விவாதம்: ஆடை பெண்ணின் உரிமையில்லையா?

By அன்பு

அரசு அலுவலகங்களின் நல்லொழுக் கத்தைப் பாதிக்காத வகையில் பெண் ஊழியர்கள் முறையான ஆடைகளை அணிய வேண்டும் எனத் தமிழகத் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கானப் பணியாளர் கையேட்டில் ஆடைகள் அணிவது தொடர்பாக சில திருத்தங்களைச் சில நாட்களுக்கு முன்பு கிரிஜா வைத்தியநாதன் மேற்கொண்டார். அதில், ‘அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஆண், பெண் ஊழியர்கள் அனைவரும் தூய்மையான நேர்த்தியான ஆடை அணிய வேண்டும்.

பெண் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு புடவை, சுடிதார் ஆகியவை மட்டும் அணிந்து வர வேண்டும். புடவை தவிர்த்து மற்ற உடைகள் அணியும்போது கண்டிப்பாக துப்பட்டா போட வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

விடையில்லாக் கேள்வி

தலைமைச் செயலாளரின் இந்த உத்தரவு அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது பலதரப்பட்ட மக்கள் மத்தியிலும் விவாதத்தை எழுப்பியுள்ளது. தமிழகத்தில்  பெண்களுக்கான பாரம்பரிய ஆடையாகப்  புடவை கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் பெண்களைப் புடவை அணிந்து கொண்டு அலுவலகங்களுக்கு வரச்சொல்வதை ஏற்றுக்கொள்ளும் ஒருசாரர்கூட, ஆண்களை அவர்களது பாரம்பரிய உடையாகக் கருதப்படும் வேட்டி, சட்டையை அணியச் சொல்வதில்லை. அவர்களை மட்டும் மேற்கத்திய பாணியிலான பேன்ட் சட்டையை அணிந்துவரச் சொல்கிறார்கள்.

நாட்டின் முன்னேற்றம் குறித்த விவாதங்களைவிடப் பெண்கள் குறித்த விவாதங்களே இங்கே அதிகமாக  நடைபெறுகின்றன. பெண்கள் எதை உடுத்த வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என ஆயிரமாயிரம் விவாதங்கள். கேட்டால் பெண்களின் பாதுகாப்புக்குத்தான் இவையெல்லாம் என்பார்கள். ஆடையில்தான் பெண்களின் பாதுகாப்பு உள்ளது என்றால் ஏன் பச்சிளம் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு இந்தப் பெண் பாதுகாவலர்களிடம் பதில் இருக்காது.

நல்லொழுக்கம் எதில் உள்ளது?

‘அலுவலகத்தின் நல்லொழுக்கத்தை பாதிக்காத வகையில் ஊழியர்கள் ஆடை அணிய வேண்டும்’ என அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஊழியர்களின் நல்லொழுக்கம் என்பது ஆடையில்தான் உள்ளதா? புடவையை அணிந்துவரும் பெண் ஊழியர்கள் மட்டும்தான் ஒழுக்கமானவர்களா? சுடிதார் அல்லது குர்தாவின் மேல் துப்பட்டா போடாமல் வரும் ஊழியர்கள் ஒழுக்கம் கெட்டவர்களா? இங்கு ஒழுக்கம் என்று எதை வரையறுக்கிறார்கள்? இந்தக் கேள்விதான் தற்போது பெண்ணியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் போன்ற பெயர்களில் பெண்களைச் சொத்தாகக் கருதும் பிற்போக்குத்தனத்தின் வெளிப்பாடாகத்தான் அரசின் நடவடிக்கை உள்ளது என்கிறார்கள் பெண்ணியவாதிகள். ஆடை உரிமை என்பது அவரவர் தேர்வு. ஆடையின் தேவையை நாம் செய்யும் வேலை, சூழ்நிலை, பருவநிலை போன்றவையே தீர்மானிக்கின்றன.

ஆடை அணிவது தொடர்பான அரசின் உத்தரவுக்கு முன்பே நம் சமூகத்தில் ஆடைச் சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது என குரல் ஒலித்துக்கொண்டுதான் உள்ளது. ஆனால், அதே நேரத்தில் தாங்கள் தோள் சீலை போராட்டத்தின் வரலாற்றையும் மறக்கவில்லை என்கிறார்கள் ஆடை சுதந்திரத்துக்காகக் குரலெழுப்புவோர்.

பெண்கள் போர்வையைச் சுற்றிக்கொண்டு போனாலும் பார்க்கிறவர்கள் பார்க்கத்தான் செய்வார்கள் என்ற சமூகத்தில் நாம் வாழ்கிறோம். பெண்கள் எதை உடுத்த வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக அவர்களைப் போகப் பொருளாக பார்க்கும் இந்தச் சமூகத்தின் பார்வையைத்தான் மாற்ற வேண்டும்.

 

நீங்க என்ன சொல்றீங்க?

தமிழக அரசின் ஆடைக் கட்டுப்பாடு உத்தரவு குறித்து உங்களுடைய கருத்து என்ன? எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்