தன்னம்பிக்கை தந்த வெற்றி: கௌசல்யா தேவி

By பிருந்தா சீனிவாசன்

தமிழில் பிரியம் பொங்கப் பேசுகிற கௌசல்யா தேவி, வருடத்துக்கு 30 முதல் 40 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் 'அமராவதி கார்மெண்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறார். இதற்குப் பின்னால் 30 ஆண்டு கால அயராத உழைப்பும் தன்னம்பிக்கையும் நிறைந்திருக்கிறது. அதை அவரது வார்த்தைகளிலேயே கேட்போம்.

'நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் தாராபுரத்துலதான். பி.ஏ முடிச்சதும் கல்யாணமாகிடுச்சு. பொள்ளாச்சிக்கு மருகமளா வந்துட்டேன். என் கல்யாணத்தப்போ என் கணவர் துரை, வக்கீலா பிராக்டீஸ் செய்துட்டு இருந்தார். ஒருகட்டத்துல வக்கீல் தொழிலை விட்டுட்டு பிசினஸ் தொடங்கலாமான்னு கேட்டார். அவரோட அண்ணனும் அண்ணியும் கரூர்ல கார்மெண்ட்ஸ் நடத்திட்டு இருந்தாங்க. அவங்களோட வழிகாட்டுதல்ல சென்னையில சின்னதா ஒரு கார்மெண்ட்ஸ் யூனிட் தொடங்கினோம்' என்று சொல்கிற கௌசல்யா தேவிக்கு, சென்னை பிரமிப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

'நாங்க சென்னைக்கு வரும்போது என் பெரிய மகனுக்கு ஒரு வயசு. அதுவரைக்கும் வெளியுலகமே தெரியாம வளர்ந்த எனக்கு, சென்னையின் பரபரப்பு பிரமிப்பா இருந்துச்சு. யாரும் யார்கிட்டேயும் பேசாம, தனித்தனி தீவுகளா இருக்கற மாதிரி தோணுச்சு. நமக்கு சென்னையும் வேணாம், பிசினஸும் வேணாம், ஊருக்கே திரும்பிப் போயிடலாம்னு என் கணவர்கிட்டே சொல்லுவேன். எல்லாம் கொஞ்ச நாள்ல பழகிடும்னு அவர் என்னை சமாதானப்படுத்துவார். இவர் பிசினஸ் விஷயமா அடிக்கடி வெளியூருக்கும் வெளிநாட்டுக்கும் போயிடுவார். அப்போ சென்னை யூனிட்டை கவனிச்சுக்கறதுக்காக இவரோட அண்ணி தனலட்சுமி, கரூர்ல இருந்து வருவாங்க. 'ஒவ்வொரு முறையும் நான் அங்கே இருந்து சென்னைக்கு வந்து இதைக் கவனிச்சுக்க முடியுமா? அதனால நீயே இந்த வேலை எல்லாம் கத்துக்கோ'ன்னு அவங்க சொல்லுவாங்க.

கார்மெண்ட்ஸ் பத்தி எனக்கு ஆனா ஆவன்னாகூட தெரியாது. நான் எப்படி ஒரு யூனிட்டையே கவனிச்சுக்க முடியும்னு தயக்கமா இருந்துச்சு. அண்ணிதான் விடாம எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லித் தந்தாங்க. அவங்க கொடுத்த தைரியத்துல நானும் கொஞ்சம் கொஞ்சமா பிசினஸ் வேலைகளைப் பார்த்தேன். அப்போதான் இளைய மகன் பிறந்தான். ரெண்டு குழந்தைகளையும் என் அம்மா கவனிச்சுக்கிட்டாங்க. நான் வேலைக்குப் போனேன்' என்று தான் பிசினஸ் பயின்ற கதையைப் பகிர்ந்துகொண்டார்.

நம்மால் சாதிக்க முடியுமா என்ற தயக்கத்துடன் கார்மெண்ட்ஸ் யூனிட்டைக் கவனிக்க வந்தவர், தனியாக வெளிநாடுகளுக்குச் சென்று ஆர்டர் எடுக்கும் அளவுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். அதில்தான் வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது. தான் தாண்டிவந்த தடைகள் குறித்து தேவியே சொல்கிறார்.

'வடசென்னயில இருந்த எங்க யூனிட்டுக்கு பஸ்லதான் போவேன். பேட்டன், ஃபேப்ரிக், ஷிப்மெண்ட், டாகுமெண்டேஷன் இந்த மாதிரிதான் அங்கே பேசுவாங்க. ஏதோ புரியாத மொழியைக் கேட்கறமாதிரி இருக்கும். என் கணவரும் அண்ணியும்தான் எல்லாத்தையும் பொறுமையா சொல்லித் தந்தாங்க. வேலைக்கு நடுவே வீட்டு ஞாபகமும் வந்துடும். குழந்தைங்க ஸ்கூல்ல இருந்து வர்றதுக்குள்ளே வீட்டுக்குப் போகணும்னு நினைப்பேன். அதுக்காகவே வேலைகளை வேகமா கத்துக்கிட்டேன். நாங்க நடத்துறது கார்மெட்ண்ட்ஸ் கம்பெனிங்கறதால அதுக்கு அடிப்படை தேவையான தையலைக் கத்துக்கிட்டேன்.

