பாரம்பரியம் பேசும் நகைகள்

By மைதிலி

நம்முடைய பாரம்பரியத்தில் நகைகள் என்பது வெறும் அழகுக்கும் அலங்காரத்துக்குமான விஷயம் மட்டுமல்ல. அவை பாரம்பரியத்தையும் வரலாற்றையும் எடுத்துரைக்கும் முக்கிய அம்சங்களாகவே பார்க்கப்படுகின்றன. அதனால்தான், இங்கே தங்க நகைகளுக்கும், வைர நகைகளுக்கும் கலாச்சார மதிப்பு அதிகம். என்னதான் நவீன நகை வடிவமைப்புகள் நாளுக்குநாள் புதிது புதிதாக அறிமுகம் ஆகிக்கொண்டிருந்தாலும், பாரம்பரிய நகை வடிவமைப்புக்கான இடம் மட்டும் அப்படியேதான் இருக்கிறது.

கலாச்சாரமும் பாரம்பரியமும்

இந்திய நகைகளின் வடிவமைப்பு என்பது பழங்காலத்தில் இருந்தே இயற்கையின் தாக்கத்தால்தான் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் பண்டைய நாகரிகங்கள் இதற்குச் சான்றாக விளங்குகின்றன. மலர்கள், இலைகள், கொடிகள் என இயற்கையைத்தான் முதன்முதலில் இந்தியர்கள் அணிகலன்களாகப் பயன்படுத்தினார்கள். உலோகங்கள் உருவான பிறகு, அதிலும் இயற்கையின் வடிவமைப்பை மாதிரியாகக் கொண்டுதான் நகைகளை உருவாக்கினார்கள். காலப்போக்கில், உலோகங்களில் தங்கத்துக்கு என்று தனி இடம் உருவானது. தங்க நகைகள் கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான அம்சமானது.

“நம் வரலாற்றில் நகைகளுக்கும் பெரும்பங்கு இருக்கிறது. ராமாயணத்திலும் சூடாமணிக்கும், கணையாழிக்கும் முக்கியமான இடம் அளித்திருப்பதை வைத்தே இதை நாம் தெரிந்து கொள்ளலாம். நம் மக்கள் நகைகளை அவர்களுடைய பாரம்பரியத்துடனும், கலாச்சாரத்துடனும் எப்போதும் அடையாளப் படுத்திக்கொள்கிறார்கள். அதனால்தான், பாரம்பரியமான வடிவமைப்பில் உருவாகும் நகைகளுக்கு இப்போதும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது” என்கிறார் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் ரமேஷ் கல்யாணராமன்.

இயற்கையின் அழகை எந்தக் காலத்திலும் ரசிக்கலாம். அதனால்தான், இயற்கையை முன்வைக்கும் நகை வடிவமைப்பு இன்றளவும் பெண்களின் தேர்வாக இருக்கிறது. அதற்குச் சிறந்த உதாரணமாக ‘மாங்காய்’ வடிவமைப்பில் உருவாகும் நகைகளை சொல்லாம். மாங்காய் வடிவமைப்பில் இருக்கும் ஆரத்தையும், அட்டிகையையும், கம்மலையும் இன்றைய நவீன பெண்கள் அதிகமாகத் தேர்வுசெய்கின்றனர்.

விழாக்களும் பண்டிகைகளும்

எந்தவொரு விழாவும், பண்டிகையும் நகைகள் இல்லாமல் கொண்டாடப்படுவதில்லை. சுபநிகழ்ச்சிகளுக்கும், பண்டிகைகளுக்கும் நகைகளைப் பரிசளிக்கும் வழக்கம் என்பது நீண்டகாலமாக வழக்கத்தில் இருக்கிறது.

“நம் கலாச்சாரத்தில் பல்வேறு விழாக்களும், பண்டிகைகளும் தொடர்ந்து நடக்கின்றன. அந்த மாதிரி விழாக்களின்போது பாரம்பரிய வடிவமைப்பில் இருக்கும் தங்க நகைகளை அணிவதையே பெண்கள் விரும்புகின்றனர். இந்தப் பாரம்பரிய வடிவமைப்பில் கிடைக்கும் நகைகளை எல்லா வயதினரும் விரும்பி வாங்குகின்றனர். இன்றைய நவீன பெண்களும் பல்வேறு விழாக்களின்போதும், திருமண விழாக்களின்போதும் தங்க ஜிமிக்கிகளையே அணிகின்றனர் என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்” என்கிறார் என்.ஏ.சி ஜுவல்லர்ஸ் இயக்குநர் அனந்த பத்மநாபன்.

நவீனத்தின் முகம்

இப்போதைய நவீன வடிவமைப்பில் உருவாகும் நகைகளிலும் பாரம்பரியமான வடிவமைப்பின் அடிப்படை இருக்கவே செய்கிறது. அதனால்தான் நவீன வடிவமைப்பு நகைகளுக்கும் பலத்த வரவேற்பு இருக்கிறது. வேலைக்குச் செல்லும்போது அணிந்துகொள்வதற்கு ஏற்ற மாதிரி இருக்கும் எடைகுறைவான

நவீன வடிவமைப்பு நகைகளையும் இப்போதைய பெண்கள் தேர்வுசெய்கின்றனர். இந்த நவீன வடிவமைப்பில் தங்கத்துக்கு அடுத்தபடியாக பிளாட்டின நகைகள் வாங்கப்படுகின்றன.

“இப்போது டிரெண்டியான நகைகளையும் பெண்கள் விரும்பி வாங்குகின்றனர். அந்த டிரெண்டியான நகைகளிலும் பாரம்பரிய வடிவமைப்பின் ஃபினிஷிங் இருக்குமாறுதான் பார்த்து வாங்குகின்றனர். அதற்கு நம்முடைய நகை சார்ந்த கலாச்சார விழுமியங்களே காரணமாக இருக்கின்றன” என்கிறார் அனந்த பத்மநாபன்.

இதேமாதிரி, நவீன வடிவமைப்புகளின் எல்லைகளும் விரிவடைந்து கொண்டிருக்கின்றன. ஒருவருடைய டி.என்.ஏ மாதிரியை வைத்து தங்க நகைகளை உருவாக்கும் அளவுக்கு நவீன நகை வடிவமைப்பு சென்றிருக்கிறது.

“இந்த முயற்சிக்கு இளம் தம்பதிகளிடம்தான் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்தோம். அதற்கு மாறாக வயதான தம்பதிகளும் தங்கள் டி.என்.ஏ மாதிரியில் நகைகளை உருவாக்க ஆர்வம் காட்டிவருகின்றனர்” என்கிறார் ரமேஷ் கல்யாணராமன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

9 mins ago

விளையாட்டு

14 mins ago

தமிழகம்

22 mins ago

விளையாட்டு

35 mins ago

தமிழகம்

45 mins ago

சினிமா

49 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வெற்றிக் கொடி

1 hour ago

இந்தியா

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்