இல்லம் சங்கீதம் 26: பெண்ணுக்கு மட்டுமல்ல பிரசவ வலி

By எஸ்.எஸ்.லெனின்

முற்றத்து கல்குறட்டில்

புளி நறுக்கும் அம்மா சொல்கிறாள்

‘குளிக்கவே பிடிக்கலை’ என்று.

வேப்பம்பூ ஆயும் பாட்டி,

‘தீட்டு நின்னவுடன் எனக்கும் அப்படித்தான் இருந்தது’ என.

புத்தகத்தில் இருந்து திரும்பிப் பார்க்கிறேன்,

‘நான் என்ன ஆகப் போகிறேன்?’

- இந்திரா பாலசுப்ரமணியன்

திருமணமாகி ஆறு மாதம்தான் ஆகியிருந்தது. மனைவி ரேகா கர்ப்பமாக இருந்ததால் அவளைப் பிரிய மனமில்லை. இருந்தாலும், வேறு வழியின்றிப் பிழைப்புக்காக வெளிநாடு சென்றான் வெங்கடேஷ். குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் மனைவியையும் குழந்தையையும் பார்க்க ஆவலுடன் ஊர் திரும்பியவனுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே பச்சை உடம்புக்காரியான ரேகாவை அவளுடைய பெற்றோரே தனியறையில் சங்கிலியால் கட்டிப் போட்டிருந்தனர். ரேகா தலைவிரி கோலமாக இளைத்திருக்க, தாய்ப் பாலின்றி சிசுவும் தவித்துக் கிடந்தது.

‘அவளுக்குப் பேய் பிடித்துவிட்டது. உனக்கு வேறு திருமணம் செய்துவைக்கிறோம்’ என வெங்கடேஷின் பெற்றோர் சொன்னார்கள். ரேகா வீட்டினரோ ‘குழந்தை பிறந்ததும் மகளுக்குச் சித்தம் கலங்கிவிட்டது’ என்று மாந்திரீகப் பூஜைகளால் ரேகாவை வதைத்து வந்தனர். அனைவரையும் புறந்தள்ளிய வெங்கடேஷ், மனைவியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான். மருத்துவக் கவனிப்பாலும் அவனுடைய அரவணைப்பாலும் இரண்டே வாரத்தில் ஆச்சரியமாக ரேகா மீண்டுவந்தாள்.

மூட நம்பிக்கையைத் தவிர்ப்போம்

குழந்தை பெற்ற பெண்களைத் தாக்கும் போஸ்ட்பார்டம் சைக்கோஸிஸ் (postpartum psychosis) எனும் மனநலப் பாதிப்புக்கு ரேகா ஆளாகியிருக்கிறார் என்று மருத்துவர் தெரிவித்தார். பிறந்த குழந்தையின் பாலினத்தை முன்னிறுத்தித் தன் வீட்டினர் கொடுத்த நெருக்கடியும் தன் அரவணைப்பின்மையும் ரேகாவின் பெற்றோரின் அறியாமையும் மூடநம்பிக்கையும் தன் மனைவியின் மனநலப் பாதிப்பை மிகவும் சிக்கலாக்கியிருந்தது வெங்கடேஷுக்குப் புரிந்தது.

அதைத் தொடர்ந்து உள்ளூரிலேயே வேலை தேடிக்கொண்டதுடன் தனிக்குடித்தனமாக மனைவியை அரவணைத்துச் சென்றான். அடுத்த சில ஆண்டுகளில் அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தபோது எந்தவொரு மனக்கிலேசமும் இன்றிக் குழந்தைப்பேறையும் அதையொட்டிய ஆரம்ப மாதங்களையும் ரேகா எளிதில் கடந்தாள்.

போஸ்ட்பார்டமும் அதன் அறிகுறிகளும்

பிரசவமான பெண்களிடம் அடிக்கடி எரிச்சல், கவலை, தூக்கமின்மை, பசியின்மை போன்றவை தென்பட்டால் அவற்றைக் குடும்பத்தினர் இயல்பாக எதிர்கொள்ள வேண்டும். மாறாக, அலட்சியப்போக்கு என இடித்துக்காட்டுவதோ வற்புறுத்துவதோ இளம் தாயின் மனநலனை மேலும் பாதிக்கக்கூடும். பிரசவத்தை எதிர்கொள்ளும் பெண்களில் பெரும்பாலானோருக்கு ‘போஸ்ட்பார்டம் ப்ளூஸ்’ எனப்படும் இந்த ஆரம்பகால மனநல ஊசலாட்டங்கள் சாதாரணமாக வந்து மறையக்கூடும்.