பிசினஸ் மீட்டிங் நடக்கும்போது என்னையும் என் கணவர் கூட்டிட்டுப் போவார். அங்கே எப்படி பேசணும், எதை பேசணும்னு கவனிப்பேன். திடீர்னு ஒருநாள் என்னை ஜப்பான் கிளம்பிப் போய் பிசினஸ் பேசிட்டு வரச்சொன்னார் என் கணவர். எனக்கு தயக்கமாகவும் பயமாவும் இருந்துச்சு. ஆனா நம்ம வேலையை நாமதானே செய்யணும்? அந்தத் துணிச்சல்ல கிளம்பிட்டேன். எங்கே இறங்கணும், எப்படிப் போகணும்னு கையோட விளக்கமா மேப் எடுத்துட்டுப் போனேன். ஏர்போர்ட்ல போய் இறங்கினதும் என் பயம் அதிகமாயிடுச்சு. அங்கே எனக்கு உதவறதுக்காக ஒரு நண்பரை ஏற்பாடு செய்திருந்தாங்க. அவங்க உதவியோட நல்லபடியா பிசினஸ் பேசிட்டு வந்தேன். பெரிய ஆர்டர் கிடைச்சது. அந்த வெற்றிதான் என்னை அடுத்த கட்டத்துக்கு நகர வைத்தது' என்கிறார் கௌசல்யா தேவி.

தற்போது சென்னை கரையான்சாவடியிலும் திருத்தணியிலுமாக இவர்களது யூனிட் செயல்படுகிறது. வீட்டின் மாடியில் சாம்பிள் மற்றும் டாகுமெண்ட்டேஷன் யூனிட்டும் நடக்கிறது. கிட்டத்தட்ட 500 தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனத்தின் நிர்வாகத்தையும், வியாபாரத்தையும் கவனித்துக் கொள்கிறார் இவர். கணவரும் மகன்களும் ஆர்டர்கள் பிடித்துத்தர, வெளிநாடுகளுக்கு ஆர்டர் குறித்த நேரத்தில் சென்றுவிட்டதா, சாம்பிள் தயாராகிவிட்டதா, பதில் அனுப்ப வேண்டிய மெயில்கள் எத்தனை என எப்போதும் பரபரப்பாக இருக்கிறார்.

'மேடம் சாம்பிள் செய்ய 5 நிமிஷம் லேட்டாயிடுச்சு' என்று இடையே வருகிற சிக்கல்களையும் இன்முகத்துடனேயே சமாளிக்கிறார். 'ஆரம்பத்துல சின்னச் சின்ன தவறுகள் நடந்திருக்கு. ஒருமுறை ஃபேப்ரிக்கோட விலை குறைவா இருக்கும்னு நினைச்சுட்டு குறைவா விலை மதிப்பீடு செய்துட்டேன். அதுக்குப் பிறகு என் கணவர்தான் என் தவறைச் சுட்டிக்காட்டினார். நஷ்டம் ஏற்பட்டது எனக்கு வருத்தமா இருந்துச்சு. இருந்தாலும் இதுபோன்ற அனுபவங்களில் இருந்தும் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டேன். இப்போ எந்தவகை துணியா இருந்தாலும் பார்த்த உடனேயே விலையை அனுமானிக்க முடியும். எங்களோட வாடிக்கையாளர்கள் எந்த மாதிரி விரும்பறாங்கன்னு புரிஞ்சு அதக்கேற்ற மாதிரி டிசைனை உருவாக்கித் தரமுடியும்.

எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கறதால அதுக்கு ஏற்ற மாதிரி ஓவர்கோட், ஸ்கர்ட்ஸ், ஷார்ட்ஸ் போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறோம். பி.ஏ படிச்ச நான், தெரியாத நாடுகள்ல, புரியாத மொழிகளைச் சமாளிச்சு புதுப்புது வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிச்சது ரொம்ப நிறைவா இருக்கு. 'அவங்க நியாயமானவங்க'ன்னு எங்களோட வாடிக்கையாளர்கிட்டே இருந்து கிடைக்கிற வார்த்தைகள்தான் நான் சம்பாதித்த வெற்றி.

இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கு. திரும்பிப் பார்க்ககூட நேரமில்லை!' என்று உற்சாகத்துடன் சொல்கிறார். பேரன், பேத்தி எடுத்தபிறகும் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்கிற இந்த உற்சாகம்தான் கௌசல்யா தேவியை வெற்றியின் வாயிலில் நிறுத்தியிருக்கிறது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

33 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்