இனி எல்லாம் நலமே 35: தழும்பில்லாத அறுவை சிகிச்சை

By அமுதா ஹரி

முன்பெல்லாம் பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்பு களில் பிரச்சினை ஏற்பட்டால் சில நேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும். சினைப்பை, சினைக்குழல், கருப்பை போன்றவற்றில் அறுவை சிகிச்சை என்றால் வயிற்றைக் கிழித்துச் செய்வார்கள். ஆனால், இப்போது பல்வேறு நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.
எந்தப் பிரச்சினைக்கு எது தீர்வு என்பதை மருத்துவர்தான் முடிவு செய்ய இயலும். ஆனாலும், இவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது மருத்துவரிடம் கலந்தாலோசிக்க உதவும். லேப்ரோஸ்கோபி என்பது பெண்களின் பிரச்சினைகளுக்கு ஒரு பெரிய ஆறுதல் என்றே சொல்லலாம்.

லேப்ரோஸ்கோபி என்றால் என்ன?

ஒரு நுண் துளையிட்டு அதன் மூலம் கேமராவை உட்செலுத்தி சிகிச்சை அளித்தல். தொப்புளுக்கு அருகே, தேவைப்பட்டால் மேலும் இரண்டொரு துளைகள் இட்டு அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்யத் தேவைப்படும் கருவிகளை உட்செலுத்தி அறுவை சிகிச்சை செய்வார்கள். சினைப்பையில் கட்டி இருந்தால் இந்த முறையில் அதை வெளியே எடுத்துவிட முடியும்.

திருமணமாகாத பெண்ணுக்கு இப்படியொரு கட்டியை அகற்ற வேண்டியிருக்கும்போது, நவீன மருத்துவம் வளர்ந்திராத நிலையில் அறுவை சிகிச்சை செய்தால் அந்த இடத்தில் தையல்போட்ட வடு இருக்கும். இது பெண்களுக்கு அழகு சார்ந்த பிரச்சினையாகவும் மாறிவிடுகிறது. ஆனால், நவீன மருத்துவம் இதற்குத் தீர்வாக தந்திருப்பதுதான் லேப்ரோஸ்கோபி.

சில நேரம் சினை முட்டைப் பகுதி தனக்குத்தானே சுற்றிக் கொண்டு, ரத்த ஓட்டத்தைச் சீரற்றதாக்கும். இதனால் சினை முட்டைப் பகுதிகள் பிரச்சினைக்கு உரியதாக மாறும். இதற்கும் லேப்ரோஸ்கோபி முறை சிகிச்சை சிறந்த தீர்வு. இதேபோல் ஒரு பெண்ணுக்குத் திருமணமாகிப் பல மாதங்கள் கழித்தும் குழந்தையில்லை என்றால், கருப்பை, கருக்குழாய் ஆகியவற்றில் ஏதேனும் சிக்கலா, சினைமுட்டைகளில் நீர்க்கட்டிகள் இருக்கின் றனவா என்பதை லேப்ரோஸ்கோபி மூலம் துல்லியமாக அறிய முடியும்.

வலியில்லை கசிவில்லை

ஒருவேளை கருப்பையில் கட்டிகள் வந்திருந்தால் அவை பெரிதாவதற்கு முன்பே அவற்றையும் அறுவை சிகிச்சை இல்லாமல் லேப்ரோஸ்கோபி மூலம் அகற்றிவிட முடியும். ஒரு துளை மூலம் உட்செலுத்தப்படும் லேப்ரோஸ்கோபி கருவி மூலம் எப்படிப் பெரிய கட்டியை எடுக்க முடியும் என்று யோசிக்கலாம். ஆனால், சில கருவிகளைப் பயன்படுத்திக் கட்டிகளை உடைத்து, அவற்றை எளிதாக உறிஞ்சி எடுத்துவிடுவார்கள். எனவே, பெரிய கட்டிகளைக்கூட அதிகமான வடு, ரத்தக் கசிவு, வலி இல்லாமல் அகற்றுவதுடன் அறுவை சிகிச்சைக்குப் பிறகான நோய்த்தொற்று ஏதும் வராமலும் தவிர்க்கலாம்.

சிலருக்கு அதிகமான உதிரப்போக்கால், கருப்பையை அகற்ற வேண்டிய சூழல் வரலாம். Total Laparoscopic Hysterectomy என்ற முறையில் சின்ன துளைகள் மூலமாக, பெரிய அறுவை சிகிச்சையின்றிக் கருப்பையை அகற்ற இயலும். லேப்ரோஸ்கோபி சிகிச்சை முறையில் வடுக்களும் தழும்புகளும் குறைவாக இருக்கும். பெரிய அளவில் வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்யாததால் வலியும் ரத்தக் கசிவும் குறைவாக இருக்கும். பின்னாளில் வரக்கூடிய குடலிறக்கம் போன்ற பிரச்சினைகள் வராது.

