மரங்களுக்காகப் போராடிய பட்டர்ஃபளை!

By எஸ்.சுஜாதா

உலகில் எத்தனையோ போராட்டங்களைப் பார்த்தி ருக்கிறோம். அவற்றில் ஜுலியா பட்டர்ஃப்ளை ஹில் நடத்திய போராட்டம் மிகவும் வித்தியாசமானது. அவர் போராடியது கலிஃபோர்னியச் செம்மரங்களுக்காக! லுனா என்ற மரத்தின் மீது 738 நாட்கள் நாட்கள் தங்கி, நீண்ட போராட்டத்தை நடத்தினார்!

உலகிலேயே மிக உயரமான, மிக அதிக காலம் வாழக்கூடியவை செம்மரங்கள். அமெரிக்காவின் கலிஃபோர்னிய காடுகளில் இருந்த 97 சதவீத செம்மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள 3 சதவீத மரங்களைக் காப்பாற்றுவதற்காக இயற்கை ஆர்வலர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். சில நாட்கள், சில வாரங்கள் மரங்களில் அமர்ந்து புதுமையாகப் போராடினார்கள்.

23 வயது ஜுலியாவுக்குச் சிறிய வயதிலிருந்தே இயற்கை மீது பேரார்வம். பத்து வயதில் மலைப்பகுதிக்குச் சென்றபோது, அவரது விரல்களில் ஓர் அழகான வண்ணத்துப்பூச்சி அமர்ந்தது. சற்று நேரம் ஓய்வெடுத்த பிறகு பறந்து சென்றது. அன்றிலிருந்து ஜுலியா ஹில் என்ற பெயரோடு பட்டர்ஃப்ளையையும் இணைத்துக்கொண்டார். பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல், இயற்கைப் பாதுகாப்பு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார்.

இயற்கை நேசம்

ஆயிரம் ஆண்டுகளை எட்டிய செம்மரங்களை பசிபிக் லம்பர் கம்பெனி வெட்டிக்கொண்டிருந்தது. அதை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் ஜுலியாவை மிகவும் உத்வேகப்படுத்தியது. 1997, அக்டோபர் மாத முழு பவுர்ணமி நாளில் ஆயிரம் வயது செம்மரத்தைத் தேர்ந்தெடுத்து, லுனா என்று பெயரிட்டார் ஜுலியா. மோசமான விபத்தில் இருந்து மீண்டிருந்த ஜுலியாவால் 200 அடி மரத்தின் மீது வெறும் கால்களுடன் ஏறுவது கடினமாக இருந்தது. நள்ளிரவில் உச்சியை அடைந்தவர், ஒரு சிறிய கூடாரத்தை அமைத்தார். சில நாட்களில் ஜுலியா இறங்கிவிடுவார் என்றுதான் நண்பர்கள் நினைத்தனர். மரங்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வரை தான் இறங்கப் போவதில்லை என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் ஜுலியா.

போராட்டத்துக்கு நடுவே

அடுப்பு, சோலார் விளக்கு, போன், காகிதங்கள், பேனா, வாளி வைத்துக்கொண்டார். உயிர் வாழத் தேவையான அளவுக்குக் குறைவான உணவுகளைச் சாப்பிட்டார். கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தினார். மழை வரும்போது தண்ணீரைப் பிடித்துக்கொண்டார். ஸ்லீபிங் பேக் உள்ளே சென்று தூங்கினார். கூடாரம் என்று சொன்னாலும் அது கூடாரம் அளவுக்குப் பாதுகாப்பாக இருக்காது. கொஞ்சம் தவறினாலும் உயிர் போய் விடும். காற்றுக்கு மரம் ஆடும். மழை பெய்தால் நிலைமை மோசமாகிவிடும். கீழே கரடிகள் நடமாடும். மரத்தில் பறவைகள் வந்து அமரும். பூச்சிகள் தொல்லை வேறு. மிக மிகக் கடினமான வாழ்க்கை.

அத்தியாவசியமான பொருள்களைக் கொண்டுவரும் நண்பர்களைக்கூட அடிக்கடி வரச் சொல்ல மாட்டார் ஜுலியா. ஏனென்றால் எழுதுவது, படிப்பது என்று நாள் முழுவதும் அவருக்கு வேலை இருந்துகொண்டே இருக்கும். தரையில் கால்படாததால் கால் வலி உண்டாகும். அதனால் மரக்கிளைகளில் நடந்துகொள்வார்.

வெற்றியை நோக்கி

ஆரம்பத்தில் பசிபிக் லம்பர் கம்பெனி ஜுலியாவைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. தனியாக ஒரு பெண்ணால் காட்டில் வாழ முடியாது என்று நினைத்தது. நாட்கள் செல்லச் செல்ல ஏமாற்றம் அடைந்தது. ஜுலியாவுக்குப் பல வகைகளில் தொல்லை கொடுத்தது. மிரட்டிப் பார்த்தது. எதுவும் ஜுலியாவின் உறுதியைச் சற்றும் தளர்த்தவில்லை. இரண்டு ஆண்டுகளைக் கடந்த பிறகு ஜுலியாவின் போராட்டம் தேசிய அளவில் பேசப்பட்டது. செய்தித்தாள்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் ஜுலியாவும் லுனாவும் முக்கியச் செய்தியாக மாறினார்கள்.

