பருவத்தே பணம் செய்: சென்செக்ஸ், நிஃப்டி தெரியுமா?

By சி.முருகேஷ்பாபு

மனிதர்களைப் போலத்தான் சந்தை முதலீடும். இரண்டு விதமான குணங்களோடு இருக்கும். முதலாவது சந்தைப் போக்கை எதிர்த்துப் போராடி வெற்றிகரமாக முதலீடு செய்வது. இரண்டாவது சந்தையின் போக்கிலேயே போய் வெற்றிகரமாக முதலீட்டைச் செய்வது.

பங்குச் சந்தை முதலீட்டில் தினமும் கேள்விப்படும் வார்த்தை சென்செக்ஸ். சென்சிட்டிவ் இண்டெக்ஸ் என்தன் சுருக்கம்தான் சென்செக்ஸ்.

ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிடுவதற்கு அதன் தொழில் வளர்ச்சியைத்தான் பார்ப்போம். அதில் எல்லாத் தொழில்களையும் நாம் கவனித்துக்கொண்டிருக்க முடியாது என்பதால் அடிப்படையான ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையிலான துறைகளைத் தேர்வு செய்து, அந்தத் துறைகள் வளர்ந்தால் நாடும் வளர்வதாகக் கணக்கிடுகிறோம். அதுபோலத்தான் சென்செக்ஸும்.

பல்வேறு துறைகளிலிருந்து முப்பது முக்கியமான துறைகளைத் தேர்வு செய்து, ஒரு கூட்டு அமைக்கப்பட்டது. அந்தத் துறைகளில் கவனிக்கத்தக்க வளர்ச்சி கொண்ட நிறுவனங்களைத் தேர்வு செய்து, அந்த நிறுவனங்களை அளவுகோலாக வைத்துக்கொண்டு உருவாக்கப்பட்டதுதான் சென்செக்ஸ்.

நூறு புள்ளிகளோடு தொடங்கப்பட்ட இந்தக் கணக்கு, இன்று இருபத்தெட்டாயிரம் புள்ளிகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. சென்செக்ஸ் போலவே அடுத்து ஐம்பது நிறுவனங்களை உள்ளடக்கிய நிஃப்டி என்ற இன்னொரு ரேட்டிங்கையும் செயல்படுத்தியிருக்கிறார்கள். சென்செக்ஸ் என்னும் மும்பை பங்குச் சந்தை, நிஃப்டி என்னும் தேசிய பங்குச் சந்தை ஆகிய இரு ரேட்டிங் அமைப்புகள் நம் முதலீட்டு முடிவுகளுக்கு உதவிசெய்கின்றன.

சந்தையின் போக்கில் பயணித்து லாபம் பார்க்கும் முதலீட்டு மனநிலை பற்றிப் பார்க்கலாம். சென்செக்ஸ் என்று சொல்லப்படும் இந்த முப்பது நிறுவனங்களில் முதலீடு செய்தால் சந்தை ஏறும்போது எளிதாக லாபம் பார்த்துவிடலாம் என்பது உண்மைதான். இதில் துளியளவுகூட ஆபத்து இல்லை.

ஆனால், லாபம் பார்க்க நினைக்கும் முதலீட்டாளருக்கு இது சரியானதில்லை. சென்செக்ஸ் தொடங்கப்பட்ட நாளில் நூறு ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்றைக்கு இருபத்தெட்டாயிரம் ரூபாய்க்கு மேல் அது வளர்ந்திருக்கும். நாம் எந்த முயற்சியும் செய்திருக்க வேண்டியதில்லை. சென்செக்ஸ் குறியீட்டின் உள்ளே இருக்கும் நிறுவனங்களில் அதற்குக் கொடுக்கப்பட்ட வெயிட்டேஜுக்கு ஏற்ப முதலீடு செய்துவிட்டுச் சந்தையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் போதும். ஆனால், முதலீட்டாளரின், அதுவும் பங்குச் சந்தை முதலீட்டில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடும் துடிப்போடும் இருக்கும் முதலீட்டாளர் எப்படிக் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருக்க முடியும்?

