ஏழு நாடுகள் ஏழு பெண்கள் ஒரே கதை

By வி.சாரதா

தட்... தட்... தட்...ம்ம்ம்ம்... தட்...தட்...தட்... பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆன்மாவைத் தேடும் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. கம்போடியா நாட்டில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆன்மாவைத் தேட இப்படியொரு சடங்கு நடத்தப்படுகிறது.

சென்னையில் நடைபெற்ற ‘ஏழு' என்ற நாடகத்தில்தான் இந்தக் காட்சி நடித்துக் காட்டப்பட்டது. இந்த நாடகம் ஒரு கம்போடிய பெண்ணைப் பற்றியது மட்டுமல்ல. ஏழு நாடுகளைச் சேர்ந்த ஏழு பெண்களைப் பற்றியது.

ரஷ்யாவில் குடும்ப வன்முறைக்கு எதிரான அவசர உதவி மையம் நடத்தும் மரினா பிஸ்கலாகோவா பார்க்கர், கம்போடியாவின் பெண்கள் நலத்துறை முன்னாள் அமைச்சர் மூ சுச்சுவா, குவாதமாலாவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனெபெல்லா டி லியொன், வடக்கு அயர்லாந்தின் மனித உரிமை மற்றும் தொழிற்சங்கத் தலைவர் இனெஸ் மெக் கோர்மாக், ஆப்கனிஸ்தானில் விளிம்பு நிலைப் பெண்களுக்காகப் போராடும் பரீதா அசிசி, நைஜீரியாவின் மனித உரிமைப் போராளி ஹப்சத் அபியோலா, பாகிஸ்தானில் பெண்கள் உரிமைகள் மற்றும் கல்விக்காகப் போராடிவரும் முக்தர் மயி என ஏழு பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாடகம். உலகமெங்கும் பெண் என்ற ஒற்றைக் காரணத்தால் கொடூர வன்முறைக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்டு, தொடர்ந்து வன்முறைக்கு எதிராகச் செயல்பட்டுவருபவர்களின் அனுபவங்களைப் பேசுவதே நாடகத்தின் முக்கிய நோக்கம்.

பெண்ணுலகம்

பெண்ணின் கண்ணியம் அவளது உடலிலும் உடையிலும் உள்ளது என்ற சிந்தனை உலகமெங்கும் நிலவிவருகிறது. அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும்போதெல்லாம், பரிதாபத்திற்கு உரியவர்களாக மட்டுமே சமூகம் அவர்களைக் கருதுகிறது. தங்கள் பாதிப்பிலிருந்து மீண்டு, வெற்றிகொள்ள நாம் என்ன செய்தோம் என்ற கேள்வியை ‘ஏழு' நாடகம் முன்வைக்கிறது. ஏழு நாடுகள், ஏழு மொழிகள், ஏழு கலாச்சாரங்கள், ஏழு வெவ்வேறு வாழ்க்கை. ஆனால் பிரச்சினை ஒன்றுதான்.

வன்முறைக்கு எதிரான போராட்டம்

உதாரணமாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த கல்வியறிவற்ற ஏழைப்பெண் முக்தர் தனது சமூகக் கவுரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தி விட்டதால், அவளைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்த கிராமப் பஞ்சாயத்தில் உத்தரவிடப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது. மறு புறம், குவாதமாலா நாட்டில் 1995-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினரான அனெபெல்லா டி லியோன் ஊழலுக்கு எதிராகவும், ஏழை, பெண்கள் மற்றும் பழங்குடி மக்களுக்காகவும் தொடர்ந்து போராடுகிறார் என்ற காரணத்தால் கொலை மிரட்டல்களைச் சந்திக்க நேர்கிறது.

இப்படி வெவ்வேறு தளங்களில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைப் பற்றி ஏழு கதைகள் சொல்லப்படுகின்றன. ஆனால், பெண்கள் இந்தக் கொடுமைகளை எதிர்த்து தொடர்ந்து போராடுகிறார்கள். முக்தர் மயி ஒரு பாடசாலையைத் தொடங்கி, பெண்களுக்குக் கல்வி போதிப்பது மட்டுமல்லாது, ஆண்களுக்கும் சமத்துவக் கல்வியை போதித்துவருகிறார். சமூகப் போராளிகளான தன் பெற்றோர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹப்சத் அபியோலா நைஜீரியாவின் இளம் பெண்கள் தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்ளப் பயிற்சியளித்து வருகிறார்.

ஏழு புகழ்பெற்ற நாடக எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ‘ஏழு’, வழக்கமான நாடக முறையில் அல்லாமல், ஒவ்வொரு பெண்ணும் நம்மிடம் நேரடியாகத் தன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளும் விதத்தில் இருந்தது. இந்த ஏழு வித்தியாசமான கதைகளுக்கு உள்ள தொடர்பை விளக்காமலே பார்வையாளர்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

உலகம் முழுவதும் திரையிடப்படும் இந்த நாடகத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்திருக்கும் நாடக இயக்குநர் சஞ்சய் குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அனுராதாவைப் பாராட்டலாம். நாடக இயக்குநர் மங்கை, கவிஞர் சல்மா, ஏவம் நாடகக் குழுவின் சுனில் விஷ்ணு, தொழில்முனைவோர் சவுந்தரியா ராஜேஷ், நாடகக் கலைஞர் சம்பத் முத்துவேலன், உணவு விடுதியில் பணியாற்றும் அன்வர் பாட்சா, மனநல ஆலோசகர் மற்றும் ஆசிரியர் சப்னா நாயர், பாண்டீஸ் நாடகக் குழுவின் ஸ்வப்ண ப்ரில்ய மன்ன, சம்யுக்தசாகா, பிரியங்கா கண்டோலா என வெவ்வேறு தளத்தில் இயங்கும் செயல்பாட்டாளர்களை, நடிகர்களாக்கிக் கதை சொன்ன விதம் புதுமையான அனுபவத்தைத் தந்தது.

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளைச் சொல்லித் தீராது. ஆனால் தங்களை முடக்கிய தளைகளை அறுத்தெறிந்து வெற்றிநடை போடும் இந்த ஏழு பெண்களைப் போன்றவர்கள், நம்பிக்கையை அதிகரிக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்