பெரியார் பிறந்த நாள் செப்.17: பெண்களுக்காக ஆண்கள் பேசத் தேவையில்லை

By பிருந்தா சீனிவாசன்

பெரியார் பிறந்தநாள்:செப்டம்பர் 17

பிறந்தநாள், நினைவுநாள் போன்ற நாட்களில் ஆண்டுக்கொரு முறை சடங்குக்காக மட்டும் நினைவுகூரப்பட வேண்டியவர் அல்ல பெரியார். ஒவ்வொரு நாளும் நம் ஒவ்வொரு செயலிலும் பெரியார் நமக்குத் தேவைப்படுகிறார். காரணம், சாதிய ஒடுக்குமுறைகளும் ஆணாதிக்கமும் மேலோங்கியிருந்த காலத்திலேயே பெண்ணுரிமையைப் பேசியவர் அவர்.

அறிவிலும் சிந்தனையிலும் நாம் முன்னேறிவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலேயே பெண்ணுரிமை குறித்துப் பேசுவது பாவச்செயல் போல் கருதப்படுகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமைச் சிந்தனையைப் பரப்பியதாலேயே அவர் பெரியாராக உயர்ந்துநிற்கிறார்.

பெண்களுக்கும் எதிரி

பண்பாடு, கலாச்சாரம் போன்றவை பெண்களை எப்படி காலங்கலாமாக அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன என்பதைப் பொதுவெளியில் போட்டுடைத்தவர் அவர். அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பின. ஆனால், எதைக் கண்டும் சளைக்காமல் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார். ஆண்களைச் சாராமல் தனித்து வாழும் உறுதி பெண்களுக்கு இருக்கையில் ஏன் தேவையில்லாத சங்கிலிகளைப் பூட்டிக்கொள்ள வேண்டும் என்ற அவரது கேள்வி, ஏராளமான பெண்களை பெண்ணியத்தை நோக்கி நகர்த்தியது.

குடும்ப அமைப்பையும் அதில் மலிந்து கிடக்கிற பிற்போக்குத்தனங்களையும் மூடப்பழக்க வழக்கங்களையும் விமர்சித்தார். ஆணுக்கு அடங்கி நடப்பதுதான் பெண்ணுக்கு அழகு என்று போதிக்கப்பட்டுவந்த பெண்கள் மத்தியில் நின்றுகொண்டு, ஆண்களால் செய்யக்கூடிய அனைத்தையும் பெண்களாலும் செய்ய முடியும் என்று சொன்னார். அந்த வகையில் ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட ஆண்களுக்கு மட்டுமல்ல; பெண்களுக்குமே பெரியார் எதிரியானார்.

அரசியலைக் கைப்பற்ற வேண்டும்

‘இளம் வயது விவாக விலக்கு மசோதா’ குறித்து 1928-ல் தேசிய அளவில் விவாதம் நடத்தப்பட்டபோது அதை எதிர்த்துக் குரல்கொடுத்த தமிழகப் பிரதிநிதிகளின் செயலைக் கண்டித்து ‘குடி அரசு’ இதழில் எழுதினார் பெரியார். குறிப்பாக, “பால்ய விவாகம் இல்லாவிட்டால் உண்மையான கற்பு என்பது சாத்தியமில்லை. புருஷர்களுக்குச் சிறைத் தண்டனை அளித்துவிடுவதால் பெண்களின் நடத்தை அதிகக் கேவலமாகிவிடும்” என்று எம்.கே. ஆச்சாரியா பேசியதைச் சுட்டிக்காட்டி, ‘இது மனிதத் தன்மைக்கு ஏற்றதாகுமா? சகோதரிகளுக்குச் செய்யும் நியாயம் ஆகுமா?’ என எழுதியதுடன், தேசியம் என்று சொல்லி ஏமாற்றப் பார்க்கும் வீணர்களின் வலையில் இருந்து தப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் எழுதினார். உண்மையான சீர்திருத்தத்துக்கும் சுயமரியாதைக்கும் ஏற்ற கொள்கைகளில் ஈடுபட்டு, அரசியலையும் சமூக இயலையும் கைப்பற்றி அதைத் தக்க வழியில் திருப்ப வேண்டியது அவசியம் என்றார்.

மாற்றம் தரும் மறுமணம்

கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கம் ஒழிக்கப்பட்டுவிட்ட நாட்டில் ஏன் இன்னும் விதவை மறுமணம் மறுக்கப்படுகிறது என்ற கேள்வி பெரியாருக்கு இருந்தது. கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்வது கற்புக்குப் பங்கம் விளைவிப்பது என்ற கருத்தை அவர் மறுத்தார். இதைப் பேச்சுடனும் எழுத்துடனும் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் செயல்படுத்தியும் இருப்பதாக 1926-ல் ‘குடி அரசு’ கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.

திருமணம் செய்துகொடுத்த தன் தங்கையின் பத்து வயது மகள் 60-வது நாளில் அவளுடைய 13 வயது கணவனை இழந்துவிடுகிறாள். அந்தப் பெண் ஓரளவு பக்குவப்பட்டதும் தன் மைத்துனரின் துணையோடு மறுமணம் செய்துவைத்ததையும் அதனால் குடும்பத்தினரின் கோபத்துக்கு ஆளானதையும் அந்தக் கட்டுரையில் பெரியார் குறிப்பிட்டிருக்கிறார். மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்துகொள்வது வழக்கமாகிவிட்ட நம் சமூகத்தில் கைம்பெண் மறுமணம் என்பது இன்றும் கானல்நீராகத்தான் இருக்கிறது.