சரி, சென்செக்ஸில் முதலீடு செய்வதில் என்ன தவறு? சென்செக்ஸ் பட்டியலுக்குள் இருக்கும் முப்பது நி|றுவனங்களும் அந்தந்த துறைகளில் ஜாம்பவான்களாக இருக்கும் நிறுவனங்கள். அவற்றின் சந்தை மதிப்பு எங்கோ உச்சத்தில் இருக்கும். அதில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் பெரிய தொகையும் வேண்டும்.

அதே சமயம், சந்தையில் பிரமாதமாகப் பிரகாசிக்கும் துறையில் உள்ள வளர்ந்து வரும் நிறுவனத்தின் பங்குகளின் விலை குறைவாக இருக்கும். ஆனால், துறையின் பிரகாசத்தால் அந்த நிறுவனம் ஏறுமுகத்திலும் இருக்கும். நமக்கும் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இப்போது உங்களால் ஒரு முடிவை எடுத்துவிட முடியும். பிரகாசமாகச் செயல்படக்கூடிய முப்பது துறைகளைத் தேர்வு செய்யமுடியும். சென்செக்ஸ் பட்டியலே அதைத்தான் சொல்கிறது. அதில் இருக்கும் முதல் நிலை நிறுவனத்தைத் தவிர்த்துவிட்டு அடுத்த நிலையில் அதே சமயம் வளரத் துடித்துக்கொண்டிருக்கும் நிறுவனத்தை நாம் தேர்வு செய்துவிட்டால் போதும். நம் முதலீட்டுத் தேர்வு முடிந்தது.

இந்த சென்செக்ஸ் பட்டியலில் துறைகள் மாறாமல் அப்படியே இருந்தாலும் அந்தத் துறைக்குள் முதலிடத்தைப் பிடித்து சென்செக்ஸ் பட்டியலில் தன் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்த எல்லா நிறுவனங்களுமே போட்டி போடுகின்றன.

இடம்பிடித்த நிறுவனத்தை விட்டுவிட்டுப் போட்டியில் அடுத்த நிலையில் இருக்கும் நிறுவனங்களைக் கண்டுபிடிக்கலாம். அதில் முதலீடு செய்யலாம்.

விலை குறைவான பங்குகள் என்று மறுபடி சொல்லக் காரணம் நம்மால் அதிக எண்ணிக்கையிலான பங்குகளை வாங்க முடியும் என்பதும் பரவலாகப் பல நிறுவனங்களில் நம் முதலீட்டைச் செய்ய முடியும் என்பதாலும்தான். அப்படி நம் முதலீட்டைப் பரவலாக்கும்போது சந்தை அபாயத்தைப் பெருமளவில் சமாளித்து விட முடியும் என்பதுதான் மிக முக்கியமான காரணம்.

அதேபோல ஜெயிக்கிற குதிரைகளைத் தேடித் தேடி பயணிக்காமல், இந்தக் குதிரை ஜெயிக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே கணித்து அதை நம்முடையதாக்குவது சந்தோஷத்தை இரட்டிப்பாக்கக்கூடிய விஷயம். அந்த வாய்ப்பையும் நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். நமக்கு லாபமும் அதிக அளவில் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. அதுவும் நமக்குச் சாதகமான விஷயம்.

நாம் கணித்து முதலீடு செய்த ஒரு நிறுவனம் வளர்ந்து சென்செக்ஸ் அல்லது நிஃப்டி பட்டியலுக்குள் இடம் பிடிக்கும்போது கிடைக்கும் சந்தோஷம் போனஸ்தானே!

ஆக, எப்படிப் பார்த்தாலும் விலை குறைவான, அதே நேரத்தில் பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கும் நிறுவனங்களைத் தேர்வு செய்வதுதான் மிக முக்கியமான பணி. அதில் தெரிந்துகொள்ள வேண்டிய சூட்சுமங்கள் குறித்துப் பேசலாம்.

(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

சினிமா

10 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

14 mins ago

சினிமா

32 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்