

அதிகாரத்தை எளியவர்களுக்கு எதிராகச் செயல்படுத்துகிற, கையறுநிலையில் இருக்கிறவர்களைச் சுரண்டிப் பிழைக்கிற ஆண்களின் செயலை எந்தவிதத்திலும் கண்டிக்காமல் அவர்களுடன் இணைந்து வாழ்கிற பெண்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் அந்தக் குற்றச் செயல்களை மறைமுகமாக அங்கீகரிப்பதன் மூலம், குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களே என்பதையும் மறுப்பதற்கில்லை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

15 mins ago

இந்தியா

54 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்