போகிற போக்கில்: சிறிய பொருளில் பெரிய லாபம்

By ப்ரதிமா

இட்லி - சாம்பார், பூரி - கிழங்கு, சப்பாத்தி - குருமா, தோசை - சட்னி, பலவித இனிப்புகள், வட்ட வடிவ கேக்கில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட துண்டு, பர்கர், பீட்ஸா, ஐஸ்கிரீம், சாலட் இப்படி இன்னும் பல உணவு வகைகளால் நிறைந்திருக்கிறது அந்த மேஜை. அவற்றைப் பார்க்கலாம், ரசிக்கலாம். ஆனால் ருசிக்க முடியாது. காரணம் அவை எல்லாமே நம் உள்ளங்கையில் அடங்கிவிடக்கூடிய மினி யேச்சர்கள்.

அவற்றை செயற்கைக் களிமண் மூலம் அத்தனை தத்ரூபமாக உருவாக்கியிருக்கிறார் ரேகா முகுந்த். சென்னை ஆதம்பாக்கத்தில் இருக்கும் ரேகாவின் வீடு முழுக்க நிறைந்திருக்கின்றன கண்களை நிறைக்கும் கலைப் பொருட்கள்.

திருமணத்துக்கு முன் வீட்டில் இருக்கிறவர்களுக்கு மட்டும் ஃபேஷன் நகைகள் செய்து தருவதோடு ரேகாவின் கலையார்வம் நின்றுவிட்டது. திருமணத்துக்குப் பிறகு 2000-ல் அமெரிக்கா சென்றவருக்குப் புதிய பாதையைக் காட்டின அங்கிருந்த கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் புத்தகங்களும். அமெரிக்கத் தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பான கைவினைக் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்தே பல விஷயங்களைக் கற்றுக் கொண்டார். இந்தியா திரும்பிய பிறகு 2006-ல் ‘அபிஜெயா கிரியேஷன்ஸ்’ என்ற பெயரில் கைவினைப் பொருட்களைச் செய்து விற்பனை செய்யும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

"நான் சி.டி.எஸ் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே பகுதி நேரமாக மணிகளை வைத்து நகைகள் செய்து விற்பனை செய்தேன். என் கலைப் பொருட் களுக்கு தட்சிணசித்ராவிலும் நல்ல வரவேற்பு இருந்தது. வேலையை விட்ட பிறகு முழு நேரமாக கைவினைக் கலைப் பொருட்கள் செய்தேன். சாக்லெட் வகைகளையும் செய்து விற்பனை செய்கிறேன்" என்று சொல்லும் ரேகா, வீட்டில் பயிற்சி வகுப்புகளும் எடுக்கிறார்.

பொம்மைகளுக்கு வரவேற்பு

பொருட்களைச் செய்வதில் எத்தனை கவனம் எடுத்துக் கொள்கிறாரோ அதே கவனத்துடன் அவற்றைச் சந்தைப்படுத்தவும் செய்கிறார். கைவினைப் பொருட்களுக்கு மதிப்பு அதிகமிருக்கும் கண்காட்சிகளைத் தேர்ந்தெடுத்து அங்கே ஸ்டால் வைக்கிறார். ஒரே மாதிரியான வகுப்பு எடுத்தால் கற்றுக் கொள்கிறவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பதால் சீசனுக்கு ஏற்ப வெவ்வேறு பிரிவுகளில் பயிற்சி தருகிறார்.

செயற்கைக் களிமண்ணில் இவர் செய்யும் மினியேச்சர்களுக்கு நல்ல வரவேற்பு. இந்த வருட நவராத்திரியின் போது மினியேச்சர் பொம்மைகள் செய்ய அதிகமாக ஆர்டர் கிடைத்ததாகச் சொல்லும் ரேகா, முழு மூச்சுடன் கைவினைப் பொருட்கள் செய்தால் மாதத்துக்குக் குறைந்தது ரூபாய் முப்பது முதல் நாற்பதாயிரம்வரை சம்பாதிக்கலாம் என்று நம்பிக்கை தருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 mins ago

வணிகம்

21 mins ago

தமிழகம்

25 mins ago

சுற்றுலா

29 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

39 mins ago

கல்வி

42 mins ago

கல்வி

8 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

19 secs ago

தமிழகம்

1 hour ago

மேலும்