முகம் நூறு: வயல்தான் வாழ்க்கை! - தேசிய சாதனை படைத்த பூங்கோதை

By அ.சாதிக் பாட்சா

நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் கிராமங்களில்தான் வாழ்கிறார்கள். நாட்டின் முதுகெலும்பான கிராமங்களின் ஆதாரத் தொழிலான விவசாயம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நாடு முழுவதும் நடக்கும் விவசாயிகளின் தற்கொலைகளும் இதைத்தான் நிரூபிக்கின்றன. இப்படியொரு கசப்பான சூழலில் பெரம்பலூரைச் சேர்ந்த 60 வயது பூங்கோதை, தானியங்கள் உற்பத்தியில் தேசிய சாதனை புரிந்து, நம்பிக்கை அளித்திருக்கிறார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் வி.களத்தூரையடுத்த இனாம் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கோதை. இவர் பத்து வயதிலிருந்தே தனது தந்தை சின்னப்பிள்ளைக்கு உதவியாக விவசாய வேலைகளைச் செய்துவந்தார். திருமணத்துக்குப் பிறகு குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, கணவருக்கு உதவியாக விவசாயப் பணிகளையும் மேற்கொண்டுவந்தார். கணவர் இறந்த பிறகு முழுநேர விவசாயியாக மாறினார்.

வளம் தரும் இயற்கை

பூங்கோதைக்குச் சொந்தமாக மூன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக இதில் பருத்தி, மக்காச்சோளம் பயிரிட்டுவருகிறார். பெரம்பலூர் மாவட்டம் கடந்த சில ஆண்டுகளாக மக்காச்சோள உற்பத்தியில் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது. மக்காச்சோள உற்பத்தியை மேலும் பெருக்குவதற்காக மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார். ஒரு ஹெக்டேர் பரப்பளவுக்கு மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் இலவச இடு பொருட்கள், வேளாண் நிபுணர்கள் ஆலோசனை வழங்கப்பட்டன. இதில் பூங்கோதை இணைந்தார்.

“எங்க வயல்ல அஞ்சு வண்டி மாட்டுச் சாண எருவும் ஏரி மண்ணும் கலந்து போட்டேன். விதைச்சதுக்குப் பிறகு இயற்கை உரத்தைத்தான் அதிகமா போட்டேன். செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லின்னு ரசாயனப் பொருட்களை வயல்ல போடுறதைக் குறைச்சுக்கிட்டேன். களை முளைச்சுதுன்னா பாதியில வெட்டாம வேரோட பிடுங்கிடுவேன். பயிர்ல பூச்சிங்க வந்துச்சுன்னா, எந்தப் பகுதிக்குப் பாதிப்போ அதை நீக்கிடுவேன். வளர்ச்சி குறைவா இருக்கற செடிக்குக் கூடுதலா எரு வைப்பேன்.

இப்படி ஒவ்வொரு செடியையும் உன்னிப்பா கவனிச்சு வளர்த்தேன். என் உழைப்பு வீண்போகலை. அந்த ஆண்டு எதிர்பார்த்ததைவிட மகசூல் அமோகமாக இருந்தது. வேளாண் துறை அதிகாரிங்க கதிர்களை எடைபோட்டுப் பார்த்துட்டு ஆச்சரியப்பட்டாங்க. ஒரு ஹெக்டேருக்கு 8 ஆயிரம் கிலோவிலிருந்து 10 ஆயிரம் கிலோதான் மக்காச்சோளம் கிடைக்கும். என் வயல்ல ஒரு ஹெக்டேருக்கு 12 ஆயிரத்து 233 கிலோ கிடைச்சுது!” என்று தன் உழைப்புக்கேற்ற பலன் கிடைத்ததில் உள்ளம் பூரிக்கிறார் பூங்கோதை.

பொய்க்காத நம்பிக்கை

வேளாண் துறை அதிகாரிகள் இந்த உற்பத்தி குறித்து மத்திய அரசுக்குத் தெரிவித்தனர். மத்திய வேளாண் துறை பூங்கோதையின் வயலில் கிடைத்த உற்பத்தியைத் தேசிய சாதனையாக அறிவித்து, கிரிஷி கர்மான் விருது வழங்கி கவுரவித்தது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, அந்த விருதைப் பூங்கோதைக்கு வழங்கினார். இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் கிடைத்தது.

“பெண்களால் முடியாதது எதுவுமில்லை. விடாமுயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால் யாரும் சாதனை படைக்கலாம். நான் வீட்ல இருந்ததைவிட வயல்ல இருந்ததுதான் அதிகம். காலைல ஆறு மணிக்கு வயலுக்குப் போனா, பொழுது சாஞ்ச பிறகுதான் வீட்டுக்கு வருவேன். மக்காச்சோள உற்பத்தியில் சாதனை படைச்ச என் வயல்ல கடந்த ரெண்டு வருஷமா விளைச்சல் இல்லை. போன வருஷம் மழை அதிகமா பெய்து பயிர்களை அழிச்சிடுச்சி. இந்த வருஷம் மழையும் இல்லை, கிணத்துல தண்ணியும் இல்லை.

அதனால பயிர் எல்லாம் கருகிப்போச்சு. அதுக்காக நான் இடிஞ்சு போயிடலை. விவசாயிங்க பாடுபட்டாதானே நகரத்துல இருக்கறவங்க வீட்லயும் அடுப்பு எரியும்? இவ்ளோ நாளா என்னை வாழவச்ச இயற்கை, இடையில கொஞ்சம் சோதிச்சுப் பார்க்குது. ஆனா என்னைக் கைவிடாதுங்கற நம்பிக்கையில காத்துக்கிட்டு இருக்கேன்” என்கிறார் விவசாயி பூங்கோதை. இவரைப் போன்ற விவசாயிகளின் நம்பிக்கையை மீட்டெடுப்பதில் அரசாங்கத்துக்கும் பெரும் பங்குண்டு. அது சரியாக நிறைவேற்றுப்படுவதில்தான் விவசாயிகளின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்