பார்வை: கரடிபொம்மை நீதிமன்றங்கள்!

By ஜெயந்த் ஸ்ரீராம்

த்தாண்டுகளுக்கும் மேலாக கோவாவில் சிறார்களுக்கான பிரத்யேகமான நீதிமன்றம் செயல்பட்டுவருகிறது. தற்போது நாட்டின் மற்ற மாநிலங்களும் இந்த முறையைப் பின்பற்றுவது பற்றிப் பரிசீலித்துவருகின்றன. அது என்ன சிறார்களுக்கான பிரத்யேக நீதிமன்றம்?

கோவா தலைநகர் பனாஜியில் அரசுக் கட்டிடங்களுக்கு மத்தியில் இருக்கிறது ஷ்ரம் சக்தி பவன். 2004-ம் ஆண்டிலிருந்து இந்த நீதிமன்றம் செயல்பட்டுவருகிறது. இதன் வெளிப்புற அறை ஒரு வழக்கமான அரசு அலுவலகத்தின் தோற்றத்துடனேயே இருக்கிறது. ஆனால், வழக்காடு மன்றத்தின் உள்ளே நுழைந்தவுடன், அது வேறோர் உலகமாக மாறுகிறது.

6chgow_teddybear courts கோவா சிறார் நீதிமன்றம்

இந்த வழக்காடு மன்றத்துக்குள் நுழையும் ஒருவருக்கு, அது சாதாரணமானதாகத்தான் தெரியும். அங்கே நீதிமன்றத்தில் பயன்படுத்தும் வழக்கமான பெஞ்சுகளும் மர நாற்காலிகளும்தான் போடப்பட்டிருக்கின்றன.

அதையும் மீறி, சுவரிலும் கூரையிலும் பூசப்பட்டிருக்கும் அடர் இளஞ்சிவப்பு நிறம் அரசு அலுவலகத் தோற்றத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. ஜன்னலை ஒட்டிப் போடப்பட்டிருக்கும் அந்த பெஞ்சுகள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கானவை என்பது, அங்கே அமர்ந்திருக்கும் ஓர் இளைஞரைப் பார்த்து வழக்கறிஞர் கேள்வி கேட்டவுடன் தெரிகிறது.

நீதிமன்ற அறையின் முன்னேயிருக்கும் மேஜையைச் சுற்றி நீதிபதி, அரசு வழக்கறிஞர், ஸ்டெனோகிராஃபர், நீதிமன்ற காவல்துறை அதிகாரி போன்றோர் அமர்ந்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் யாரும் சீருடை அணிந்திருக்கவில்லை. அந்த வழக்காடு மன்றத்தில் இருக்கும் வழக்கறிஞர்கள் யாரும் கறுப்பு அங்கி அணிந்திருக்கவில்லை. இந்த அறையின் மத்தியில், இரண்டு பெரிய திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.

இப்போது, அவை இரண்டு புறமும் கட்டிவைக்கப்பட்டிருக்கின்றன. “நீதிமன்றத்துக்குச் சிறிய குழந்தைகளை அழைத்துவரும்போது, இந்தத் திரைச்சீலைகளைப் போட்டுவிடுவோம். அதனால், வழக்காடு மன்றத்தில் நடைபெறும் விஷயங்களை அனைவராலும் பார்க்க முடியாது. குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நபரைப் பார்க்கும் போது குழந்தைகள் பயப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால், அவர்களைத் தனியாக அழைத்துவருவதற்கு இந்த ஏற்பாடு” என்கிறார் நீதிமன்ற காவல்துறை அதிகாரி.

முன்னோடி கோவா

கோவா சிறார் நீதிமன்றம் பதின்மூன்று ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. ஆனால், குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் வன்கொடுமை வழக்குகளையும் மற்ற குற்ற வழக்குகளையும் விசாரிப்பதற்காக இப்படி ஒரு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்ற முடிவுக்கு, இப்போதுதான் மற்ற மாநிலங்கள் வந்திருக்கின்றன. கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் இந்த ஆண்டுதான் இந்தச் சிறார் நீதிமன்றங்கள் திறக்கப்படவிருக்கின்றன.

6chgow_Chennai court சென்னை சிறார் நீதிமன்றம்

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், டெல்லியில் சிறார் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெலுங்கானாவில் இப்படி ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டிருக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்குத் தனி நீதிமன்றங்கள் அமைக்க வேண்டுமென்று குழந்தை உரிமைப் பாதுகாப்புச் சட்ட ஆணையம் (2005) சொல்கிறது.

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் POCSO, 2012 சட்டம் இந்த நடைமுறையைக் கட்டாயமாக்கியிருக்கிறது. இந்தச் சட்டம் பாதிக்கப்பட்ட சிறார்களையும் சாட்சிகளையும் கையாள்வதற்கான விதிமுறைகளை வகுத்திருக்கிறது. இந்த இரண்டு சட்டங்களும் குழந்தைகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதன் அவசியத்தை மாநிலங்களுக்கு உருவாக்கியிருக்கின்றன.

பீட்ஸ் வழக்கு

தொண்ணூறுகளின் பிற்பகுதியில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைப் பற்றிப் பெரிய உரையாடல்கள் எதுவும் நடைபெறவில்லை. இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசுவதற்கான இயக்கம் உருவானதற்கு கோவா காரணமாக இருந்தது. கோவாவுக்கு வெளிநாட்டினரின் வருகை அதிகரித்தது. ஆனால் அதில் இலங்கை, தாய்லாந்தில் முன்னதாக நடைபெற்ற ‘பீடோபிலியா’ சம்பவங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

ஆங்கிலோ-ஜெர்மன் பின்னணியைக் கொண்ட ஃபிரெட்டி பீட்ஸ் என்ற வெளிநாட்டவர், கோவாவில் குழந்தைகள் காப்பகத்தை நடத்திக்கொண்டிருந்தார். அவர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதற்கு அடுத்துவந்த ஆண்டுகளில், கோவாவின் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் இயற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கின.

