போராட்டக் களம்: அன்னமிடும் கைகளின் ஆர்ப்பாட்டக் குரல்கள்

By எல்.ரேணுகா தேவி

தமிழக விவசாயிகளின் பிரச்சினை களுக்குத் தீர்வு காணக் கோரி, தலைநகர் டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் பெண்களும் முன்னணியில் நிற்பது போராட்டத்துக்குப் பெரும் வலிமையைக் கொடுத்திருக்கிறது. வேளாண்மைக் களத்தில் பெண்களுக்கு இருக்கும் பங்கும் அக்கறையும் ஆண்களுக்குச் சற்றும் குறையாதவை என்பதை இவர்களுடைய பங்கேற்பு உணர்த்துகிறது.

தேசியக் குற்றப் பதிவு ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் 8,007 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டி ருக்கிறார்கள் என விவசாயச் சங்க அமைப்புகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த மூன்று வாரங்களாக விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

நூதன முறையில் விவசாயிகள் நடத்தி வரும் இந்தப் போராட்டத்தில் பெண்கள் இலை, தழைகளைக் கட்டிக்கொண்டும், அரைப் பாவாடையுடன் நின்றுகொண்டும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்துகி றார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ராஜலட்சுமி, ராசம்மா, நச்சம்மா, செல்லம்மா ஆகியவர்களிடம் தொலைபேசி வாயிலாகப் பேசினோம். அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் பிரச்சினையின் தீவிரத்தையும் போராட்டத்தின் வீரியத்தையும் உணர்த்து கின்றன.

வங்கி அதிகாரிகளின் ஏச்சு

விராலிமலை பகுதியில் இருந்து போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் ராஜலட்சுமி, தன்னுடைய 64 வயதில் ஒவ்வொரு நாளும் இருபது முதல் முப்பது கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருவாராம். “பேங்குல லோன் வாங்கி நிலத்துள்ள போர் போட்டா தண்ணீர் பிரச்சினை தீர்ந்துவிடும்,

பழைய மாதிரி விவசாயம் செய்யலாம் என்ற கற்பனையோடுதான் லோன் வாங்கினேன். ஆனா போர் போட்டும் தண்ணீர் வரல. நெல், சோளம், தானியங்கள் விளைந்த எங்க நிலம், இப்போ தண்ணீர் இல்லாத காரணத்தால் தரிசா கிடக்கு. கடனை அடைக்க முடியாத காரணத்தால் என்னுடைய மகனும் அவன் பெண்டாட்டி, புள்ளைங்களைக் காப்பாத்த எங்களை விட்டுவிட்டு தனியா போயிட்டான். வங்கில இருந்து வரும் அதிகாரிங்க ‘அறிவு இல்லை? காசு மட்டும் வாங்க தெரிஞ்சிச்சு இல்ல.

அதை கட்ட முடியாதா?’ன்னு எங்களை ரொம்ப மோசமா பேசுறாங்க. இவங்க பேச்ச தாங்க முடியாம பேரீச்சம் பழ கம்பெனிக்குக்கூட வேலைக்குப் போனேன். ஆனா அங்க ஒரு நாளைக்கு அறுபது ரூபாய்தான் கூலி கொடுத்தாங்க. இந்தக் கூலியை வைச்சு எப்படி கடனை அடைக்க போறேன்னு தெரியலை” என்கிறார் துயரம் தேய்ந்த குரலில்.

எங்களுக்குத் தள்ளுபடி எப்போ?

துவரங்குறிச்சியில் இருந்து வந்துள்ள நச்சம்மாவோ, “காவிரி நீர் வராம எங்க நிலத்துல பயிர் பண்ண முடியல. மாடுங்க குடிக்கக்கூட போதுமான தண்ணீ இல்லைங்க. மூணு லட்சம் ரூபாய் கடன், இப்போ வட்டி போட்டு ஏழு லட்சத்துக்கு வந்து நிக்குது. விவசாயம் செய்ய தண்ணீர் இருந்தாதானே பயிர் பண்ண முடியும். எங்க கடனை இந்த அரசாங்கம் தள்ளுபடி செய்யத்தான், இப்படி அரை பாவாடை கட்டிக்கிட்டு நிற்கிறோம். யார் யாரோ தொழில் அதிபருங்க, விளையாடுற புள்ளைங்களுக்கு கோடி கோடியாக கொடுக்கற இந்த அரசு, எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு ஒரு நல்ல வழி செய்யாதா?” என்று கேட்கிறார். தன்னுடைய 60 வயதில் வீடு, வாசல், கணவர், பிள்ளைகள் என அனைவரையும் சொந்த ஊரில் விட்டுவிட்டுப் போராட்டக் களத்தில் நிற்கிறார்.

ஆடு மாடுகளை விற்றோம்

“வயசான காலத்துல எங்கங்க வேலைக்குப் போக முடியும்? அப்படியே போனாலும் எங்களை யாருங்க வேலையில் சேர்த்துப்பாங்க?” எனக் கேட்கும் செல்லம்மா திருச்சி மாவட்டம் முசிறி கிராமத்திலிருந்து வந்துள்ளார். தன்னுடைய கணவருடன் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இவர் டிராக்டருக்காகக் கடன் வாங்கியிருக்கிறார். ஆனால் மழை இல்லாத காரணத்தால் ஏற்பட்ட வறட்சி இவர்களின் வாழ்க்கையிலும் விளையாடிவிட்டது. “வெளி வேலைக்கு இந்த வயசுல போக முடியல. வீட்டில் இருக்கிற ஆடு, மாடுகளை வித்து சாப்பிடறோம்” என்கிறார் இவர்.

யாருடைய துயரம்?

இவர்களைப் போல் நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயிக் குடும்பத்துக்கும் சராசரியாக 47 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளதாக தேசிய மாதிரி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் வறட்சி, விவசாயம் செய்யப் போதிய நீர் இல்லாதது போன்ற காரணங்களால் 2005 முதல் 2014 வரையிலான பத்து ஆண்டுகளில் மட்டும் சுமார் பன்னிரண்டு லட்சம் ஏக்கர் விவசாய நிலம், வேறு பணிகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

ஊருக்கே உணவு அளித்த விவசாயிகள் தற்போது தங்களின் அன்றாட வாழ்வாதாரத்துக் காகப் போராட்டம் நடத்திவருகிறார்கள். அவர்களுடைய பிரச்சினைகளுக்கு அரசு காது கொடுத்து, உரிய தீர்வை வழங்க வேண்டும் என்பதே விவசாயத்தின் மீது அக்கறை உள்ளவர்களின் எதிர்பார்ப்பு. நமக்குச் சோறிடுபவர்களின் துயரம் தீராமல் இருப்பது, நம் துயரமும்தானே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்