தயக்கம் தவிர்த்தால் சாதிக்கலாம்

By ஜி.ஞானவேல் முருகன்

திருச்சி உறையூரில் இருக்கும் அந்த டிரைவிங் ஸ்கூல் வாசலில் ஒரு கார் நின்றுகொண்டிருக்கிறது. டிரைவிங் சீட்டில் அமர்ந்து கொண்டிருக்கிற பெண்ணுக்குப் பக்கத்தில் அமர்ந்தபடியே கார் ஓட்டுவதன் நுணுக்கங்களைக் கற்றுத் தருகிறார் பூங்கொடி. பின் இருக்கையில் அமர்ந்திருக்கிற பெண்களும் அதைக் கவனித்துக் கேட்கிறார்கள். பிறகு காரின் பேனட்டைத் திறந்து உள்ளிருக்கும் பாகங்கள் குறித்தும், கார் ஓட்டும்போது பிரச்சினை வந்தால் அதைச் சமாளிப்பது குறித்தும் பூங்கொடி விளக்குகிறார்.

பொதுவாகக் கார் போன்ற வாகனங்களை ஓட்டக் கற்றுத் தருகிற வேலையோடு ஆண்களை மட்டுமே பொருத்திப் பார்த்துப் பழகியவர்களுக்கு இந்தக் காட்சி புதிதாகத் தோன்றலாம். ஆனால் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேருக்கு மேல் வாகனங்கள் ஓட்டக் கற்றுத் தந்திருக்கிற பூங்கொடி அந்த நினைப்பைத் தவிடுபொடியாக்குகிறார்.

பள்ளி சவாரி

ஈரோடு அருகே சிறிய கிராமத்தில் பிறந்து, திருமணத்துப் பிறகு திருச்சி வாசியாக மாறியவர் பூங்கொடி. இவருக்கு சிறுவயது முதலே வாகனங்கள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் பூங்கொடி இன்னோவா, ஸ்கோடா, ஈடோஸ் ஷெவ்ரோலே, ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட உயர்ரக கார்களை அநாயசமாக ஓட்டுகிறார்.

திருமணமான புதிதில் வீட்டு வேலைகள் மட்டுமே ஒரு இல்லத்தரசியின் முழுநேர கடமை என்ற நினைப்பில் இருந்து சிறிதும் விலகாமல்தான் பூங்கொடியும் இருந்திருக்கிறார். தன் குழந்தைகளை கணவரின் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றதுதான் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பூங்கொடியின் வீட்டுக்கு அருகில் வசித்த மற்ற பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வாகனங்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அதைப் பார்த்த பூங்கொடிக்கு கார் வாங்கி, அதில் மற்றக் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லலாம் என்ற எண்ணம் தோன்றியது. விருப்பத்தைக் கணவரிடம் தெரிவித்தார்.

மில் மெக்கானிக்காக வேலை பார்த்த பூங்கொடியின் கணவர் சுப்பிரமணியன், ஆரம்பத்தில் யோசித்தாலும் மனைவியின் ஆர்வத்தைப் பார்த்து பழைய ஃபியட் கார் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். அதில் நன்றாக ஓட்டக் கற்றுக்கொண்ட பூங்கொடி, தன் குழந்தைகளுடன் மற்ற குழந்தைகளையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். 12 ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் தொடங்கியது பூங்கொடியின் டிரைவிங் தொழில்.

பெருகிய வாடிக்கையாளர்கள்

பூங்கொடியைப் பார்த்து மற்ற பெண்களும் வாகனம் ஓட்ட விருப்பப்பட்டனர். அவர்களுக்குத் தன் வாகனத்திலேயே டிரைவிங் பயிற்சி அளித்தார். டிரைவிங் தொழிலை முழுநேர வேலையாக மாற்றியது அடுத்து நடந்த சம்பவம்.

“என் கணவருக்கு அவர் வேலை பார்த்த மில்லில் விருப்ப ஓய்வு கொடுத்துட்டாங்க. அடுத்து என்ன செய்யறதுன்னு அவர் யோசிச்சப்போ டிரைவிங் தொழில் எங்களுக்குக் கைகொடுத்தது.

2005-ம் ஆண்டு இந்த டிரைவிங் ஸ்கூலைத் தொடங்கினோம். இந்த ஒன்பது வருஷத்துல ஐந்தாயிரம் பேருக்கும் மேல் டிரைவிங் கத்துக்கொடுத்து லைசென்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்” என்று சொல்லும் பூங்கொடி, திருநங்கைகளுக்குப் பணம் பெற்றுக்கொள்ளாமல் டிரைவிங் கற்றுக்கொடுத்து லைசென்ஸ் வாங்கித் தருகிறார்!

இதுதவிர பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு டிரைவிங் கற்றுக் கொடுத்து, வேலையும் வாங்கித் தருகிறார். அந்தப் பகுதியில் இருக்கும் பலரும் கார் ஓட்ட நம்பிக்கையான டிரைவர் வேண்டுமென்றால் பூங்கொடியிடம்தான் கேட்கிறார்கள். அந்த அளவுக்கு வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைச் சம்பாதித்திருக்கிறார்.

பெண்கள் கால் டாக்ஸி

பூங்கொடியுடன் அவருடைய இரண்டு மகள்கள் அபிராமி, சரண்யா ஆகியோருடன் சாந்தி, அனிதா என ஐந்து பெண்கள் இங்கு பயிற்சியாளர்களாக இருக்கின்றனர். இவர்களின் அடுத்த கட்ட முயற்சி முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் கால் டாக்ஸியைத் திருச்சியில் சில மாதங்களில் தொடங்குவது. அதற்காகப் பெண் டிரைவர்களை உருவாக்கும் முயற்சியில் முழுமூச்சாக செயல்பட்டு வருகிறார்கள்.

“பல பெண்கள் தயக்கத்தாலேயே வாகனம் ஓட்டுவதில்லை. வாகனங்கள் ஓட்டுவதும் மற்ற வேலையைப் போல ஒரு வேலைதான். தயக்கத்தைத் தவிர்த்தாலே போதும். பெண் டிரைவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்” என்கிறார் பூங்கொடி.

படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்