பெண்கள் உருவாக்கிய பேரலை

By ஆதி

நாட்டின் உள்ளடங்கிய கிராமங்களைச் சேர்ந்த தலித் பெண்கள் என்ன செய்ய முடியும்? 8 தலித் பெண்கள் இணைந்து கபர் லஹரியா (செய்தி அலைகள்) என்ற இதழைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். மக்கள் பிரச்சினைகளைப் பேசும் இந்த உள்ளூர் இதழை நடத்துவது முழுக்க முழுக்க பெண்கள். இந்த இதழ் யுனெஸ்கோ, சமேலி தேவி, லாட்லி மீடியா (பாலினக் கூருணர்வை (gender sensitivity) அதிகரித்ததற்காக) ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளது.

இன்றைக்கு 40 பிற்படுத்தப்பட்ட, தலித் பெண்கள் இந்த இதழில் வேலை பார்க்கிறார்கள். அனைவரும் உத்தரபிரதேசம், பிகார் மாநிலங்களின் உள்ளடங்கிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் இருக்கிறார்கள், படிப்பறிவு குறைந்தவர்களும் இருக்கிறார்கள். எந்தப் பெரிய வசதிகளும் இல்லாமல் இவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஆண்களே ஆதிக்கம் செலுத்திவரும் பத்திரிகைத் துறையில் பல்வேறு எதிர்ப்புகள், சவால்களைச் சந்தித்து அவர்கள் இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த இதழில் செய்தியாளர்களாக வேலை பார்ப்பது மட்டுமில்லாமல், வடிவமைப்பது, விநியோகம், சந்தைப்படுத்துதல் ஆகிய அனைத்துப் பிரிவு வேலைகளைச் செய்வதும் பெண்கள்தான். இந்த இதழ் பூந்தேலி, அவதி, பஜிகா, போஜ்புரி, ஹிந்துஸ்தானி ஆகிய மொழிகளில் 6,000 பிரதிகள் அச்சிடப்படுகிறது. ஒரு இதழை 10 முதல் 20 பேர் படிப்பார்கள் என்பதால், வாசகர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடும். ஆசிரியர் மீரா தேவி.

தொடக்கம்

இந்த இதழ் தொடங்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் நிரந்தர் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஷாலினி ஜோஷி. அரசுத் திட்டமான மகிளா சமக்யாவின் கீழ் ஒரு உள்ளூர் நாளிதழ் வெளிவந்து கொண்டிருந்தது. 2000ஆம் ஆண்டில் அது நிறுத்தப்பட்டபோது, பலரும் வருத்தப்பட்டார்கள். அதை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டார்கள்.

2002ஆம் ஆண்டு சித்ரகூட்டில் பூந்தேலி மொழியில் கபர் லஹரியா முதல் இதழ் தொடங்கப்பட்டது. 2012இல் வாராணசியில் ஆறாவது பதிப்பு போஜ்புரி மொழியில் வெளியானது. இன்றைக்கு இந்த இதழுக்கு இணையதளமும் இருக்கிறது. தனி இதழின் விலை ரூ. 2 தான் என்றாலும், தயாரிப்புச் செலவு ரூ.6 ஆகிறது. இதழை நடத்துவதற்கு தோரப்ஜி அறக்கட்டளை, ஐ.நா. ஜனநாயக, சமத்துவ நிதி ஆகியவை நிதியளிக்கின்றன.

சாத்தியமான மாற்றங்கள்

இப்போது லஹரியா செய்தியாளர்கள் அரசுத் துறையினரிடமும் நல்ல பெயரைப் பெற்று வருகிறார்கள். இவர்கள் தலை காட்டினாலே, அதோ லஹரியா ரிப்போர்ட்டர் வந்துவிட்டார் என்று அரசு அதிகாரிகள் சொல்கிற அளவுக்கு வந்துவிட்டது. மேலும் பிரச்சினைகளும் தீர்க்கப்படுகின்றன. "ஒரு முறை ஒரு அரசு மருத்துவமனையில் குழாய் உடைந்திருந்தது. அதைப் படமெடுத்துச் செய்தி வெளியிடும் முன்னரே, அது சரிசெய்யப்பட்டது" என்கிறார் செய்தியாளர் சவிதா.

ஆனால், உள்ளடங்கிய ஊர்களைச் சேர்ந்த இந்தப் பெண்கள் சகஜமாகப் பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கும், பல்வேறு நபர்களைச் சந்திப்பதற்கும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் கபர் லஹரியா செய்தியாளர்களை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லித் தடுப்பது உண்டு. "ஆனால் எனது அம்மா எனக்கு ஆதரவாக இருக்கிறார்" என்கிறார் லக்னோவைச் சேர்ந்த ஆர்ஷி.

தங்களது பணி சமூகத்தால் மதிக்கப்படுவதாகவும் மாற்றங்களை நிகழ்த்தியிருப்பதாகவும் இந்தப் பெண் செய்தியாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள். இவர்களது செய்திகளால் தெருவிளக்குகள் சரி செய்யப்பட்டுள்ளன, தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் கிடைத்துள்ளது. சீதாமார்ஹி கிராமத்தில் சாதி இந்துக்களின் எதிர்ப்பை மீறி சத்துணவு சமைக்கும் தலித் பெண் அந்த ஊரிலேயே தங்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் இந்தப் பெண்கள், வழக்கமான ஊடகங்களைத் தாண்டிப் பெரும் பாய்ச்சலையே நிகழ்த்தியிருக்கிறார்கள்.

இரட்டைச் சவாரி

சீதாமார்ஹியில் இருந்து பஜிகா மொழியில் வெளியாகும் இதழின் செய்தியாளர் குடி (Guddi). அவளுடைய மகள் பெயர் லெஹர். கபர் லஹரியாவில் இருந்தே இந்தப் பெயரை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். வேலைக்காக அவர் தன் குழந்தையைத் தனியாக விட்டுச் செல்வது பற்றி அக்கம்பக்கத்தினர் குற்றம் சுமத்தியதால், அவர் தன் மகளையும் வேலைக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தார். அவரது கணவரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, குழந்தை வளர்ப்பில் தனக்கு உள்ள பங்கை ஆற்ற, அது அவசியம் என்று குடி கூறியுள்ளார்.

மூன்றாண்டுகளாகச் சம்பளம் பெறாத தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக செய்தி சேகரிக்க, ஒரு நாள் அவர் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. அந்த நேரம் பார்த்து லெஹர் நோய்வாய்ப்பட்டாள். அப்போது தனது கணவரையும் உடன் வரச் சொல்லி, செய்தி சேகரிக்கும் இடத்துக்கு மகளை அழைத்துச் சென்றிருக்கிறார் குடி. திரும்பி வந்தபோது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஐந்து நாள்களுக்குப் பின், அவர் எழுதிய செய்தி வெளியான பின், அந்தத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைத்தது அவருக்கு மகிழ்ச்சி தந்தது.

ஆதாரம்: Making waves with news, மீனா மேனன், தி இந்து (ஆங்கிலம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

18 mins ago

கல்வி

32 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

51 mins ago

இந்தியா

44 mins ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்