விடைபெறும் 2019: உலுக்கிய நிகழ்வுகள்

By செய்திப்பிரிவு

தொகுப்பு: க்ருஷ்ணி

திரும்பும் திசையெல்லாம் தொடரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அவர்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. எதிர்ப்படும் சோதனைகளைக் கடந்துதான் அவர்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. அந்த வகையில் 2019-ல் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த சம்பவங்கள் சிலவற்றின் தொகுப்பு:

மாதவிடாய் மரணம்

இப்போதெல்லாம் யாருங்க சாதி பார்க்குறாங்க என்ற ஏமாற்று வார்த்தைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாதது மாதவிடாய் நாட்களில் பெண்களை ஒதுக்கிவைப்பதில்லை என்பதும். மாதவிடாய் நாட்களில் பெண்களைத் தீட்டாகப் பார்க்கும் வழக்கம் பலரது வீடுகளில் தொடர்ந்தாலும் நேபாளத்தில் அது ‘சாவ்படி’ என்ற சடங்காகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

அந்த நாட்களில் அவர்கள் தனிக் குடிசையிலோ கொட்டிலிலோ தங்க வேண்டும். இந்த வழக்கத்துக்கு நேபாள அரசு 2017-ல் தடை விதித்திருந்த போதும் 2019 பிப்ரவரி மாதம் பார்வதி (21) என்பவர் தனிக் குடிசையில் தங்கவைக்கப்பட்டார். இரவில் குளிர் தாங்காமல் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்துள்ளார். அப்போது ஏற்பட்ட புகையால் மூச்சுமுட்டி இறந்துவிட்டார்.

ஆடைதான் அடையாளமா?

அரசு அலுவலகங்களின் நல்லொழுக்கத்தைப் பாதிக்காத வகையில் பெண் ஊழியர்கள் முறையான ஆடைகளை அணிய வேண்டும் எனத் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விடுத்த அறிக்கை விவாதத்துக்கு ஆளானது. ஊழியர்களின் நல்லொழுக்கம் ஆடையில்தான் உள்ளதா எனக் கேட்ட பெண்ணியவாதிகள், சுடிதார் அல்லது குர்தாவின் மேல் துப்பட்டா அணியாமல் செல்லும் ஊழியர்கள் ஒழுக்கம் கெட்டவர்களா எனவும் கேள்வியெழுப்பினார்கள்.

பெண் குழந்தைகளே பிறக்காத கிராமங்கள்

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியைச் சுற்றியுள்ள 132 கிராமங்களில் 2019 ஜூலை மாத நிலவரப்படி கடந்த மூன்று மாதங்களில் பிறந்த 216 குழந்தைகளில் ஒன்றுகூடப் பெண் குழந்தையில்லை. ‘பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக ஊக்குவித்துவரும் நிலையில் ஒரு மாநிலத்தில் உள்ள 132 கிராமங்களில் மூன்று மாதங்களாக ஒரு பெண் குழந்தைகூடப் பிறக்கவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மருத்துவத்தில் கரும்புள்ளி

நிறைமாதக் கர்ப்பிணியான பொம்மி என்பவர் மார்ச் மாதம் கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கே மருத்துவர்கள் பணியில் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்த்ததில் குழந்தையின் தலை மட்டும் துண்டாகி வெளியே வந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் பொம்மியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தையின் உடல் எடுக்கப்பட்டது. மருத்துவ வசதியும் தொழில்நுட்பமும் முன்னேறிவரும் இந்த நாளில் பிரசவத்தின்போது இப்படியொரு சம்பவம் நிகழ்ந்தது வேதனை மட்டுமல்ல; அவமானமும்தான்.

செல்போனுக்குத் தடை

குஜராத்தில் உள்ள தாக்கூர் சமூக மக்கள், திருமணமாகாத பெண்கள் செல்போனைப் பயன்படுத்த தடைவிதித்தனர். இவர்கள் வாழும் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்தத் தடை அறிவிக்கப்பட்டது. தடையை மீறி செல்போன் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய்வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்தனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாலியல் வன்முறை

பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்படுவது தொடர்கதையாக இருக்கும் நிலையில் பொள்ளாச்சியில் பெண்கள் பலரை வீடியோ எடுத்துவைத்து அவர்களை மிரட்டி பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்திப் பணம் பறித்த சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகிய நால்வர் குறித்த செய்தி வெளியானபோது மாநிலமே அதிர்ந்தது.

இந்த வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுமி, மார்ச் மாதம் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், தெலங்கானாவைச் சேர்ந்த 26 வயது கால்நடை மருத்துவர், ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுப் பெண் ஆகியோரும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். இந்தப் பட்டியல் இத்துடன் முடியவில்லை என்பதே பெண்களை இந்தச் சமூகம் எப்படி நடத்துகிறது என்பதற்கான அடையாளம்.

குடியால் பறிபோன உயிர்

கோவையைச் சேர்ந்த ஷோபனா தன் மகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. ஷோபனா சம்பவ இடத்திலேயே இறந்துவிட அவருடைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனைக்கட்டி - தடாகத்துக்கு இடைப்பட்ட சாலையில் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடையால் அடிக்கடி விபத்து நிகழ்வதாகவும் அதனால், கடையை மூடும்படி வலியுறுத்தியும் ஷோபனாவின் கணவர் மருத்துவர் ரமேஷ் தன் மனைவியின் சடலத்துடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உயிர் குடிக்கும் மதுவின் தீவிரத்தை ஷோபனாவின் மரணம் உணர்த்தும் அதே வேளையில் சாலைகள்கூடப் பெண்களுக்குப் பாதுகாப்பானவையல்ல என்பதை பேனர் சரிந்து விழுந்ததால் மரணமடைந்த சென்னையைச் சேர்ந்த சுபயின் இழப்பு உணர்த்துகிறது.

பெண்தான் பணயப் பொருளா?

விருத்தாசலத்தைச் சேர்ந்த கொழஞ்சி என்பவர் தன் மகளைக் காதலித்து மணந்தவருடைய அம்மா செல்வியை மின்விளக்குக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் பலரையும் உலுக்கியது. செல்வியின் கணவர் இறந்து பத்து ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இரண்டு மகள்களையும் ஒரு மகனையும் செல்விதான் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். செல்வியை அவமானப் படுத்திக் கொடுமைப்படுத்திய கொழஞ்சியின் செயல் ஆணாதிக்கத்தின் உச்சகட்டம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்