என் பாதையில்: நெகிழவைத்த கனடா கொலு!

By செய்திப்பிரிவு

நவராத்திரி வந்துவிட்டாலே கனடாவில் இருக்கும் என் தங்கையின் கொலு அனுபவம்தான் என் நினைவுக்கு வரும். அவள் திருமணமாகி வெளிநாடு போகவேண்டும் என்றதும் உறவினர்களையும் நண்பர்களையும் பிரிந்து செல்ல எவ்வளவு வருத்தப்பட்டாளோ அதே அளவு கொலுவை மிஸ் செய்வதற்கும் வருந்தினாள்.

அவளின் கவலையை உணர்ந்து வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல ஏற்றாற்போல எடை குறைவான பொம்மைகளை வாங்கித் தந்தோம். அவற்றுடன் வெளிநாட்டுப் பொம்மைகளையும் கலந்து புதுவிதமாகக் கொலு வைக்கலாம் என்ற ஆலோசனையைக் கேட்டு அவள் ஓரளவு நிம்மதியடைந்தாள். அரைமனதோடு சாஸ்திரத்துக்கு இரண்டு பொம்மைகளை எடுத்துச் சென்றாள்.

அவள் அங்கே போன உடனேயே நவராத்திரி வந்துவிட்டது. ஒரு சிறிய பலகையில் எடுத்துப்போன இரண்டு பொம்மைகள், கலசம் அவற்றுடன் அங்கே வாங்கிய பொம்மைகளை சேர்த்து கொலு வைத்து விட்டாள். சிறிய கொலு என்பதால் எப்படி எல்லோரையும் அழைப்பது என்று அவளுக்குத் தயக்கமாக இருந்தது.

கோயிலில் கொலு வைத்திருக்கிறார்கள் என்றதும் அங்கே போனாள். அங்கே இவளுக்கு அறிமுகமே இல்லாத பெண்மணி தன் வீட்டு கொலுவுக்கு வரும்படி அழைத்திருக்கிறாள். இவளை மட்டுமல்லாமல் கோயிலில் நிறையப் பேரை அழைத்திருக்கிறாள். கிட்டத்தட்ட 20 தம்பதிகள் காரில் அவள் வீட்டுக்குப் போனார்கள். எல்லோருக்கும் ஜூஸ், வடை, கேசரி கொடுத்து உபசரித்திருக்கிறாள். ஏதோ இந்தியர்களுக்கான கெட் டுகெதர் போல எல்லோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டு சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

கடைசியில் அனைவருக்கும் மிகவும் பிரியத்துடன் தாம்பூலம்,ரோஜாப்பூக்கள் கொடுத்திருக்கிறாள் அந்தப் பெண். அப்போதுதான் பேச்சு சுவாரஸ்யத்தில் கொலு பார்க்க மறந்துவிட்டோமே என்று ஞாபகம் வந்து, “கொலு எங்கே?”என்று கேட்டிருக்கிறார்கள். “ஓ , நீங்கள் பார்க்கவில்லையா? இதுதான் கொலு” என்று பிளாஸ்டிக் மாவிலையும் தேங்காயும் வைத்து சந்தனம் குங்குமம் வைத்த ஒரு கலசத்தைக் காட்டினாளாம் அந்தப் பெண். என் தங்கைக்கோ வியப்பு, அதிர்ச்சி, சிரிப்பு எல்லாம் கலந்த உணர்வு. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டிருக்கிறாள்.

பின்னால் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அந்தத் தோழியின் உயர்ந்த குணம் புரிந்தது. அவள் கலசத்தையே கொலுவாக, அம்பாள் வடிவமாக, பக்திபூர் வமாகப் பார்த்திருக்கிறாள். எல்லோரையும் அம்பாள் வடிவமாகவே நினைத்து, தெரியாதவர்களைக்கூட அன்போடு தாம்பூலத்துக்கு அழைத்திருக்கிறாள். சிரமப்பட்டுத் தனி ஆளாக உணவு தயாரித்து எல்லோருக்கும் சிநேக உணர்வுடன் கொடுத்திருக்கிறாள். பலருக்கிடையே நட்பு ஏற்பட உதவும் பாலமாக இருந்திருக்கிறாள். அவள் வீட்டு கொலுவுக்குத் தனி மகிமை இருப்பது புரிந்தது. அன்றிலிருந்து கொலுவின் அளவு பற்றி என் தங்கை கவலைப்படுவதே இல்லை. தன்னால் முடிந்த அளவு எல்லோரையும் அழைத்து தாம்பூலம் கொடுக்கிறாள்.

- ரம்யா சங்கரநாராயணன், பெங்களூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்