முகங்கள்: மனிதம் காக்கும் ஜீவிதப் பெண் 

By செய்திப்பிரிவு

எஸ்.கோவிந்தராஜ்

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் உணவகத்தில் அந்த இளம்பெண் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். எதிரே சாலையோரத்தில் ஒருவர் அமர்ந்து உணவகத்தையே பார்த்தபடி இருந்தார். பசியால்தான் அப்படிப் பார்க்கிறார் என்று நினைத்த அந்தப் பெண், அவருக்காக உணவு வாங்கினார். அதைப் பார்த்த ஹோட்டல் ஊழியர்கள், “அவரிடம் போகாதீர்கள். குச்சியால் அடிப்பார்” என்று எச்சரித்தனர். ஆனால், அந்தப் பெண்ணோ அவர் அருகில் சென்று, “சாப்பிடுகிறீர்களா” எனக் கேட்டு அவர் அருகில் உட்கார முயன்றார்.

அவரோ அந்தப் பெண்ணை விரட்டப் பார்த்தார். அப்போதும் அந்தப் பெண் அசரவில்லை. உணவை அவர் முன் வைத்துவிட்டு, அருகிலேயே நின்றார். சில நிமிடங்களில் ஏதோ பேசிவிட்டுச் சிரித்தார் அந்த நபர். தன் முன்னால் வைக்கப்பட்ட உணவைச் சாப்பிடத் தொடங்கினார். அந்தப் பெண் மனிஷா. அப்போது திருச்சியில் விடுதியில் தங்கியிருந்தார்.

“அதுக்கு அப்புறம் தினமும் அவரைப் பார்ப்பேன். சாப்பாடு வாங்கித் தருவேன். கொஞ்ச நாளில் அவர் எனக்கு நண்பராகிவிட்டார். அவருக்குக் கிடைக்கும் உணவு, பிஸ்கட், பழத்தையெல்லாம் எனக்குத் தர்றதுக்காகப் பத்திரப்படுத்தி வைத்திருப்பார். அவரோட அன்பால நான் நெகிழ்ந்துபோனேன். அவர் மலையாளத்துல பேசுறார்னு தெரிஞ்சதும் மலையாளம் தெரிந்தவர்களை அவரிடம் பேசவைத்தேன். அவர் பெயர் சோமன் என்பதும், கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அப்புறம் அவரை அழைத்துச் சென்று முடிவெட்டி, குளிக்கவைத்து, புதிய உடைகளை வாங்கித் தந்தேன். மற்றவர்களைப் போல் சோமனும் மாறிவிட்டார். ஆனால், அவரோட உறவினர்கள் குறித்து அவருக்கு எதுவும் நினை வில்லை. அதனால், அவரைக் காப்பகத்தில் சேர்த்தேன்.

2019 புத்தாண்டின்போது, காப்பகத்துக்குச் சென்று அவருடன் கேக் வெட்டிக் கொண்டாடினோம். அப்போ அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை” என்கிறார் மனிஷா. மனநலம் பாதிக்கப்பட்டுச் சாலையில் சுற்றித் திரிபவர்களை மீட்டு மறு வாழ்வு அளித்துவரும் 23 வயது மனிஷாவின் சேவைக்குத் தொடக்கப்புள்ளியாய் அமைந்தவர் சோமன்.

மாற்றம் தரும் ‘ஜீவிதம்’

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர் மனிஷா. இவருடைய தந்தை கிருஷ்ணசாமி, ஈரோட்டில் இறைச்சிக் கடை நடத்திவருகிறார். பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் பெற்றும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற மனிஷாவின் கனவு நிறைவேறவில்லை. அதனால், செவிலியர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிவருகிறார். ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணியையும் தொடர்ந்துவருகிறார்.

இந்த சேவையில் ஈடுபாடு கொண்டவர்களை முகநூல் குழு (Volunteer to needy people) மூலமாக இரு ஆண்டுகளாக ஒருங்கிணைத்து வருகிறார். ஈரோட்டில் ‘ஜீவிதம் பவுண்டேஷன்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, பல்வேறு பகுதிகளில் இருக்கும் ஆதரவற்றவர்களை மீட்கும் பணியையும் தொடர்கிறார். மனநலம் பாதிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்டவர்களை இரண்டு ஆண்டுகளில் மீட்டு மறுவாழ்வு அளித்திருக்கிறது ‘ஜீவிதம்’.

“சாலையில் செல்லும்போதெல்லாம் என் கண்கள் ஆதரவற்றோர் யாரேனும் இருக்கிறார்களா என்று தேடும். பலர் கந்தல் ஆடையுடன் கவனிப்பாரற்றவர்களாகவோ நோயுற்றவர்களாகவோ இருப்பார்கள். அவர்கள் அருகே அமர்ந்து ஆதரவாகப் பேசுவேன். அது அவர்களுக்கு ஆறுதலைத் தரும். அதுவரை தங்களை விரட்டிய, திட்டிய, அடித்த மனிதர்களை மட்டுமே சந்தித்த அந்த மனிதர்கள், இந்தப் பரிவை ஏற்றுக்கொள்ளும்போது குழந்தைகளாகவே மாறிவிடுகின்றனர்” என்கிறார் மனிஷா.

