கலையும் ஒரு யோகாதான்!

By கனி

இருபது ஆண்டுகளாகக் கைவினைக் கலைத் தயாரிப்புகளை மட்டுமல்லாமல் கைவினைக் கலைஞர்களையும் சேர்த்து உருவாக்கி வருகிறார் மதுரையைச் சேர்ந்த துளசி கண்ணன். அஜந்தா ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ் சென்டர் மூலம் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பொருளாதாரச் சுதந்திரத்துடன் வாழ்வதற்கு உதவியிருக்கிறார் துளசி.

“சின்ன வயதில் அம்மா எம்பிராய்டரி போடுவதைப் பார்த்துதான் கைவினைக் கலையில் ஆர்வம் வந்தது. அந்த ஈடுபாட்டை எந்தக் கட்டத்திலும் இழந்துவிடாமல் பயணித்ததுதான், என்னுடைய தொடர்ச்சியான கலைச் செயல்பாடுகளுக்கான காரணம்” என்கிறார் துளசி.

பேசும் ஓவியங்கள்

தஞ்சாவூர் ஓவியங்களில் ஆரம்பித்து 3டி புடைப்பு ஓவியங்கள்வரை துளசியின் கைவண்ணத்தில் உருவாகின்றன. இவருடைய தஞ்சாவூர் ஓவியங்களுக்காக மதுரை மாவட்ட விருது, கலை மணி விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். அழகான ஓவியங்களைப் படைப்பதுடன் மட்டுமல்லாமல் தன்னிடம் இருக்கும் ஓவியத் திறமையை மற்றவர்களுக்கும் முழு ஈடுபாட்டுடன் கற்றுக் கொடுத்துவருகிறார் துளசி.

“பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று ஓவிய வகுப்புகளை எடுத்துவருகிறேன். ஓவிய ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சிகளையும் அளிக்கிறேன். எனக்குத் தெரிந்த கலையை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்போதுதான் நான் கற்றுக் கொண்ட கலை முழுமையடைவதாக உணர்கிறேன்” என்கிறார் துளசி.

புதுமைப் படைப்புகள்

தஞ்சாவூர் ஓவியங்கள் மட்டுமல்லாமல் கைவினை நகைத் தயாரிப்பு, திருமணங்களில் அளிக்கப்படும் பரிசுகள், ஆராத்தித் தட்டுகள், வீட்டின் உள்அலங்காரத்துக்கு ஏற்ற ஓவியங்கள், புதுமணத் தம்பதிகளின் ஓவியங்கள், பேஷன் ஆடைகளுக்கான ஃபேப்ரிக் ஓவியங்கள் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் துளசி. நகைகளில் பேப்பர் நகைகள், டெரக்கோட்டா நகைகள், சில்க் திரெட் நகைகள், பேஷன் நகைகள் எனப் பல்வேறு நகைகளைத் தயாரித்துவருகிறார்.

கலை தரும் இன்பம்

கைவினைக் கலைப்பொருள் தயாரிப்பில் மனநிம்மதி கிடைப்பதாகச் சொல்கின்றனர் இவரிடம் பயிலும் பெண்கள். மருத்துவர்கள், ஆசிரியர்கள், இல்லத்தரசிகள் எனப் பல தரப்பினரும் இவரிடம் கைவினைக் கலையைக் கற்றுவருகின்றனர். “வீட்டில் பெரும்பாலான நேரத்தைச் சமையலறையிலும், வீட்டுப் பராமரிப்பு வேலைகளிலும் செலவிடும் பெண்கள் ஒருவகை மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் இந்தக் கலைகளை ஈடுபாட்டுடன் கற்றுக்கொள்ளும்போது, அதுவே அவர்களது மனதை ஆசுவாசப்படுத்தும் யோகா மாதிரி இருக்கிறது. இந்தக் கைவினைக் கலையில் முழுமையாக ஈடுபடும் பெண்களின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் கண்கூடாக நான் பார்த்துவருகிறேன்” என்கிறார் துளசி.

எல்லோரும் கலைஞர்கள்தான்

கைவினைக் கலையை யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்று சொல்லும் துளசி, “பொறுமையும், நேரமும் இருந்தால் நிச்சயம் இந்தக் கலையைக் கற்றுக்கொண்டு நிறைய சாதிக்கலாம். இதைக் கற்றுக்கொள்வதற்கு எந்தத் தயக்கமும் தேவையில்லை. ஒரு கைவினை நகைத் தயாரிப்பைக் கற்றுக்கொள்வதற்கு ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் போதும். அதை வைத்துப் பத்தாயிரம் ரூபாய்வரை சம்பாதிக்கலாம். என்னிடம் பகுதி நேரமாக இந்த நகைத் தயாரிப்பைக் கற்றுக்கொள்ளும் கல்லூரி மாணவிகளுக்கு, அது பொருளாதாரச் சுதந்திரத்தை வழங்குகிறது” என்கிறார்.

படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

31 mins ago

சினிமா

52 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்