களம் புதிது: தங்க தேவதைகள்

By எஸ்.சுஜாதா

பிரேஸிலில் நடைபெற விருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக உலகமே தயாராகிக்கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் வரலாற்றைக் கொஞ்சம் திருப்பிப் பார்த்தால் கணிசமான அளவில் பெண்கள் பங்களித்திருப்பது தெரியும். அவர்களில் பலர் மாற்றி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கிறார்கள்!

அரை நூற்றாண்டுச் சாதனை!

ஒலிம்பிக் வரலாற்றில் மிக முக்கியமான பத்து வீரர்கள் பட்டியலில் இரண்டாவதாக இடம்பெற்றவர் ரஷ்யாவின் லரிசா லடினினா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த லரிசா, ஐந்து வயதில் ஆரம்பிக்க வேண்டிய ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகளை 12 வயதில் ஆரம்பித்தார். 19 வயதில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் தங்கம் பெற்றார்.

1956 மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டி. ஜிம்னாஸ்டிக்ஸில் கொடிகட்டிப் பறந்த ஹங்கேரியின் ஆக்னஸ் கெலிட்டியைத் தோற்கடித்துத் தங்கம் வென்றார். நான்கு தங்கம் உட்பட மொத்தம் ஆறு பதக்கங்கள் குவித்தார். பதக்க வேட்டையில் சோவியத் யூனியனின் கொடி பறக்க ஆரம்பித்ததில் லரிசாவுக்குக் கணிசமான பங்கு உண்டு.

குழந்தை பெற்று ஓராண்டிலேயே, ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார் லரிசா. மூன்று தங்கம் உட்பட ஆறு பதக்கங்களை அள்ளினார்.

முப்பது வயதில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இரண்டு தங்கம் உட்பட ஆறு பதக்கங்களைப் பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 18 பதக்கங்களைப் பெற்ற ஒரே வீரர் என்ற சிறப்பைப் பெற்றார் லரிசா. 48 ஆண்டுகள் வரை இவரது சாதனையை முறியடிக்க ஒரு வீரர் உருவாகவில்லை. 2012-ம் ஆண்டு அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ், 22 பதக்கங்கள் பெற்று, லரிசாவை அடுத்த இடத்துக்குத் தள்ளினார்.

“சாதனை என்பதே இன்னொருவர் முறியடிப்பதற்குத்தானே? ஃபெல்ப்ஸ் முறியடிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு பெண்ணின் சாதனையை ஆண் முறியடிப்பதற்கு அரை நூற்றாண்டு தேவைப்பட்டிருக்கிறது!” என்று தன் கருத்தைப் பதிவுசெய்தார் லரிசா.

இன்றும் அதிகப் பதக்கங்கள் பெற்ற பெண் என்ற சாதனை லரிசாவின் வசம் இருக்கிறது. 1958-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் பங்கேற்றபோது நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தார். கர்ப்பம் என்று தெரிந்தால் விளையாட அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், பயிற்சியாளருக்குக்கூட விஷயத்தைச் சொல்லவில்லை. ஆபத்து என்று தெரிந்தும் துணிச்சலுடன் விளையாடித் தங்கப் பதக்கங்கள் வென்றார்!

முறியடிக்க முடியாத சாதனை

ருமேனியாவைச் சேர்ந்த நாடியா காமன்சி, ஒலிம்பிக் வரலாற்றில் முதல் பத்து இடங்களில் இடம்பெற்ற இரண்டாவது வீராங்கனை. பாலர் பள்ளியில் படிக்கும்போதே ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியை ஆரம்பித்து விட்டார். பள்ளி இடைவேளைகளில் நாடியாவும் அவருடைய தோழியும் குட்டிக்கரணம் அடித்துப் பார்ப்பார்கள். அதைப் பார்த்த பயிற்சியாளர் பெல்லா கரோலி, இவரை மாணவியாகச் சேர்த்துக்கொண்டார். கடின உழைப்பும் ஆர்வமும் ஒன்பது வயதில் தேசிய அளவில் வெற்றியை ஈட்டித் தந்தன. பத்து வயதில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்.