ஆனால், யாருடனும் பேசாதிருப்பது, சாப்பிடாமல் இருப்பது, குழந்தைப் பராமரிப்பில் அலட்சியம் காட்டுவது, சில நேரம் குழந்தையைத் துன்புறுத்துவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை எச்சரிக்கையாகக் கையாள வேண்டும்.

ஏனென்றால், அவர்கள் ‘போஸ்ட்பார்டம் டிப்ரஷன்’ எனப்படும் மன அழுத்தத்தின் பிடியில் சிக்கியிருக்கலாம். இவர்களுக்குக் குடும்பத்தினரின் அதிகப்படியான கவனிப்பும் அரவணைப்பும் தேவை. மன அழுத்தம் மோசமானால் மருத்துவ உதவியைப் பெறத் தயங்கக் கூடாது. இல்லையென்றால், அவர்கள் இந்த மன அழுத்தத்தின் உச்சமான ‘போஸ்ட்பார்டம் சைக்கோஸிஸ்’ எனப்படும் மனப்பிறழ்வின் பிடியில் சிக்கக்கூடும். அரிதாகவே இது நிகழும் என்றாலும், முந்தைய நிலைகளில் போதுமான அரவணைப்பின்மை, ரேகாவின் பெற்றோரைப் போன்று மூடநம்பிக்கைகளில் மூழ்கடிப்பது போன்றவை அதற்கு இட்டுச் செல்லலாம்.

அப்போது அவர் தன்னிலை மறப்பார். முற்றிலும் தூக்கமிழப்பார், கையில் கிடைத்ததைத் தூக்கி வீசுவார், இது என் குழந்தையே இல்லை என ஆவேசமும் அடைவார். இதனால், குழந்தையின் உயிருக்கே இவர்களால் ஆபத்து நேரக்கூடும். உடனடியாக மனநல சிகிச்சை அளித்தால் மட்டுமே அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு மீட்டெடுக்க முடியும்.

சிகிச்சை முறைகள்

“இந்த மூன்று மனநலப் பாதிப்புகளில் முதலாவது தானாகவே குணமாகிவிடும். மன அழுத்தம் சார்ந்த இரண்டாவது பாதிப்பு கவுன்சலிங் மூலமே குணமாகும். மூன்றாவதான மனப்பிறழ்வு நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தன்னையே மறக்கும் சூழல் ஏற்படுவதால் அவர்களுக்கு மனநல சிகிச்சையும் மருந்தும் அவசியம்” என்று சொல்கிறார் மனநல மருத்துவர் ராஜாராம். இந்த மூன்று நிலை மன ஊசலாட்டங்கள் வருவதைத் தடுக்கப் பெரிதாக முன்னெச்சரிக்கை உபாயம் எதுவுமில்லை.

எப்படி முறையான ஊட்ட உணவும் உடற்பயிற்சியும் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்த்துக்கொள்கிறதோ அதைப் போன்று உணர்வுரீதியிலான ஊட்டம் இதைச் சமாளிக்க ஓரளவு கைகொடுக்கலாம். கணவரின் மனமார்ந்த அரவணைப்பு, புகுந்த வீட்டார் மருமகளை மகளாக நடத்துவது போன்றவை உணர்வுரீதியிலான ஊட்டத்தைத் தரும்.

விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்

உலக உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் மாதம் முழுவதும் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். இந்தியாவில் பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று கடந்த வாரம் நாடு முழுக்கக் கவனம் ஈர்த்தது. பிரசவத்தைத் தொடர்ந்து பெண்ணைப் படுத்தும் ‘போஸ்ட்பார்டம்’ எனும் மனநல ஊசலாட்டம் தொடர்பான அந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

குழந்தை பெறும் இளம் தாய்க்கு மட்டுமல்ல; அவளுடைய கணவன், குடும்பத்தினர் என அனைவருக்கும் போஸ்ட்பார்டம் குறித்த விழிப்புணர்வு அவசியம். உலக சுகாதார நிறுவனத்தின் கடந்த ஆண்டு அறிக்கையின்படி உலகில் நூற்றுக்கு 30 முதல் 75 தாய்மார்கள் இந்தப் பாதிப்புக்குக் குழந்தை பிறந்த பின் ஒரு சில நாட்களுக்கு ஆளாகிறார்கள். இதே போன்ற மற்றோர் ஆய்வு, இந்தியாவில் ஐந்தில் ஒரு பெண் தனது முதல் பிரசவத்தின்போது இந்தப் பாதிப்புக்கு ஆளாவதாகத் தெரிவிக்கிறது.

11CHLRD_வீணா ஜெகராம்rightசுமையைப் பகிர்ந்துகொள்வோம்

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரான வீணா ஜெகராம், “கருத்தரித்த பெண்ணுக்கு தைராய்டு, ரத்தசோகை தொடர்பான பரிசோதனைகள் அவசியம். இந்த இரண்டும் சீராக இருந்தால் பிரசவத்துக்குப் பிறகு ஏற்படுகிற மனநல ஊசலாட்டத்தை அவர்களின் உடல் ஓரளவு தானாகவே சமாளித்துக்கொள்ளும். இவை தவிர்த்து ஹார்மோன்களின் செயல்பாடுகள் காரணமாகவும் மனநல ஊசலாட்டம் ஏற்படலாம்.

குழந்தைப்பேறு என்பது தனியொரு பெண்ணை மட்டும் சார்ந்ததல்ல. அது அவருடைய கணவர், இருவீட்டார், சுற்றம், சூழல் எனப் பெரும் குழுவின் ஒத்துழைப்பைச் சார்ந்தது. முக்கியமாகக் கணவரின் அரவணைப்பு, உணர்வுரீதியாக அப்போது அதிகம் தேவை. எனவே, பழியைப் பெண்ணின் மீது போடாமல் இயற்கையின் போக்குக்கு வழிவிட்டு, குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள்வரை தாயையும் சேயையும் கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்துக்கொள்வது அவசியம்” என்கிறார்.

பெண்மையை அரவணைப்போம்

கருத்தரித்த நொடி தொடங்கி பெண்ணின் உடலில் ஹார்மோன்களின் கலவையால் நிறைய மாற்றங்கள் நடக்கின்றன. கருவுற்ற பிறகு அந்தக் கருவுக்கு ஒன்பது மாதங்கள் ஊட்டமளித்து அதை ஒவ்வொரு செல்லாக போஷிக்கும் படைப்பின் பணியில் பக்க விளைவுகள் அதிகம். அதைத் தவிர்க்கவே நமது பாரம்பரியத்தில் வளைகாப்பு, ஊட்டம், தாய் வீட்டில் பிரசவம் எனப் பிள்ளைத்தாச்சியைப் பேணிப் பாதுகாக்கப் பல சம்பிரதாயங்களை வைத்திருக்கிறோம். ஆனால், பணி நிமித்தம் கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனிக் குடும்பங்களாகிவிட்டதால், பெண்கள் பேறுகாலத்தில் அரவணைப்பு இழந்து போஸ்ட்பார்டம் பாதிப்புக்கு எளிதில் ஆளாகின்றனர்.

பிரசவ காலத்தில் மட்டுமின்றி மாதவிடாய், மெனோபாஸ் காலங்களிலும் பெண்களுக்கு மனநிலையில் தடுமாற்றங்கள் ஏற்படும். அப்போதெல்லாம் குடும்பத்தினர் முடிந்தவரை அனுசரணையுடன் அவர்களை அரவணைக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் அடிப்படையில் உயிரியல் சார்ந்த மாற்றங்களே என்பதைப் பெண்களும் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் புரிதல் அவர்களுக்குச் சிரமங்களைச் சுயமாக எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தையும் தைரியத்தையும் கொடுக்கும்.

(மெல்லிசை ஒலிக்கும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்