கர்ப்பப்பை வாடகைக்கு!

By வா.ரவிக்குமார்

இந்தியாவில் ஏறக்குறைய 50 கோடி டாலர் பணம் புழங்கும் அளவுக்கு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. செயற்கைக் கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள எவ்வளவோ வாய்ப்பு இருந்தாலும், ஒரு கணவனும் மனைவியும் அவர்களின் விந்தணு, கருமுட்டையைக் கொண்டேதான் தங்கள் குழந்தை உருவாக வேண்டும் என்று நினைப்பார்கள். உலகில் எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும் கருத்தாக இது உள்ளது. அதனால்தான் வாடகைத் தாய்க்கான தேவையும் அதிகமாக இருக்கிறது.

“உலகில் 26 நாடுகளில் வாடகைத் தாய் முறை தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும் இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால் வாடகைத் தாய்மார்கள் இடைத் தரகர்களின் பிடியில் அவதிப்படும் நிலையும் இங்கே அதிகம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இதுபோல் ஏமாற்றப்பட்ட ஒரு சில வாடகைத் தாய்மார்கள் எங்களைச் சந்தித்தனர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் எங்களுக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது” என்கிறார் உலக வாடகைத் தாய்மார்களின் உரிமைகளை முன்னிறுத்தும் நிறுவனத்தின் தலைவர் அ.ஜ.ஹரிஹரன். இவர், இந்தியச் சமுதாய நலவாழ்வு நிறுவனத்தின் நிறுவனர், செயலாளர்.

வாடகைத் தாயின் அவசியம் ஏன்?

தம்பதி இருவரில், ஆணுக்கு விந்தின் நிலை நன்றாக இருக்கும். பெண்ணின் கருமுட்டையோடு இணைவதிலும் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் அந்தக் கருவைத் தாங்கும் திறன் சில பெண்களின் கர்ப்பப்பைக்கு இருக்காது. இந்த இடத்தில்தான் வாடகைத் தாயின் அவசியம் தேவையாகிறது.

இந்திய வாடகைத் தாய்மார்களை ஏன் நாடுகிறார்கள்?

உலகின் பல பகுதிகளில் இருந்தும் தங்களின் சந்ததியைப் பெருக்குவதற்கு இந்தியாவுக்கு வருவதற்குச் சில காரணங்களைச் சொல்கிறார்கள். அதில் முக்கியமானது, வெளிநாடுகளில் வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு ஏறக்குறைய 50 முதல் 60 லட்சம் ரூபாய் செலவு ஆகுமாம். இந்தியாவில் அதிகபட்சமாக 15 முதல் 20 லட்சம்வரை செலவாகிறதாம்.

இந்தியாவில் வாடகைத் தாயாக முன் வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். அதிநவீன மருத்துவ சிகிச்சைகளும், திறன் வாய்ந்த மருத்துவர்களும் இங்கு அதிகம்.

வாடகைத் தாய்க்கான முறையான சட்டங்களே இந்தியாவில் இல்லை. இந்தியன் மெடிக்கல் ரிசர்ச் கவுன்சிலின் (I.C.M.R) வழிகாட்டும் நெறிகளே உள்ளன. உலகம் முழுவதும் இருப்பவர்கள் தங்கள் கருவைத் தாங்க இந்தியக் கர்ப்பப்பைகளைத் தேடிவர இவையே காரணம்.

ஜி-ஸ்மார்ட் உதயம்

“பணம் இருப்பவர்கள் லட்சங்களைச் செலவு செய்து வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுச் சந்தோஷமாக அவர்களின் நாடுகளுக்குத் திரும்புகிறார்கள். மருத்துவமனைகளும் மருத்துவர்களும் அவர்களுக்கு உண்டான பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் கர்ப்பத்தை 10 மாதங்கள் சுமந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் வாடகைத் தாய்க்குக் கிடைக்க வேண்டிய பணம் சரியாகப் போய்ச் சேராமல் கேள்விக் குறியாக வேண்டுமா? இந்த யோசனைதான் நாங்கள் ஜி-ஸ்மார்ட் தொடங்கக் காரணம்” என்று சொல்லும் ஹரிஹரன், ஆண்டுதோறும் மே 31 அன்று வாடகைத் தாய்மார்களின் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

வாடகைத் தாய்க்கான சில உரிமைகளை ஜி-ஸ்மார்ட் வரையறுத்துள்ளது. அவை, வாடகைத் தாய்க்குச் சேர வேண்டிய பணத்தை, மருத்துவமனை, பயனாளிகளான குழந்தையின் பெற்றோர், தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகியவை உறுதி செய்ய வேண்டும்.