1976-ம் ஆண்டு கனடாவின் மாண்ட்ரீல் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 14 வயது நாடியா கலந்துகொண்டார். ஜிம்னாஸ்டிக்ஸில் பல பிரிவுகளில் பங்கேற்றார். சமநிலை இல்லாச் சட்டங்களில் பத்துக்கு 10 (perfect 10) என்ற முழுப் புள்ளிகளைப் பெற்றார்! நவீன ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறை இந்தச் சாதனையைச் செய்தவர் நாடியா. அதுவரை யாரும் இப்படியொரு சாதனையை நிகழ்த்தாததால் நான்கு இலக்கப் புள்ளிகள் பட்டியல் தயார் செய்யப்படவில்லை. நாடியாவின் சாதனையை நம்ப முடியாததாலும் புள்ளிகள் போட வசதி இல்லாததாலும் 10.00 என்று போடுவதற்குப் பதில் 1.00 என்று போடப்பட்டது. எல்லோரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். நடுவர்கள் எழுந்து நின்று நாடியாவின் சாதனையை அங்கீகரித்த பிறகே எல்லோரும் பாராட்டினர். மூன்று தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பெற்று, பெண்கள் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். தான் பங்கேற்ற பத்துப் போட்டிகளில் ஏழில் முழுப் புள்ளிகளைப் பெற்று உலகத்தைப் பிரமிக்கவைத்தார் நாடியா!

1980-ம் ஆண்டு நடைபெற்ற மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளிலும் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் பெற்றார்.

18 வயதான வர்கள்தான் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற கட்டுப்பாடு வந்ததால், நாடியாவின் 14 வயதில் ‘பர்ஃபக்ட் 10’ என்ற சாதனையை முறியடிக்க இனி வாய்ப்பில்லை.

அதிவேகமாக ஓடிய போலியோ கால்கள்!

அமெரிக்காவின் தடகள வீராங்கனை வில்மா ருடால்ஃப். அவர் பெற்றோருக்குப் பிறந்த 22 குழந்தைகளில் 20-வது குழந்தை. ஏழ்மையான குடும்பம். நான்கு வயதில் வில்மா, போலியோவால் பாதிக்கப்பட்டார். இடது கால் செயல் இழந்தது. மருத்துவர் ஸ்பெஷல் மசாஜ் தெரபி ஒன்றைத் தினமும் பல முறை செய்யச் சொன்னார். வில்மாவின் அம்மா, தன்னுடைய குழந்தைகளுக்கு தெரபியைக் கற்றுக் கொடுத்து, வில்மாவைக் கவனித்துக்கொள்ளச் சொன்னார். அம்மா பேச்சைத் தட்டாத பிள்ளைகள், தினமும் மருத்துவர் சொன்னதைவிட அதிக முறை தெரபியைச் செய்து வந்தனர். வில்மாவின் கால் வலுப்பெற்றது. செயற்கைக் கால் வைத்து நடக்கும் அளவுக்கு முன்னேறினார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவப் பரிசோதனைக்குச் சென்ற வில்மா, திடீரென்று தன் செயற்கைக் காலை நீக்கினார். தானாகவே நடக்க ஆரம்பித்தார். மருத்துவர் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்துபோனார். செயற்கைக் கால் அல்லது சக்கர நாற்காலியில் வாழ்நாளைக் கழிக்க வேண்டிய வில்மா, குடும்பத்தினரின் கவனிப்பால் சொந்தக் காலில் நடக்க ஆரம்பித்துவிட்டார்!

12 வயதில் அக்கம்பக்கத்துக் குழந்தை களிடம் பந்தயம் வைத்து ஓட ஆரம்பித்தார் வில்மா. மீண்டும் மோசமான காய்ச்சலால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மீண்டு, கூடைப் பந்து வீராங்கனை யாக மாறினார். பள்ளி இறுதியில் நடைபெற்ற பயிற்சி ஓட்டங்களில் வில்மா வெற்றி பெற்றார். மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தான் கலந்துகொண்ட முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே வெண்கலப் பதக்கம் பெற்றுத் திரும்பினார்.

எல்லோரும் வெண்கலப் பதக்கத்தைத் தொட்டு தொட்டுப் பார்த்ததால், அது பொலிவிழந்தது. அடுத்த முறை பளபளப்பான தங்கப் பதக்கம் வாங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டார் வில்மா.

1960-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயங்களில் மூன்று தங்கப் பதக்கங் களைப் பெற்றார்! 100 மீட்டர் ஓட்டத்தில் 11 விநாடிகளிலும் 200 மீட்டர் ஓட்டத்தில் 23.2 விநாடிகளிலும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 44.5 விநாடிகளிலும் ஓடிப் புதிய சாதனைகளைப் படைத்தார் வில்மா!. ‘உலகின் அதிவேகமான பெண்’ என்ற பட்டத்தையும் பெற்றார். போலியோவை வென்று, உலக சாதனைகளைப் படைத்து, ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்குப் பெருமை தேடிக் கொடுத்தவர் வில்மா ருடால்ஃப்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

மேலும்