6CHGOW_HYDERABAD_CHILDREN_COURT ஹைதராபாத் சிறார் நீதிமன்றம்

அதுதான், கோவாவின் முன்னோடியான குழந்தைகள் சட்டம், 2003 உருவாகக் காரணமாக அமைந்தது. இந்தச் சட்டம்தான் இந்தியாவில் மாநில அளவிலான முதல் குழந்தைகள்நலச் சட்டம்.

இந்தச் சட்டத்தை உருவாக்கப் பணியாற்றிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஒன்று ‘ஸ்டாப் சைல்டு அப்யூஸ் நவ்’ (SCAN). இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான, ஆட்ரே பிண்டோ, “எவை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அதற்கு என்ன தண்டனை நிர்ணயிக்க வேண்டும் என்பதை தாலுகா அளவில் நடைபெற்ற பல்வேறு உரையாடல்களுக்குப் பிறகே முடிவுசெய்தோம்.

முதன்முறையாக, கோவா குழந்தைகள் சட்டம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை வன்புணர்வு, பாலியல் தாக்குதல், கடுமையான பாலியல் தாக்குதல் என்று திட்டவட்டமாக வரையறுத்தது. அத்துடன், ஒவ்வொரு குழந்தைக்குமான உரிமைகளையும் இந்தச் சட்டம் வரையறுத்தது. அதற்குப் பிறகு உருவாக்கப்பட்ட ‘பாக்ஸோ’ சட்டம், கோவா சட்டத்தின் பெரும்பாலான விஷயங்களை அப்படியே பயன்படுத்தியிருக்கிறது.

பணியிலிருந்து கற்றல்

இந்த நீதிமன்றத்தில் முழுநேர நீதிபதியாக வந்தனா டெண்டுல்கர் பதவியேற்றுக்கொண்டபோது, குழந்தைகளுடைய வழக்குகளைக் கையாள்வதைப் பற்றிய ஏட்டு அறிவுடன் மட்டுமே இருந்திருக்கிறார். “2012-ம் ஆண்டு பாக்ஸோ சட்டம் அமலுக்கு வந்த பிறகு, பல மாவட்ட, அமர்வு நீதிமன்றங்கள் சிறப்பு நீதிமன்றங்களாக அறிவிக்கப்பட்டன.

அதனால், வழக்கமான வழக்குகளைக் கையாண்டுகொண்டிருக்கும்போது, திடீரென்று ஒரு ‘பாக்ஸோ’ வழக்கு வந்தால், உடனடியாக அந்த நீதிபதி தன்னுடைய மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். ‘பாக்ஸோ’ வழக்குகளில் சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் நீதிபதி மட்டும்தான் கேள்விகள் கேட்க முடியும். அரசு வழக்கறிஞர்கூடக் கேள்விகள் கேட்க முடியாது. கேள்விகள் எளிமையாக இருக்க வேண்டும்.

குறுக்கு விசாரணை நீளமானதாக இருக்கக் கூடாது. வழக்காடு மன்றத்தின் மொழியை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டியிருக்கும்” என்று ‘பாக்ஸோ’ வழக்குகளைக் கையாள்வதில் இருக்கும் சவால்களைப் பகிர்ந்துகொள்கிறார் அவர்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, 2015-ம் ஆண்டு, ‘பாக்ஸோ’ சட்டத்தின் கீழ் 14,913 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. 2014-ம் ஆண்டு, 8,904 வழக்குகள் பதியப்பட்டிருந்தன. இதில் 2014-ம் ஆண்டு, முடித்துவைக்கப்பட்ட 406 வழக்குகளில் 100 வழக்குகளில் மட்டுமே குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

நீதிமன்றத்தின் சிறப்புகள்

ஷ்ரம் சக்தி பவனின் அலமாரிகளில் பொம்மைகளும் கார்களும் நிரம்பிவழிகின்றன. குழந்தைகளின் பள்ளி நாட்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், அவர்கள் மதிய நேரத்தில் ஆஜராகும்படி வழக்குகள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. “குழந்தைகளுக்குத் தனியாகக் காத்திருக்கும் அறையை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். தற்போது, அரசு வழக்கறிஞரின் அறையைக் குழந்தைகள் காத்திருக்கும் அறையாகப் பயன்படுத்துகிறோம்.

இதில் குற்றவாளியை அடையாளம் காட்டும்படி குழந்தைகளிடம் சொல்வதுதான் கடினமான விஷயம். அவர்கள் குற்றவாளியை அடையாளம் காட்ட வேண்டிய கட்டத்தில் மட்டும் திரைச்சீலைகளைச் சற்று விலக்குவோம். குழந்தைகள் பயப்படாமல், மனநெருக்கடிக்கு உள்ளாகாமல் நடந்தவற்றை நீதிபதிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்பதே நோக்கம். சில நேரம், இது வேலை செய்யும். பல நேரம் மிகவும் கடினமாக இருக்கும்.” என்கிறார் வந்தனா.

©தி இந்து ஆங்கிலம்
சுருக்கமாகத் தமிழில்: என். கௌரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

தமிழகம்

8 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்