ஓய்வுக்கு நேரமே இல்லை

By க்ருஷ்ணி

ஓடி ஓடி உழைத்து முடித்து, ஓய்வெடுக்க வேண்டிய வயதில் உற்சாகத்துடன் பல கலைகளைக் கற்றுக்கொண்டிருக்கிறார் கோயமுத்தூரைச் சேர்ந்த கீதா கிருஷ்ணமூர்த்தி. உட்காராத காற்றாக, நிற்காத நதியாக எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். 72 வயதில் எப்படி இத்தனை சுறுசுறுப்புடன் இருக்க முடிகிறது என்ற ஆச்சரியத்துக்கு அவரே விடைதருகிறார்.

“எனக்கு எப்பவும் ஏதாவது செய்துகிட்டே இருக்கறதுதான் பிடிக்கும். சோர்ந்து உட்காருவது எனக்குப் பிடிக்காது. சும்மா இருந்தா எனக்குப் பைத்தியமே பிடிச்சுடும். என் பேரக்குழந்தைகள்கூட, ‘ஏன் பாட்டி எப்பவும் பிஸியாவே இருக்கீங்க. கொஞ்ச நேரம் சும்மா உட்காரக்கூடாதா?’ன்னு கேட்பாங்க” என்று சொல்லும் கீதா, ரேடியோ கலைஞராகவும் இருந்திருக்கிறார்.

“என் சொந்த ஊர் தஞ்சாவூர். திருமணத்துக்குப் பிறகு என் கணவரோட வேலை காரணமா கேரளாவில் குடியிருந்தோம். நான் சின்ன வயசுலேயே பாட்டு கத்துக்கிட்டேன். அந்த இசை ஞானம் எனக்கு கோழிக்கோடு வானொலி நிலையத்தில் வாய்ப்பு பெற்றுத் தந்தது. கிட்டத்தட்ட 30 வருஷம் ரேடியோ கலைஞரா இருந்தேன். பாட்டையே தொழிலாக நான் தேர்ந்தெடுக்க நினைத்தபோது, தொண்டையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமா பாட்டைக் கைவிட வேண்டியதா இருந்தது. என் கணவரோட பணி ஓய்வுக்குப் பிறகு கோயமுத்தூர் வந்தோம்.

ஏதாவது ஒரு வடிவத்துல கலையோட தொடர்பில் இருக்கணும்னு நினைச்சேன். ஓவியத்தில் எனக்கு ஆர்வம் அதிகம். அதை முறைப்படி கத்துக்க நினைச்சேன். 70 வயசுல ஓவிய வகுப்பான்னு பலர் ஆச்சரியமா கேட்டாங்க. நான் அதை சவாலா எடுத்துக்கிட்டு கத்துக்கிட்டேன். திருச்சியில ஒரு பள்ளியில 2 வருஷம் வார்லி பெயிண்டிங்கை பகுதி நேரமா கத்துக்கொடுத்தேன். என்கிட்டே பாட்டு கத்துக்கிட்ட குழந்தைங்க எனக்கு, ‘வார்லி டீச்சர்’னு பேரே வச்சிட்டாங்க. இதுபோதும் எனக்கு” என்று சொல்கிறார் கீதா.

அமெரிக்காவில் தன் மகன் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கும் தன் கலைத்திறமைக்கு வடிவம் கொடுத்திருக்கிறார். நவராத்திரி நாட்களில் கீதா கிருஷ்ணமூர்த்தி வைக்கிற தீம் கொலுவுக்கு அமெரிக்காவில் ரசிகர்கள் அதிகம். விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு குறித்துத்தான் வைத்த கொலுவுக்கு அதிகப் பாராட்டு கிடைத்ததாகச் சொல்கிறார்.

தற்போது வார்லி, கண்ணாடி ஓவியம், காபி பெயிண்டிங், மூங்கில் கிராஃப்ட் போன்றவற்றைச் செய்து, விற்பனையும் செய்கிறார்.

“வகுப்புகள் எடுக்கச் சொல்லி என்னிடம் பலர் கேட்கிறார்கள். அதற்குத் தகுந்த இடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் வகுப்பைத் தொடங்கிவிட வேண்டியதுதான்” என்கிறார் கீதா கிருஷ்ணமூர்த்தி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்