கலையால் பேசும் திருநங்கைகள்

By என்.கெளரி

திருநங்கைகளிடம் இருக்கும் பல்வேறு விதமான கலைத் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகத் ‘திருநங்கைகளின் மாபெரும் கலைவிழா’ சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. திருநங்கைகளின் வாழ்க்கைத்தரம், சுகாதாரத் தேவைகள் போன்றவற்றை வலியுறுத்தவும், திருநங்கைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் இந்தக் கலைவிழாவை விஎச்எஸ்-எம்எஸ்ஏ, சகோதரன், தோழி போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தியிருக்கின்றன. தமிழகத்தின் சமூக நலன் மற்றும் சத்துணவு துறை அமைச்சர் பா. வளர்மதி இந்த கலைவிழாவுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.

பாரம்பரிய கலை நிகழ்வுகள்

இந்தக் கலைவிழாவில் எழுபதுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர். தப்பாட்டம், கரகாட்டம், பரதம், யோகா, ஆடை அணிவகுப்பு, அம்மன் ஆட்டம் எனப் பல்வேறு வித்தியாசமான கலைநிகழ்ச்சிகள் இந்த விழாவில் நடைபெற்றன. “2002 -ம் ஆண்டிலிருந்து திருநங்கைகளுக்கான இந்தக் கலைவிழாவைத் தொடர்ந்து நடத்திவருகிறோம்.

ஒவ்வோர் ஆண்டும் கலைநிகழ்ச்சிகள் வித்தியாசமாக இருக்குமாறு வடிவமைக்கிறோம். இந்த ஆண்டு, கலைநிகழ்ச்சிகளைச் சமூகப் பின்னணியுடன் இணைத்து வடிவமைத்திருந்தோம். திருநங்கைகள் தங்கள் கலைத்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு பொதுத்தளமாக இந்தவிழா இருக்கிறது” என்கிறார் இந்தக் கலைவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திருநங்கை சுதா.

இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்ற திருநங்கைகளின் கலைத்திறமைகளைப் பற்றிய பின்னணி விவரங்களையும் பார்வையாளர்களுக்கு விளக்கினர். கலாக்ஷேத்திராவில் ஆசிரியராக இருக்கும் லக்ஷயாவின் பரதநாட்டியம், நாடு முழுக்க 200 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியிருக்கும் தப்பாட்டக் குழுவின் தப்பாட்டம், கெடுதலை அழித்து நல்லதை நிலைநாட்டும் அம்மன் ஆட்டம் ஆகியவை ரசிக்கும்படி அமைந்திருந்தன.

இவை மட்டுமன்றி இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாகப் பதின்மூன்று மாநிலங்களின் பாரம்பரிய ஆடை அணிவகுப்பு, யோகா பேராசிரியராகவும் ஒளிப்பதிவாளராகவும், திரைப்பட நடிகையாகவும் இருக்கும் கார்த்திக் பிரியாவின் யோகா விளக்கம், கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நடனம் போன்ற தனித்துவமான நிகழ்ச்சிகள் கண்டோரை ஈர்த்தன.

மக்களை இணைக்கும் நிகழ்ச்சிகள்

பார்வையாளர்களாகப் பெருநிறுவனங்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், அரசு அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள் போன்ற பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். “இந்த விழாவில் பார்வையாளர்களாகப் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தோம். திருநங்கைகளைப் பற்றிய சமூகத்தின் பார்வை இப்போது நிறைய மாறியிருக்கிறது.

மேலும், அவர்களைப் பற்றிய புரிதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்காகப் பல துறை சார்ந்தவர்களும் கலந்துகொள்ளுமாறு இந்த விழாவை ஒருங்கிணைத்தோம். இதனால் திருநங்கைகளுக்குப் பல துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழல் உள்ளது” என்கிறார் நிகழ்ச்சியின் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான ஜெயா.

இந்த விழாவின் ஒரு பகுதியாகத் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திருநங்கைகளின் ஒளிப்படக் கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது. இந்த விழா திருநங்கைகளிடம் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அவர்களைப் பற்றிய சமூகத்தின் புரிதலையும் நேர்மறையாக மாற்றியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இந்தியா

15 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்