பெண்கள் 360: விமானியான இளவரசி

By செய்திப்பிரிவு

தொகுப்பு: ரேணுகா

மைசூரு: முதல் இஸ்லாமியப் பெண் மேயர்

அரண்மனைகளின் நகரம் என்றழைக்கப்படும் மைசூரு மாநகருக்கு முதன்முறையாக இஸ்லாமியப் பெண் ஒருவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜனதாதளக் கட்சியைச் சேர்ந்த தஸ்நீமா (34), மைசூரு மாநகரின் 22-ம் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநகராட்சி உறுப்பினராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட தஸ்நீமா இம்முறை அவர் சேர்ந்த கட்சியின் சார்பில் மேயர் பதவிக்குப் போட்டியிட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக உறுப்பினர் கீதா யோகநந்தாவை 24 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். மைசூருவில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மேயராகப் பதவி வகித்திருக்கின்றனர். ஆனால், இஸ்லாமிய சமூகத்திலிருந்து மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இளங்கலைப் பட்டதாரியான தஸ்நீமா மைசூரு நகரத்தைத் தூய்மையானதாக மாற்றுவதே தன் முதல் பணி என அறிவித்துள்ளார். இவருக்கு முன்பு 1996-ல் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஆரிப் ஹூசைன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆயூப் கான் ஆகியோர் மேயராகப் பதவி வகித்துள்ளனர்.

விமானியான இளவரசி

ஜோர்டான் நாட்டின் இளவரசி சல்மா அந்நாட்டின் முதல் பெண் விமானியாகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஜோர்டான் நாட்டில் அரசாட்சி நடைபெறுகிறது. இளவரசர் இரண்டாம் அப்துல்லாவின் மூன்றாம் மகளான 19 வயது சல்மா பின்ட் அப்துல்லா, அந்நாட்டின் ராயல் விமானப் பயிற்சி மையத்தில் விமானப் பயிற்சிப் படிப்பை 2019 நவம்பர் மாதம் நிறைவுசெய்தார். விமானப் பயிற்சி முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா சில நாட்களுக்கு முன்பு ஹுசைனியா அரண்மனையில் நடைபெற்றது. பயிற்சி நிறைவு விழாவில் பதக்கத்தைத் தன்னுடைய தந்தையும் விமானப் படைப்பிரிவின் கமாண்டருமான மன்னர் இரண்டாம் அப்துல்லாவிடமிருந்து பெற்றுக்கொண்டார் சல்மா. “ஒரு நாட்டின் ராணி என்பவர் அரியாசனத்தில் மட்டும் அமராமல் ஆகாயத்திலும் பறந்து மற்ற பெண்களுக்கு முன்னுதாரனமாக இருக்க வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டேன்” எனக் கூறியுள்ளார் சல்மா.

விண்வெளி செல்லும் ‘வியோம் மித்ரா’

விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உருவாக்கியுள்ள ‘வியோம் மித்ரா’ என்ற மனித உருவம்கொண்ட பெண் ரோபாட், சோதனை முறையில் விண்வெளிக்குச் செல்லவுள்ளது.

2020 டிசம்பர் அல்லது 2021 ஜூன் மாதத்துக்குள் ஆளில்லா விண்கலத்தின் மூலம் வியோம் மித்ரா ரோபாட்டை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. விண்வெளி வீரர்களுக்கு முன்பாக விண்ணுக்குச் செல்லும் வியோம் மித்ரா, அங்கே விண்கலத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதுடன், ஆராய்ச்சியாளர்களுடனும் உரையாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்தின் அங்கமாக உருவாக்கப்பட்டுள்ள வியோம் மித்ரா, பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதிகரிக்கும் குழந்தைகள் மீதான வன்முறை

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குழந்தைகள் மீதான தாக்குதல் 250 சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தைகள் உரிமை மற்றும் நீங்கள் (CRY) அமைப்பு, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல் இரண்டும் வெளியிட்ட தகவல்மூலம் இது தெரியவந்துள்ளது. இவற்றில் 49 சதவீதக் குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பதிவுசெய்யும் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டில் மட்டும் 4,155 குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சிறு குழந்தைகள் மீது வன்முறைகள் நடக்கும் முதல் ஐந்து மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கையில் அரசும் சமூகமும் இணைந்து செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மதநல்லிணக்கத்துக்குச் சான்று

மதங்களின் பெயரால் மக்கள் பிரிந்துநின்றாலும் மனங்களால் மதங்களை இணைக்க முடியும் என்பதற்குச் சான்றாக இருக்கிறது கேரளத்தில் நடந்து திருமண நிகழ்வு.

ஆலப்புழையைச் சேர்ந்த அஞ்சுவுடைய தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். போதிய பொருளாதார வசதி இல்லாததால் மகளின் திருமணத்தை நடத்த முடியாமல் தவித்திருக்கிறார் அஞ்சுவின் அம்மா பிந்து. பலரிடம் உதவி கேட்டவர் இறுதியாக சேரவல்லி பள்ளிவாசலின் கதவைத் தட்டினார். அஞ்சுவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜமாத் குழுவினர், அஞ்சுவுக்குப் பார்த்திருந்த மாப்பிள்ளை சரத் என்பவருடன் தங்கள் ஜமாத்திலேயே திருமணம் செய்துவைக்க முடிவுசெய்தனர். அதன்படி இஸ்லாமிய பள்ளிவாசலில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்வை அறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளத்தின் ஒற்றுமைக்கு இதுவே சான்று” என்று ட்வீட் செய்திருக்கிறார். சமூகவலைத்தளத்தில் அஞ்சு - சரத் தம்பதியின் திருமண ஒளிப்படம் வைரலானது. திருமணச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்ட சேரவல்லி ஜமாத் குழுவினர், திருமணத்தில் கலந்துகொண்ட ஆயிரம் பேருக்கு விருந்து வழங்கியதுடன் மணமகளுக்குப் பத்து சவரன் நகையும் ரூ.2 லட்சம் ரொக்கத்தையும் பரிசாக வழங்கினார்கள். மதங்களைக் கடந்த ஒற்றுமைக்குச் சான்றாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

7 mins ago

இந்தியா

46 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்