குழந்தைகள் நலம்: குழந்தைகள் நலம்துணி டயபர்களுக்கு மாறலாமா?

By செய்திப்பிரிவு

கனி

குழந்தைகளுக்கு டயபர்களைப் பயன்படுத்தலாமா, வேண்டாமா; அவற்றால், குழந்தைகளின் தோலுக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படுகிறது என்பது போன்ற அடிப்படைச் சந்தேகங்களுக்குப் பதில் கிடைக்காமலேதான் வேறு வழியில்லாமல் பெற்றோர் டயபர்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். டயபர்கள் சார்ந்த பெற்றோரின் இந்தப் பயத்தைப் போக்கும்விதமாகச் சூழலுக்குப் பாதிப்பில்லாத துணி டயபர்கள் தற்போது பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.

துணி டயபர்களைப் பற்றி ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த தன் கணவரின் சகோதரியின் மூலம் முதன்முதலில் கேள்விப்பட்டிருக்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்வாதிஸ்ரீ அரவிந்த். உடனடியாக நாமே அவற்றைத் தயாரிக்கலாமே என்ற ஆர்வம் மேலிட, ஒன்றரை ஆண்டுகள் விரிவான ஆய்வு செய்து, துணி டயபர்களைத் தயாரித்து விற்பனை செய்வதற்காக ‘A Toddler Thing’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கிவரும் இந்நிறுவனத்தின் மூலம், குழந்தைகளுக்கான துணி டயபர்கள், இயற்கையான மஸ்லின் பருத்தித் துண்டுகள், விரிப்புகள், ஆடைகள், காலணிகள் போன்ற பல்வேறு பொருட்களைத் தயாரித்து ஆன்லைனில் விற்பனைசெய்துவருகிறார்.

“குழந்தைகளுக்கான பொருட்களைத் தயாரித்து, விற்பதில் இருக்கும் சிக்கல் களையும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியதையும் சொல்லிப் பலரும் என்னைப் பயமுறுத்தினர். ஆனால், குழந்தைகளுக்கும் சூழலுக்கும் பாதுகாப்பான இந்தத் துணி டயபர்களைத் தயாரிப்பது என் மனத்துக்குப் பிடித்திருந்தது. என் குழந்தைக்கு இப்போது 15 மாதங்களாகிறது.

அவளை மனத்தில் வைத்தும் இந்தப் பொருட்களைத் தயாரிப்பதால் இயல்பாகவே கூடுதல் பொறுப்புணர்வோடும் அக்கறையுடனும் செயல்படுகிறேன். துணி டயபர்களைப் பற்றிய விழிப்புணர்வும் பெற்றோர்களிடம் இப்போது அதிகரித்திருப்பது குழந்தைகளுக்கும் சூழலுக்கும் நல்ல விஷயம்” என்கிறார் ஸ்வாதி. தன் உறவினர் அஷ்வந்த் சுரேஷ்பாபுவுடன் இணைந்து இந்நிறுவனத்தை அவர் நடத்திவருகிறார்.

மாற்றாகும் துணி டயப்பர்கள்

பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியப்படும் ‘டிஸ்போஸபிள்’ டயபர்களால் குழந்தைகளின் தோல் பாதிப்படைவது ஒரு பிரச்சினை என்றால், அவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றொரு பெரிய பிரச்சினை. இதற்கு மாற்றாகத்தான் துணி டயபர்கள் வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் இங்கேயும் பிரபலமாகிவருகின்றன. சாதாரண டயபர்களில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் துணி டயபர்களிலும் கிடைக்கும் படிதான் அவை வடிவமைக்கப்படுகின்றன என்கிறார் ஸ்வாதி.

“பிறந்த குழந்தைகள் (3 கிலோ முதல் 7 கிலோ வரை), சற்று ஊட்டத்துடன் கூடிய குழந்தைகள் (5 கிலோ முதல் 18 கிலோ வரை) என இரண்டு அளவுகளில் துணி டயபர்களைத் தயாரிக்கிறோம். அத்துடன், இரவில் பயன்படுத்து வதற்கெனத் தனியான டயபர்களும் இருக்கின்றன. இயற்கையான பருத்தி, நீரை உறிஞ்சும் மைக்ரோஃப்ளீஸ் (MicroFleece) அடுக்குகள், 100 சதவீதம் காற்றோட்டம் இருக்கக்கூடிய பாலியஸ்டர் மேல்துணியை வைத்து இவற்றைத் தயாரிக்கிறோம்.

ஒரு துணி டயபரை 300 தடவை வரை துவைத்துப் பயன்படுத்தலாம்” என்று சொல்கிறார் அவர்.
ரூ. 300 முதல் ரூ. 850 வரையிலான விலையில் துணி டயபர்கள் கிடைக்கின்றன. இந்தத் துணி டயபர்களின் விலை அதிகமாக இருப்பதைப் பற்றிக் கேட்டால், “ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து மூன்று வயதுவரை டயபர்களை பயன்படுத்துகிறோம்.

பிறந்த குழந்தையென்றால் நாளொன்றுக்கு 10 முதல் 15 டயபர்கள் வரை மாற்றுகிறோம். ஒரு சாதாரண டயபரின் விலை ரூ. 10 என்று வைத்தால்கூட, ஓர் ஆண்டுக்கு நாம் டயபர்களுக்கு என்று சுமார் 30,000 ரூபாயைச் செலவழிக்கிறோம். அந்த வகையில் பார்த்தால், துணி டயபர்களின் விலை அதிகம் என்று சொல்ல முடியாது” என்று விளக்குகிறார் ஸ்வாதி.

15 மாதக் குழந்தையுடன் இளம் தொழில் முனைவராக வெற்றிகரமாகச் செயல்பட்டுவரும் ஸ்வாதி, கடந்த ஓர் ஆண்டுக்கு முன்தான் திருப்பூரில் சொந்தமாக ஒரு யூனிட்டைத் தொடங்கி துணி டயபர்களைத் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார். “ஒரு தாயாகக் குழந்தையை விட்டுவிட்டுப் பணிக்குச் செல்வது என்பது தினமும் உணர்வுப் போராட்டமாகத்தான் இருக்கிறது. குடும்பத்தினரின் முழு ஆதரவு இருந்தாலும் இந்த உணர்வு போராட்டத்தைப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிதான் இருக்கிறது. நானும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், குழந்தை வளர்ப்பு, பணி என இரண்டையும் சமநிலையுடன் கையாள்வதில்தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது” என்று உறுதியுடன் சொல்கிறார் ஸ்வாதி.

துணி டயபர்கள் பற்றிய மேலும் அறிய: www.atoddlerthing.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

25 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்