சொத்துரிமை அவசியம்

பெண்களுக்குச் சம உரிமை வேண்டும் என்றவர் சொத்துரிமையை ஏன் பெண்கள் கைகொள்ளவில்லை என்று கேட்டார். சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்வதாலேயே ஒருவர் பகுத்தறிவாளர் ஆகிவிட முடியாது என்று தன் கழகத்தாரிடமே சொன்ன அவர், “அதிக நகை போடாமலும் தாலி கட்டாமலும் மூடச் சடங்குகள் இல்லாமலும் நடைபெற்ற திருமணம் சுயமரியாதைத் திருமணமாகிவிடாது.

பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்குத் தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். புருஷர்களைப் போலவே பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்கிற கொள்கையை ஏற்காவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடைய வர்களாவார்கள்?” என்று விருதுநகரில் வன்னிய நாடார் இல்லத் திருமணத்தில் 1930-ல் பேசியிருக்கிறார் பெரியார்.

அடிமையல்ல, எஜமானி

வீட்டுவேலை செய்வதுதான் தங்கள் கடமை என்பதைப் பெண்கள் மறந்துவிட்டுப் புருஷனுக்குத் தலைவியாக இருப்பதும் குடும்பத்துக்கு எஜமானியாக இருப்பதும் தங்கள் கடமை என்று நினைத்துச் செயல்பட வேண்டும் என்று சொன்னவர் அவர். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்காமல் தினமுமோ வாரத்துக்கு ஒன்றிரண்டு நாட்களோ பொது இடத்தில் கூடிப் பத்திரிகைகளைப் படிக்க வேண்டும்; படிக்காதவர்களுக்குப் படித்தவர்கள் படித்துக்காட்ட வேண்டும் என்று சொன்னார். பெரியார் இப்படிச் சொல்லி 90 ஆண்டுகள் கடந்த நிலையில் பொதுவெளியில் அச்சமும் தடையும் இன்றி இயங்குவது பெண்களுக்குச் சாத்தியப்பட்டிருக்கிறதா?

பண்டங்களா பெண்கள்?

பெண்கள் தங்களைக் காட்சிப் பொருளாக்கிக்கொள்வதைக் கேள்விக்குள்ளாக்கினார். ‘பெண்களுக்கு மக்கள் மனத்தை ஈர்க்கும்படியான நகை, துணிமணி, ஆபரணம் ஏன் என எந்தப் பெண்ணாவது, பெற்றோராவது, ‘கட்டினவ’ராவது சிந்திக்கிறார்களா? பெண்கள் அஃறினைப் பொருள் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்? தன்னை அலங்கரித்துக்கொண்டு பிறர் கவனத்தைத் தன் மீது திருப்புவது இழிவு என்றும் அநாகரிகம் என்றும் யாருக்கும் தோன்றாததற்குக் காரணம் அவர்கள் போகப் பொருள் என்ற கருத்தேயாகும்’ என்று சொல்லும் பெரியார், “பெண்கள் நகை மாட்டும் ஸ்டேண்டா?” எனக் கேட்கிறார்.

அதற்காக டீசென்ஸி வேண்டாம் எனத் தான் சொல்லவில்லை என்கிறவர், “சுத்தமும் கண்ணுக்கு வெறுப்பில்லாத தன்மையும் ஃபேஷன் அலங்காரத்தால் அல்ல; சாதாரண குறைந்த தன்மையினால் முடியும் என்றும் உணர வேண்டும்” என்று சொல்லி பகுத்தறிவும் சுயமரியாதையுமே பெண்களின் அழகு என்பதை உணர்த்தினார்.
பெண்களை அடிமைப்படுத்தும் சனாதன முறைகளை அடியோடு எதிர்த்தார். கற்பு நிலையைக் கேள்விக்குள்ளாக்கியவர், கற்பு அவசியம் என்றால் பிறப்பால் சமமாக இருக்கும் இருபாலருக்கும் அது வேண்டும்தானே என்றார். குழந்தைகள் பிறப்பது கடவுளின் வரமாகக் கருதப்பட்டுவந்த காலத்தில் கர்ப்பத்தடையைப் பரிந்துரைத்த சான்றோர் அவர்.

ஆண்மையும் பெண்மையும்

ஆண்மை என்பதே கற்பிதம் என்பதை ஆண்கள் உணர்ந்தால்தான் பெண்மை என்பதும் கற்பிதம் என்பதைப் புரிந்துகொள்வார்கள். ‘பெண்கள், ஆண்களுக்கு அடிமைகள் அல்ல; அவர்களும் ஆண்களைப் போலவே சுதந்திரமாக இருக்கத் தகுந்தவர்கள் என்பதை நாம் முதலில் தீர்மானம் செய்துகொள்ள வேண்டும்’ என்று ஆண்களிடம் சொல்கிறார் பெரியார். பெண்மை தழைக்க வேண்டும் என நாம் விரும்பினால் முதலில் ஆண்மை அழிய வேண்டும் என்றவரும் பெரியாரே.

ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளர்வதுடன் பெண்கள் என்றுமே விடுதலை பெற முடியாது என்றார். “எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா?” எனக் கேட்கும் பெரியார், பெண் விடுதலைக்காக ஆண்கள் பேசுவதும் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே என்கிறார்.

ஆணாக இருப்பதால் தான் சொல்வதைக்கூட கேட்கத் தேவையில்லை என்று சொல்லும் அவர், பெண்கள் தங்கள் அறிவு சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்றார். பெண்கள் பகுத்தறிவும் சுயமரியாதையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பது அவர் கண்ட கனவுகளில் ஒன்று. பெரியார் சொன்னதுபோல அதை நிறைவேற்றி உயர்வது பெண்களாகிய நம் கைகளில்தான் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்