நெகிழவைத்த இழப்பு

இந்தச் சமூகப் பணியைச் செய்யத் தொடங்கியபோது, பலரும் இவரை ஏளனம் செய்திருக்கின்றனர். அவருடைய பெற்றோர்கூடத் தடுத்திருக்கின்றனர். ஆனால், அதையும் மீறி, விடுதியில் தங்கி இந்த உயரிய சமூகப் பணியைக் கவனித்துவருகிறார் மனிஷா. “ஸ்ரீரங்கம் கோயில் முன்பு கிருஷ்ணராஜ் தாத்தாவை மீட்டதை மறக்க முடியாது. அவரது சொந்த ஊர் ஈரோடு.

மனைவி இறந்ததும் அவருக்குப் பக்கவாதம் வந்துள்ளது. அவருடைய ஒரே மகள், அப்பாவின் விசைத்தறியை விற்று பணத்தை அவரிடம் கொடுத்து எங்காவது போய்விடுங்கள் என்று கூறியுள்ளார். அவர் ஸ்ரீரங்கம் கோயில் முன்னால் அமர்ந்திருப்பார். யாரிடமும் பிச்சை கேட்க மாட்டார். அதிகம் பேசவும் மாட்டார்.

யாராவது உணவு கொடுத்தால் வாங்கிக்கொள்வார். அவரிடம் ஒரு வாரத்துக்கு மேல் முயற்சியெடுத்துப் பேசியபோது, இந்த விவரமெல்லாம் தெரியவந்தது. அவரை மீட்டு, திருச்சியில் ஒரு காப்பகத்தில் சேர்த்தோம். கோயில் அருகே இருந்த பூக்கடையில் அவர் கொடுத்துவைத்திருந்த ரூ.19 ஆயிரம் பணத்தையும் பெரும்பாடுபட்டு மீட்டுக் கொடுத்தோம்.

காப்பகத்தில் இருந்து அடிக்கடி என்னிடம் போனில் பேசுவார். சில மாதங்கள் முன்பு என்னைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார். போய்ப் பார்த்தபோது நெஞ்சு வலிப்பதாகச் சொன்னார். மருந்துவரை வைத்துப் பரிசோதித்து விட்டு, நான் ஸ்ரீரங்கம் கோயில் சொர்க்க வாசல் திறப்புக்குச் சென்றேன். அதே நாளில் கிருஷ்ணராஜ் தாத்தா இறந்துவிட்டார்” என்று சொல்லும்போது மனிஷாவின் குரல் உடைகிறது.

மனிதர்களை நேசிப்போம்

சாலையில் சுற்றித்திரிபவர்களில் பலர் வயதானவர்கள். பல்வேறு காரணங்களால் வீட்டைவிட்டு விரட்டி விடப்பட்டவர்களே அதிகம். ஆண்களில் பலர் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிவிடுகின்றனர். “நாங்கள் மீட்டவர்களில் சுரேஷ் என்பவர் கராத்தே மாஸ்டர். கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். அவர் அருகில் செல்லவே எல்லோரும் பயந்தனர். நாங்கள் அவரிடம் பேசி, ஆலோசனை தந்து, மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று குணப்படுத்தினோம்.

ஆதரவற்றோரை மீட்டுக் காப்பகங்களில் சேர்க்கக் காவல் துறை, வருவாய்த் துறையிடம் கடிதம் பெற வேண்டிய நடைமுறை உள்ளது. சில நேரம் அது தாமதமாகிவிடும். உடல் உறுப்புகள் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகரித்ததால், எந்தக் காப்பகத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள் என்பது போன்ற விவரங்களை உறுதி செய்த பின்பே காவல்துறையினர் சான்றளிக்கின்றனர்” என்கிறார் மனிஷா.

ஆதரவற்றோரை மீட்கும் பணிக்காக இதுவரை பணம் வேண்டும் என்று யாரிடமும் கேட்டதில்லை என்று சொல்லும் மனிஷா, தேவையான உதவிகள் கேட்காமலேயே உடனுக்குடன் கிடைத்து விடுவதாகச் சொல்கிறார். ‘குரல் தேடல் பயணம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார். சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களைத் தொகுப்பதும், அவர்களைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதும் இந்த இயக்கத்தின் நோக்கம்.

இதற்காக மாநிலம் முழுவதும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பணியாற்றிவருகின்றனர். “ஆதரவற்றவர்களை ஏளனம் செய்வதையும் அருவருப்பாய்ப் பார்ப்பதையும் கைவிட வேண்டும். அவர்களின் வலியை உணராவிட்டால்கூடப் பரவாயில்லை. ஒரு சிரிப்பை மட்டுமாவது அவர்களுக்குக் கொடுங்கள். குடும்பம், குழந்தை போன்ற நம் உறவைத் தாண்டி பிறரையும் நேசிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். சக மனிதர்களிடம் நம் காட்டும் அன்பு பல மாற்றங்களை ஏற்படுத்தும்” என்று சொல்கிறார் மனிஷா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

உலகம்

20 mins ago

வணிகம்

37 mins ago

சினிமா

59 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

மேலும்