பசிபிக் லம்பர் கம்பெனிக்கு வேறு வழியில்லை. ஜுலியாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. அனுமதியின்றி எந்தவகை மரத்தையும் வெட்டுவதில்லை, செம்மரங்களுக்குத் தங்களால் ஆபத்து நேராது, லுனா மரத்துக்குத் தனிப் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

அனுபவப் பாடம்

738 நாட்களுக்குப் பிறகு பூமியில் கால் பதித்தார் ஜுலியா. லுனாவை விட்டுப் பிரிவது அவருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. ஆனாலும் இந்த இரண்டு ஆண்டுகள் அவரது வாழ்க்கையில் வித்தியாசமான அனுபவங்களைத் தந்திருந்தன. மனிதர்கள் வசிக்காத இடங்களில் தனியாக வாழ்வது எப்படி?

குறைந்த பொருள்களைக் கொண்டு சமாளிப்பது எப்படி? உறைய வைக்கும் கடுங்குளிர், புயல்காற்று போன்றவற்றிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான விஷயங்களைப் புரிய வைத்திருந்தது இந்த வன வாழ்க்கை.

தனி நபர் போராட்டத்தைவிட ஓர் அமைப்பு மூலம் போராடுவது கூடுதல் பலனளிக்கும் என்று நினைத்த ஜுலியா, ‘எர்த் ஃபர்ஸ்ட்’ சுற்றுச்சூழல் அமைப்பில் இணைந்துகொண்டார். லுனா பற்றிப் புத்தகம் எழுதினார். தொடர்ந்து சுற்றுச்சூழல் போராட்டங்களில் பங்கேற்றார். உரை நிகழ்த்தினார்.

2002-ம் ஆண்டு ஓர் எண்ணெய் நிறுவனம் ஈக்வடார் காடுகளில் எண்ணெய்க் குழாய்களைப் பதிப்பதற்காகக் காடுகளை அழிக்க ஆரம்பித்தது. மீண்டும் போராட்டத்தில் இறங்கினார் ஜுலியா. உலகில் உள்ள அரிய உயிரினங்களும் பெரும்பகுதி ஆக்ஸிஜனும் மழைக்காடுகளில்தான் உள்ளன. அற்புதமான காட்டை அழிக்கக் கூடாது என்ற ஜுலியாவைக், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2003-ம் ஆண்டு வரி செலுத்த மாட்டேன் என்ற போராட்டத்தைக் கையில் எடுத்தார் ஜுலியா. மக்களின் வரிப்பணம் நாட்டின் முன்னேற்றத்துக்கு, நல்ல செயல்களுக்குப் பயன்பட வேண்டும். ஈராக் போன்ற நாடுகளில் மக்களை அழிப்பதற்கும் வளங்களைச் சூறையாடுவதற்கும் பயன்படக் கூடாது என்றார்.

சுற்றுச்சூழலுக்காகப் போராடும் ஜுலியா, தானும் உறுதியாக அவற்றைப் பின்பற்றுகிறார். ரசாயனம் இல்லாத காய்கறி உணவுகளை உண்கிறார். மறுசுழற்சிக்குப் பயன்படாத எந்தப் பொருளையும் அவர் வாங்குவதில்லை. தன்னுடைய புத்தகத்தையும் அப்படித்தான் பதிப்பிக்கிறார். தாவர மையைப் பயன்படுத்துகிறார். இவற்றை மற்றவர்களும் பின்பற்றினாலே பூமிக்குச் செய்யும் பெரிய உதவியாக இருக்கும் என்கிற ஜுலியா, ஆண்டுக்கு ஒன்றிரண்டு முறை லுனாவைப் பார்த்துவருகிறார்.

கடினமான போராட்டக் குணம் கைவந்தது எப்படி என்று கேட்கிறவர்களுக்கு, ‘எல்லோருக்கும் அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறுவது பிடிக்கும். ஆனால் வண்ணத்துப் பூச்சிக்கு முன்பு யாரும் விரும்பாத கம்பளிப்புழு, கூட்டுப்புழுப் பருவம் எல்லாம் இருக்கிறதென்று தெரிவதில்லை. போராட்டம் கடினமானதுதான்… அந்தப் போராட்டத்தால் கிடைக்கும் பலன் அற்புதமானது. இன்று செம்மரங்களைப் பார்க்கும்போது வரும் சந்தோஷத்துக்கு இணை ஏதுமில்லை!’ என்கிறார் ஜுலியா பட்டர்ஃப்ளை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

28 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்