மறுவாழ்வு தந்த இயற்கை

By ஜி.ஞானவேல் முருகன்

‘சாமைச் சோறு ஆமை ஆயுள்’

‘குதிரைவாலி தந்திடுமே குறைவில்லா வாழ்வு’

‘கோலுன்றி நடப்பவரும் கம்பங்கூழால் காலூன்றி நடப்பார்’

‘தினை உண்டால் தேக்கு போல் உடல் வலுவாகும்’

‘வரும் நோய்களை வரகால் விரட்டுவோம் ராகியில் பலகாரம் கால்சியத்தின் அதிகாரம்’

- திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா வளைவு பக்கமாகச் செல்கிறவர்களின் கவனம் ஈர்க்கின்றன இந்த வாசகங்கள். இவற்றைத் தன் பசுமை அங்காடியில் ஒட்டி வைத்திருக்கிறார் சத்யபாமா. காய்கறிகளை அடுக்கிவைப்பது, வாடிக்கையாளர்களைக் கவனிப்பது எனச் சுறுசுறுப்புடன் வேலை செய்யும் சத்யபாமா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படுத்த படுக்கையாக இருந்தவர் என்றால் நம்ப முடியவில்லை.

“நம்பித்தான் ஆகணும். ரெண்டு வருஷத்துக்கு முன்னால எனக்குக் கர்ப்பப்பையை அகற்றியாச்சு. அல்சர், எலும்பு தேய்மான நோய்னு வரிசையா பிரச்சினைகள். எழுந்து நடமாடக்கூட முடியலை. அப்போ ஒரு வேளைக்கு 10 மாத்திரை வீதம் தினமும் 30 மாத்திரைகள் சாப்பிடுவேன். ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் சாப்பிட்டதால மன அழுத்தம் அதிகமாயிடுச்சு. ராவெல்லாம் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவேன்” என்று தான் துயரப்பட்ட நாட்களை சத்யபாமா விவரிக்கிறார். அப்போது அவருடைய கணவர் குணசேகரன், டெஸ்ட் தெரபி எடுக்க வைத்துள்ளார்.

இயற்கையின் வழியில்

அதன் பின்னர் ஓரளவு தூக்கம், உணவு என இயல்புக்குத் திரும்பிக் கொண்டிருந்த சத்யபாமாவுக்கு 2013-ம் ஆண்டு தொடக்கத்தில் தோழி ஒருவர் மூலம் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் அறிமுகம் கிடைத்தது. வானகத்தில் நம்மாழ்வாரைச் சந்தித்த சத்யபாமா, ஐந்து நாட்கள் அங்கேயே தங்கி இயற்கை உணவு குறித்து அவர் வழங்கிய ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறார்.

வானகத்தில் இருந்து திருச்சி திரும்பியவர், ‘இயற்கைக்குத் திரும்பிவிடு’ என நம்மாழ்வார் கூறியதைச் செயல்படுத்தும் விதமாக, இயற்கை முறை விவசாயத்தில் உற்பத்தி செய்த சாமை, வரகு, கம்பு, சோளம், தினை, சிகப்பரிசி ஆகியவற்றைத் தினசரிச் சமையலுக்குப் பயன்படுத்தினார். வீட்டிலேயே தோட்டம் அமைத்து கத்தரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய், சுரைக்காய், தக்காளி மற்றும் கீரை வகைகளைப் பயிரிட்டார்.

சிறிதும் ரசாயன கலப்பில்லாத உணவைச் சாப்பிட்டு வந்ததால் சத்யபாமாவின் உடல் நலத்தில் சில மாதங்களிலேயே மாறுதல் ஏற்பட்டது. மாத்திரைகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விடை கொடுத்தவர் இயற்கை உணவுப் பழக்கத்துக்கு மாறிய பின், இன்றுவரை ஒரு மாத்திரைகூட சாப்பிடவில்லை.

அனைவருக்கும் நலவாழ்வு

தனக்கு ஏற்பட்ட இந்த ஆரோக்கியமான மாற்றத்தை மற்றவர்களும் பெறவேண்டுமென நினைத்தார் சத்யபாமா. தன் கணவரது உதவியுடன் திருச்சி கருமண்டபத்தில் பசுமை அங்காடி ஒன்றைத் தொடங்கினார். இங்கு இயற்கையாக விளைவிக்கப்பட்ட சிறு தானியங்கள், அரிசி வகைகள், காய்கறிகள், கீரைகளை மட்டுமே விற்கின்றனர்.

ஆரம்பத்தில் உடல் நலம் சரியில்லாத மனைவிக்கு உதவ பசுமை அங்காடியைப் பார்த்துக்கொண்ட சத்யபாமாவின் கணவர், இயற்கை உணவுப் பொருட்களால் ஈர்க்கப்பட்டு முழுநேரமாக அங்காடியைக் கவனிக்கத் தொடங்கினார். அதனால் கருமண்டபம் பசுமை அங்காடியை அவரையே பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, சில மாதங்களுக்கு முன் ஸ்ரீரங்கத்தில் மற்றொரு பசுமை அங்காடியைத் திறந்திருக்கிறார் சத்யபாமா.

இவருடைய பசுமை அங்காடியில் இயற்கை வேளாண்மை விளைபொருட்கள் மட்டுமல்லாது மண்ணாலான குக்கர், ஃபிரிட்ஜ், வாட்டர் ஃபில்டர், தோசைக் கல், தட்டு, டம்ளர் ஆகிய பொருட்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

குஜராத்தைச் சேர்ந்த மட்பாண்டக் கலைஞர் ஒருவரது தயாரிப்பான மண் ஃபிரிட்ஜைப் பயன்படுத்த மின்சாரம் தேவையில்லை. ஃபிரிட்ஜின் மேல் பகுதியில் இருக்கும் டேங்கில் 10 லிட்டர் தண்ணீர் நிரப்பினால் போதும். கீழே இரண்டு அறைகள் இருக்கின்றன. இதில் 7 கிலோ வரை பழங்கள், காய்கறிகளை மட்டும் வைத்துக்கொள்ளலாம். சமைத்த உணவு வகைகளை வைக்க முடியாது. பொதுவாகவே சமைத்தப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது என்கிறார் சத்யபாமா.

விலையைக் குறைக்கும் மந்திரம்

“மற்ற கடைகளுடன் ஒப்பிடும்போது பசுமை அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களின் விலை சிறிது அதிகம்தான். ஆனால், இவற்றைப் பயன்படுத்துவதால் மருந்து மாத்திரைகளுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க முடியும். இதற்கு நானே உதாரணம்” என்கிறார் சத்யபாமா.

ஒரு கிலோ எடையைக்கூட தூக்க முடியாதவர் இப்போது 15 கிலோ எடையுள்ள பொருட்களை திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் வரை எடுத்து வரும் அளவுக்கு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.

“வரகு, சாமை, தினை போன்றவற்றை மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டாலே விவசாயிகள் அவற்றை அதிக அளவு விளைவிக்கத் தயாராகிவிடுவார்கள். உற்பத்தி அதிகரித்தால் விலையும் தானாகக் குறைந்துவிடும்” என்று விளக்கமும் தருகிறார் சத்யபாமா.

படங்கள்:ஜி.ஞானவேல்முருகன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்