சட்டமே துணை: வீட்டு வேலைக்கு மதிப்பில்லையா?

By பி.எஸ்.அஜிதா

1950 ஜனவரி 26-ம் நாள் இந்தியா குடியரசாகி, அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தபோதே அரசியல் சாசன ஷரத்து 14, இந்தியாவில் ஆணும் பெண்ணும் சமம் என்றது. ஆனால் தீபிகாவின் பெற்றோர் இறந்த விபத்து வழக்கில் இது கேள்விக் குறியானது. தீபிகாவின் அம்மாவும் அப்பாவும் வாகனத்தில் சென்றபோது விபத்தில் இறந்துவிட, 5 வயது தீபிகா மட்டும் உயிர் பிழைத்துக்கொண்டாள்.

சாலை விபத்து இழப்பீடு வழக்கு நடந்தது. அதில் தீபிகாவின் தாய் என்ன வேலை பார்த்தார்? எத்தனை வயதில் இறந்தார்? அவருடைய உத்தேச வாழ்நாளில் எவ்வளவு சம்பாதித்திருப்பார் என்றெல்லாம் கணக்கில் கொண்டு, நஷ்ட ஈடு கணக்கு போடப்பட்டது. தீபிகாவின் அம்மா வேலைக்குச் செல்லவில்லை. சும்மாதான் வீட்டில் இருந்தார் என்று இன்சூரன்ஸ் நிறுவனம் அவருடைய வாழ்க்கைக்கும் வயதுக்கும் இழப்பீடாகக் கணவரின் இழப்பீட்டுத் தொகையில் பாதித் தொகையை முடிவு செய்ய முயன்றது.

தீபிகாவின் தாத்தா தன் மகள், மருமகனின் வியாபாரத்துக்குத் துணை நின்றதையும் வீட்டில் பாத்திரம் சுத்தப்படுத்துவது, துவைப்பது, சமைப்பது, குழந்தை, வயதானவர்களைப் பராமரிப்பது என இரவு வரை பண மதிப்புப் போட முடியாத பணிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். ஆனால் வீட்டு வேலை செய்யும் பணிக்கு மாதந்தோறும் தரப்படும் சிறு ஊதியத்தையே தாய் உயிரோடிருந்தால் மிச்சப்படுத்தியிருப்பார், எனவே ஒரு வீட்டுப் பணியாளரின் சம்பளத்துக்கு ஈடான ஊதியத்தைக் கணக்கிட்டு, மிகச் சொற்பத் தொகையை நஷ்ட ஈடாக வழங்கியதுதான் இதற்கு முன்னர் நடந்த விபத்து இழப்பீட்டு வழக்குகளில் முன்னுதாரணமாக இருந்தது.

ஆனால், படித்துவிட்டுத் தன் குழந்தைகளுக்காகவும் கணவருக்காக வும் பணிக்குச் செல்லாமல் வாழ்ந்த தீபிகாவின் தாய்க்குக் கணக்கிடப்பட்ட இழப்பீடு என்பது, அப்படி வீட்டுப் பணிகளை நாள் முழுவதும் தன்னலம் பாராமல் செய்த பல கோடிப் பெண்களின் மதிப்பற்ற உழைப்பை இழிவுபடுத்தியது.

காப்பீட்டு நிறுவனம் தீபிகாவின் தாய்க்கு இழப்பீடு கொடுக்கப்பட்டதே தவறு என்றும் ஒரே விபத்தில் பெற்றோர் இறந்ததால் தந்தைக்குத் தரப்பட்ட இழப்பீடே போதுமானது என்றும் வாதிட்டு, மேல்முறையீட்டைச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த வழக்குகள் வழக்கமாக இரு நீதிபதிகள் அமர்வுகளில்தான் விசாரிக்கப்படும். அந்த அமர்வில் ஒருவர் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், மற்றொருவர் நீதிபதி. டி.எஸ். சிவஞானம். வழக்கை அரசியல் சாசனத்தின் விழுமியங்களின் அடிப்படையிலும், ஆண்-பெண் சமத்துவக் கோட்பாடுகளிலும், நமது சமூக அமைப்பில் வருமானம் ஈட்டாத வீட்டுப் பணிகளைச் செய்யும் கோடிக்கணக்கான பெண்களின் உழைப்பு மதிப்பற்றதாக உள்ள நிலைமையையும் கணக்கில் கொண்டனர்.