ஹிஸ்டரோஸ்கோபி

கருப்பையின் வாயின் உள்ளே கேமராவைச் செலுத்தி, கருப்பையின் உள்ளே இருக்கும் பிரச்சினைகளையும் கருக்குழாய்களின் ஆரம்பப் பகுதியையும் பார்க்கக்கூடிய கருவிதான் ஹிஸ்டரோஸ்கோபி. சிலருக்குக் கருப்பையில் POLYPS என்று சொல்லப்படுகிற பவள மொட்டுகள் மாதிரியான சதை வளர்ச்சி பிரச்சினை இருக்கும்போது ஹிஸ்டரோஸ்கோபி மூலம், கருப்பையின் உள்ளே இருக்கும் பவள மொட்டுகளை அகற்றுவார்கள்.

உள்ளே சவ்வு ஒட்டிக்கொண்டிருந்தால் அதையும் அகற்றுவார்கள். கருப்பையில் கதவு மாதிரியான அமைப்பு (Septum) இருந்தால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும். அப்படியான septum என்ற தடுப்புப் பிரிவை லேப்ரோஸ்கோபியில் உள்ள கேமராவையும் பிற கருவிகளையும் பயன்படுத்திக் கரைத்துவிட முடியும்.

திருமணமாகாத பெண்ணுக்குக் கருப்பை வாய் கட்டிகள் இருக்கும்போது அறுவை சிகிச்சை முறையைவிட Magnetic Resonance Guided Focused Ultrasound (MRGFU) என்ற முறை நல்லது. இது MRI மாதிரியான சிகிச்சை முறை. இந்த முறையில் கருப்பையின் கட்டிகள் சுருக்கப்படும். அவற்றை முழுமையாக நீக்க முடியாது. கர்ப்பப்பை வாயில் 7 செ.மீ. அளவுக்குக் கட்டி இருந்தால் அதை அரை செ.மீ. அளவுக்குக் குறைத்துவிட முடியும். கருப்பையை அகற்ற வேண்டிய சூழலை இது தவிர்க்கிறது.

இது அறுவை சிகிச்சை அல்ல. இதில் ரத்தக் கசிவும் கிடையாது. சிக்கல்கள் அதிகம் இல்லாதது. முக்கியமாக, திருமணம் ஆகாத பெண்களுக்குக் கருப்பையில் கட்டிகள் வந்தால் இந்த மாதிரியான நவீன சிகிச்சை முறையைப் பின்பற்றலாம். இதில் ஆதாயங்கள் இருந்தாலும், கட்டி மீண்டும் வளர்வதற்கான சாத்தியமும் உள்ளது. ஆனாலும், இந்த முறையைக் கையாள்வதற்குக் காரணம், அந்த நேரத்தில் அவர்களுக்குத் தலையாய பிரச்சினையாக இருப்பதைச் சரிசெய்வது மட்டுமே.

அனைத்துக்கும் ஏற்றதல்ல

லேப்ரோஸ்கோபி, ஹிஸ்டரோஸ்கோபி, MRGFU ஆகிய நவீன சிகிச்சை முறைகளை உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பயன்படுத்த முடியாது. மார்பகங்களில் கட்டி இருந்த ஒரு பெண் லேப்ரோஸ்கோபி மூலம் சிகிச்சை அளிக்க முடியாதா என்று கேட்டார். வயிற்றுக்குள் உள்ள பிரச்சினைகளுக்குத்தான் லேப்ரோஸ்கோபி உதவும்.
சிலருக்கு அதிகமான உதிரப்போக்கு இருக்கும். புற்றுநோயும் இல்லை; கட்டிகளும் இல்லை, வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால் உதிரப்போக்கை நிறுத்த பலூன் மாதிரி ஒன்றை உள்ளே வைப்பார்கள். அது விரிந்து, சவ்வில் போய் ஒட்டும்.

அப்போது வெப்பத்தைச் செலுத்துவார்கள். இந்த முறைக்குப் பெயர் Thermal ablation of endometrium. ஒரு பெண்ணுக்குக் கருப்பையில் பிரச்சினை ஏற்படும்போது, அதை அகற்றாமலும் அதேநேரம் உதிரப்போக்கைச் சரிசெய்யவும் கடைப்பிடிக்கப்படுகிற முறை இது. இந்த முறையில் பாதிப்புகள் இல்லை என்றாலும் கருப்பையில் கட்டிகள் இருப்பவர்களுக்கோ புற்றுநோயின் தொடக்க கட்டத்தில் இருப்பவர்களுக்கோ Polyps இருப்பவர்களுக்கோ இதைப் பயன்படுத்த முடியாது.

(நலம் நாடுவோம்)
கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.
தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்