முகங்கள்: பயனுள்ள செலவு

By செய்திப்பிரிவு

பாடப் புத்தகங்களைப் படிப்பதற்கே நேரம் போதாத குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை எப்படி ஏற்படுத்த முடியும் எனச் சலித்துக்கொள்கிறவர்களுக்கு மத்தியில், பாதை போட்டுத் தந்தால்தானே குழந்தைகள் பயணம் செய்ய முடியும் எனக் கேட்கிறார் ஜாஸ்மின். கேள்வியோடு நின்றுவிடாமல் அதற்கு விடையாக அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில் வகுப்பறை நூலகம் அமைத்துத் தருகிறார்.

நிலை உயர உயர புறப்பட்ட இடத்தை மறந்துவிடுவது பலரது இயல்பு. ஆனால், ஜாஸ்மின் அதிலிருந்தும் வேறுபட்டு நிற்கிறார். மதுரை ஆத்திக்குளத்தைச் சேர்ந்த இவர் தற்போது சார்ஜாவில் வசித்துவருகிறார். அங்கே ‘சார்ஜா கிரீன் குளோப்’ என்ற நிறுவனத்தை நடத்திவரும் இவர், வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தைச் சொத்தாக மாற்றித் தான் மட்டும் முன்னேற நினைக்கவில்லை.

விடுமுறையில் மதுரைக்கு வரும்போதெல்லாம் மதுரை ‘நூல்வனம்’ என்ற அமைப்பின் மூலம் மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நூலகம் அமைத்துக் கொடுப்பது, கல்வி உபகரணங்கள் வழங்குவது, ஏழைக் குழந்தைகள் கல்விக்கு உதவுவது எனப் பலருக்கும் பயனுள்ள முறையில் தன் உழைப்பின் பலனைப் பகிர்ந்தளிக்கிறார். இவை தவிர ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்குத் தன்னால் முடிந்த உதவியைச் செய்கிறார்.

வாசிப்பை வளர்ப்போம்

கடந்த ஆண்டு விடுமுறையில் மதுரைக்கு வந்தபோது மதுரை பொன்முடியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை வாங்கிக் கொடுத்து நூலகம் அமைக்க உதவினார். திருஞானம் தொடக்கப்பள்ளிக்கு வகுப்பறை நூலகம் அமைத்துக் கொடுத்தார். இந்த ஆண்டு மதுரை வந்த ஜாஸ்மின், மதுரை கைலாசபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, பைக்காரா மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளுக்கு வகுப்பறை நூலகம் அமைத்துக் கொடுத்துள்ளார்.

சார்ஜாவிலும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். இதற்காக சார்ஜா அரசு இவருக்கு விருது வழங்கிக் கவுரவித்துள்ளது. ‘‘மதுரை ‘நூல் வனம்’ என்ற அமைப்பினர், அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்க நன்கொடையாளர்கள் உதவியுடன் வகுப்பறை நூலகங்கள் அமைத்துக் கொடுப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டேன். விடுமுறையில் ஊருக்கு வரும்போது இந்த அமைப்பினரின் வழிகாட்டுதலோடு பள்ளிகளில் நூலகங்களை அமைக்க உதவுகிறேன்.

புத்தகங்கள் அறிவைத் திறக்கும் ஞான ஊற்றுகள். புத்தகங்கள் சிறந்த நண்பர்கள். இப்படியான புத்தகங்கள் குழந்தைகளுக்குக் கிடைப்பதற்குக் காலம் தாழ்த்தக் கூடாது. குழந்தைப் பருவத்திலேயே வாசிப்புப் பழக்கம் உருவானால், பிற்காலத்தில் அவர்கள் கல்வியில் மட்டுமில்லாமல் வாழ்க்கையிலும் அறிவிலும் மேம்பட்டவர்களாக மாறுவார்கள். காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் புத்தகங்கள் படிப்பதை நேசித்தனர். அதனால், குழந்தைகள் புத்தகங்களை நேசிக்கவும் வாசிக்கவும் பெற்றோரும் ஆசிரியரும் கற்றுக்கொடுக்க வேண்டும்” என்கிறார் ஜாஸ்மின்.

வழிநடத்தும் திசைகாட்டி

‘நூல் வனம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் கூறுகையில், “புத்தகங்கள் கற்பனை வளத்தைப் பெருக்குபவை. குழந்தைப் பருவத்திலிருந்தே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார். அதற்கு உதாரணமாக ஒரு கதையையும் அவர் சொன்னார். “கோபுரத்தின் உச்சியை யார் முதலில் தொடுவது எனத் தவளைகளுக்கு இடையே ஓட்டப் பந்தயம் நடந்தது. போட்டியைக் காணவந்த அனைவரும் தவளைகளால் கோபுரத்தைத் தொட முடியாது என அவநம்பிக்கையை ஏற்படுத்தினர். தவளைகள் பல இதைக் கேட்டுத் தாழ்வு மனப்பான்மையோடு போட்டியிலிருந்து விலகின.

ஆனால், ஒரு தவளை மட்டும் எதையும் பொருட்படுத்தாமல் உச்சியைத் தொட்டது. ஏனெனில், அதற்குக் காது கேட்காது. ஒவ்வொருவரிடமும் தனித்திறமை உள்ளது. நம்பிக்கையுடன் செயல்பட்டால் உச்சத்தைத் தொடலாம். இப்படிப்பட்ட கதைகளை வாசிப்பதன் மூலம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. யார் சொல்வதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அறிவின்வழி அது அவர்களை நடத்தும். ஜாஸ்மின் போன்றவர்களின் உதவியுடன் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் நூலகங்கள் அமைப்பது எங்கள் நோக்கம்’’ என்றார்.

- ஒய். ஆண்டனி செல்வராஜ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 secs ago

தமிழகம்

7 mins ago

க்ரைம்

25 mins ago

சுற்றுச்சூழல்

31 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்