சிடா ( CEDAW) என்ற பெண்கள் மீதான அனைத்து வகை பாகுபாடுகளையும் களைவதற்கான சர்வதேச ஒப்பந்தத்தையும் கருத்தில் கொண்டு, அளவிடற்கரியதாக இருக்கும் பெண்களின் உழைப்பின் ஊதிய மதிப்பு தீபிகா தாயாரின் இழப்பீட்டில் கணக்கிடப்படவில்லை என்றும், பெண்களின் வீட்டு உழைப்பில் பொருளாதார மதிப்பைக் கணக்கில் கொள்ளும் முறையை வகுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளார்கள்.

சிடா ஒப்பந்தப்படி ஒவ்வொரு நாடும் தங்களது சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் மதிப்பிடப்படாத வீட்டுப் பணிகளையும் சேர்த்தே கணக்கெடுக்க வேண்டும். எனவே, பெண்களின் வீட்டுப் பணிகளைப் பொருளா தார அடிப்படையில் கணக்கிட எல்லா அரசுகளும் ஆய்வுகளை மேற்கொண்டு, அவர்களின் உழைப்பையும் கணக்கில் கொண்டுதான் தேசிய உற்பத்தியை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. உலக நாடுகள் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டு, தங்களது உள்நாட்டுச் சட்டமாக்கவும் நடைமுறைப் படுத்துவதற்குமான உத்தரவாதம் அளித்தாலும் சமூகத்தில் எந்த ஒரு வீட்டிலும் இது உணரப்படவில்லை.

சமூகத்தின் பொதுப்புத்தியில் எந்தப் பெண்ணும் தங்களுடைய பணிக்கான பொருளாதார மதிப்பைத் தாங்களே உணர்வதில்லை. இந்த வழக்கில் தீபிகாவின் தாய், அவருடைய கணவர் வியாபாரத்தில் உதவியதற்கு எந்த ஆவணமும் இல்லை என்றும், எனவே, தீபிகாவின் தந்தையின் வியாபாரத்தில் தாய்க்குப் பங்கு இருப்பதாகக் கருதக் கூடாது என்றும் காப்பீட்டு நிறுவனம் வாதாடியதை மறுத்தார் நீதிபதி. கணவன் மனைவிக்கிடையில் வியாபார ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டியதில்லை என்றும் வாய்மொழி ஒப்பந்தமாகவே இருந்தாலும் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்றும் கூறி, தீபிகாவின் தாய்க்கு இழப்பீட்டை அதிகப்படுத்தி, 2009-ம் ஆண்டு இந்தியாவுக்கே ஒரு முன்னுதாரணமான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்தார்.

பெண்கள் குறித்த பெரும்பாலான தீர்ப்புகள் சமூகத்தில் நிலவுகின்ற பாரபட்ச தன்மையோடும் பாலியல் பாகுபாடு கொண்டதாகவும் உள்ளன. சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஆணும் பெண்களின் வீட்டுப் பராமரிப்புப் பணிகள் ஊதிய மதிப்பற்றதாகக் கருதப்படும் அடிப்படை உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் (Unpaid care work).

காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை ஒவ்வொரு பெண்ணும் செய்யும் பணிகளுக்கு நீங்களாகவே ஓர் ஊதியத்தை நிர்ணயித்துப் பாருங்கள். பல நேரங்களில் வெளியில் சென்று பத்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பதைவிடக் கூடுதலான ஊதிய மதிப்புப் பணிகளைப் பெண்கள் வீட்டில் செய்ததாலேயே அந்த ஆண் வெளியே சென்று பொருளீட்ட முடிகிறது என்பதை உணர்வீர்கள்.

பேருந்துப் பயணத்திலும் வரிசைகளிலும் பெண்களுக்குத் தனிவரிசை இருக்கிறதே என்று கேட்பவர்கள், பெண்களின் ஊதியமற்ற வீட்டுப் பணிகளுக்குக் கணக்குப் போடுவதுதான் முறையான சிந்தனை. சமமானவர்களுக்கு மத்தியில் சமத்துவம் என்பதுதான் சரியான கோட்பாடு. கல்வியிலும் பொருளாதாரத்திலும் கீழாக வைக்கப்பட்டுள்ள நிலையில், பெண்களின் உழைப்புக்கு ஊதியம் இல்லாத நிலையில் ஆண்களுக்குச் சமமானவர்களாகப் பெண்கள் இல்லை. எனவே சமத்துவம் என்பது முதலில் சமமாக ஆவதுதான், சமமானவர்களுக்கு மத்தியில்தான் சமத்துவம் கடைபிடிக்கப்பட வேண்டும்.

கட்டுரையாளர், வழக்கறிஞர்
தொடர்புக்கு: ajeethaadvocate@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

23 mins ago

இந்தியா

17 mins ago

சுற்றுச்சூழல்

23 mins ago

தமிழகம்

33 mins ago

சினிமா

39 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

57 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்