பக்கத்து வீடு: சாதனைக்கு எதுவும் தேவையில்லை!

By எஸ்.சுஜாதா

மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு உயர்தர ஷூக்கள், கம்ப்ரஷன் சாக்ஸ், விளையாட்டு உடை, சக்தியூட்டும் பானங்கள் போன்றவை அவசியம். ஆனால் நீண்ட பாவாடை, ரப்பர் செருப்புகள், தண்ணீர் பாட்டிலுடன் அல்ட்ரா மாரத்தான் போட்டியில் ஓடி, முதல் இடம் பிடித்திருக்கிறார் மரியா லோரேனா ராமிரெஸ்!

யார் இந்த மரியா?

மெக்சிகோவின் டாராஹுமாரா மலைக் கிராமம் ஒன்றில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் 22 வயது மரியா. கால்நடை மேய்ப்பதுதான் இவரது தொழில். தினமும் 12 முதல் 15 கி.மீ. தூரம் ஆடு, மாடுகளை மேய்த்துவிட்டுத் திரும்புவார். பொதுவாகவே இந்தக் கிராமத்து மக்களுக்கு ஆரோக்கியமும் உடல் வலிமையும் அதிகம் உண்டு. மரியாவின் தாத்தா, அப்பா, சகோதரர்கள் எல்லோரும் வேகமாக ஓடக்கூடியவர்கள். அதனால் மரியாவின் ரத்தத்திலும் ஓட்டம் கலந்திருக்கிறது. உள்ளூர்ப் போட்டிகளிலும் இவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இவர்கள் யாரும் தொழில்முறை ஓட்டப்பந்தய வீரர்கள் அல்ல. வாய்ப்புக் கிடைக்கும்போது போட்டிகளில் பங்கேற்றுவிட்டு, மீதி நேரம் தங்கள் வேலைகளைப் பார்க்கப் போய்விடுவார்கள்.

அல்ட்ரா மாரத்தான்…

கடந்த ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற அல்ட்ரா மாரத்தான் போட்டியில் 12 நாடுகளிலிருந்து 500 வீரர்கள் கலந்துகொண்டனர். தன் அண்ணனுடன் இரண்டு நாட்கள் பயணம் செய்து, போட்டி நடைபெறும் இடத்துக்கு வந்துசேர்ந்தார் மரியா.

பயிற்சி பெற்ற போட்டியாளர்கள், 50 கி.மீ. தூரம் ஓடுவதற்கு ஏற்ற காலணி, உடை, களைப்படையாமல் இருப்பதற்குப் பானங்கள் என்று தயாராக இருந்தனர். மரியா நீளமான பாவாடை அணிந்திருந்தார். கழுத்தில் ஒரு கைக்குட்டையைச் சுற்றியிருந்தார். மறு சுழற்சி ரப்பரில் செய்யப்பட்ட காலணிகளுடனும் பாட்டில் தண்ணீருடனும் நின்றிருந்தார். சக வீரர்களைப் பார்த்து மரியாவுக்கு எந்தவிதப் பயமோ தயக்கமோ இல்லை. நம்பிக்கையுடன் தைரியமாக நின்றிருந்தார். மற்ற வீரர்களுக்கோ மரியா ஒரு போட்டியாளராகவே தெரியவில்லை.

போட்டி ஆரம்பித்தது. சுற்றுப்புறத்தை மறந்தார். இலக்கை நோக்கி நிதானமாக ஓடினார். ஓட்டத்துக்கு எவையெல்லாம் தடையாக இருக்குமோ, அவை மரியாவுக்குத் தடையாக இருக்கவில்லை. வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு, தண்ணீரைப் பருகியபடி இலக்கைத் தொட்டார். அரங்கமே அதிர்ந்தது. மரியா திகைத்துப் போனார். தான் அல்ட்ரா மாரத்தான் ஓட்டத்தை முழுமை செய்வோம் என்று நினைத்திருந்தவருக்கு, வெற்றி பெற்ற முதல் போட்டியாளார் என்றதும் மகிழ்ச்சியில் மயக்கமே வந்துவிட்டது. கடந்த ஆண்டு 100 கி.மீ. ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றவருக்கு, இந்த ஆண்டு முதலிடம் கிடைத்துவிட்டது! 7 மணி நேரம் 3 நிமிடங்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தி இருந்தார் மரியா!

எல்லோருக்கும் ஆச்சரியம். எப்படி இவரால் தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டு ரப்பர் செருப்புகளை அணிந்துகொண்டு ஓட முடிந்தது?

மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த கரடு முரடான மலைப் பகுதிகளில் தினமும் ஓட்டமும் நடையுமாகக் கால்நடைகளை மேய்ப்பதால், இவருக்கு ஓடுவதில் சிரமம் இருக்கவில்லை. சோள மாவில் கோகோ, கற்றாழை, லவங்கப்பட்டை, சியா விதைகள் போன்றவற்றைச் சேர்த்துத் தினமும் கஞ்சி செய்து குடிப்பதாலும் எலுமிச்சைச் சாறு, சியா விதைகளைச் சேர்த்துத் தண்ணீர் குடிப்பதாலும் உடலுக்குத் தேவையான சக்தி கிடைத்துவிடுகிறது. எளிதில் களைப்பு ஏற்படுவதில்லை.

“ராராமுரி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு நீண்ட தூரம் ஓடக்கூடிய உடல் வலிமை இருக்கிறது. எங்களின் உணவுப் பழக்கமும் உழைப்பும்தான் அதற்குக் காரணம். முன்பெல்லாம் மெல்லிய தோல் செருப்புகளை அணிந்துகொண்டு ஓடுவார்கள். இப்போது பழைய கார் டயர்களிலிருந்து தயாரிக்கப்படும் செருப்புகளை அணிந்துகொண்டு ஓடுகிறோம். பந்தயங்களுக்கு என்று பிரத்யேகமாக நாங்கள் பயிற்சி எடுத்துக்கொள்வதில்லை. பிரத்யேக பொருட்களையும் வாங்கிக்கொள்வதில்லை.

எங்கள் மக்களில் நான் வேகமாக ஓடக்கூடியவள்தான். ஆனால், முதலிடம் பெறுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. பாவாடையும் செருப்பும் ஓடும் வேகத்தைத் தடை செய்துகொண்டிருந்தன. இல்லாவிட்டால் இன்னும் சற்று முன்கூட்டியே இலக்கை அடைந்திருக்க முடியும். 20 ஆயிரம் ரூபாய் பரிசுப் பணத்துடன் பல்வேறு நாட்டு மக்களின் வாழ்த்துகளையும் எடுத்துக்கொண்டு எங்கள் ஊருக்குச் செல்கிறேன்” என்ற மரியா, மகிழ்ச்சியைக் கூட ஆர்ப்பாட்டமாகக் காட்டிக்கொள்ளவில்லை.

விஷயம் சமூக வலைத்தளங்களில் பரவியது. உலகம் முழுவதிலுமிருந்து மரியாவுக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன. இனியாவது உலகின் முன்னணி நிறுவனங்கள் உரிய உபகரணங்களை வழங்கி, தங்களின் பெருந்தன்மையைக் காட்டிக்கொண்டால் இன்னும் பல உலக சாதனைகளைப் படைப்பார் மரியா!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

உலகம்

10 hours ago

வாழ்வியல்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்