பிரசவத்துக்குப் பின்னும் வாடகைத் தாயின் பாதுகாப்பும் பராமரிப்பும் அதற்கான மருத்துவச் செலவுகளையும் பயனாளிகள் ஏற்பதை உறுதி செய்ய வேண்டும்.

என்னதான் பணத்தைப் பெற்றுக்கொண்டு பிரசவித்தாலும் தொப்புள் கொடி உறவு சாதாரணமானதல்ல. பிரசவத்துக்குப் பின் மனதளவில் வாடகைத் தாய்மார்களை ஆற்றுப்படுத்த வேண்டியது அவசியம்.

பிரசவக் காலத்தில் ஆயுள் காப்பீடு அவசியம்.

ஒரு பெண் தன் சம்மதத்தைத் தன் தாய் மொழியில் எழுத்துபூர்வமாக அளித்த பிறகுதான் அவர் வாடகைத் தாயாகி இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

“வாடகைத் தாய்க்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதோடு அவர்களுக்கென்று இருக்கும் சில கடமைகளையும் அவர்களுக்குப் புரியவைக்கிறோம். வாடகைத் தாய், தான் சுமக்கும் குழந்தைக்குச் சட்டப்பூர்வமாக உரிமை கொண்டாட முடியாது. தங்கள் குழந்தையை வயிற்றில் சுமக்கும் வாடகைத் தாயைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். வாடகைத் தாயைத் தங்களின் வீட்டுக்குக் கொண்டுபோய்ப் பிரசவம் முடியும்வரை பார்த்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்” என்ற ஹரிஹரனிடம்,

“வாடகைத் தாயை ஏற்பாடு செய்துவிட்டு, ஏதோ காரணத்தால் தம்பதி திரும்பிவராவிட்டால் வாடகைத் தாயின் நிலை என்னாகும்?” என்றோம்.

“சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானைச் சேர்ந்த ஒரு தம்பதி, அவர்களின் கருவைச் சுமக்க ஒரு வாடகைத் தாயை ஏற்பாடு செய்தனர். குழந்தை பிறந்த நேரத்தில், கருத்து வேறுபாட்டால் அந்தத் தம்பதி பிரிந்துவிட்டனர். அந்தக் குழந்தையை ஏற்க அவர்கள் தயாராக இல்லை. இந்நிலையில் கணவனின் தாயார், உச்ச நீதிமன்றத்தில் அந்தக் குழந்தை தங்கள் குடும்பத்தின் வாரிசு என்று வழக்கு நடத்தினார். இந்த வழக்கின் தீர்ப்பில் இந்தியாவில் வாடகைத் தாயின் மூலம் பிறக்கும் குழந்தை இந்தியக் குடிமகன்தான் என்று கூறி, குழந்தையை வழக்குத் தொடுத்த குழந்தையின் பாட்டியிடம் ஒப்படைத்தனர்” என்றார்.

“வாடகைத் தாயை இந்தியச் சமூகம் குழந்தைப்பேறின்மைக்கான தீர்வாகப் பார்க்காமல் பிரச்சினையின் பகுதியாகவே பார்க்கிறது. இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பேறு அடைபவர்களுக்கான ART என்னும் சட்டம் இன்னும் முழுமையான வரையறைக்குள் வரவில்லை. வாடகைத் தாய்க்கான வயதைப் போலவே, பயனாளிகளாகும் பெற்றோர்களின் வயதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முதுமையின் விளிம்பில் இருப்பவர்களால் அந்தக் குழந்தையை எப்படிப் பராமரிக்க முடியும்? உரிமைகள் காப்பாற்றப்படும் பட்சத்தில், குழந்தைப் பேறு இல்லாத தம்பதிக்கு மருத்துவம் அளிக்கும் கொடையாகத்தான் வாடகைத் தாய் முறையை நான் பார்க்கிறேன்” என்கிறார் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிஸம் கல்லூரியில் உடல் நலத்துறைப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் ஜெயா தர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்