தேர்தல் களம்: பெண்களுக்கான தனிக் குரல்

By என்.சன்னாசி

தேர்தலில் சுயேச்சைகள் மீது மக்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இருக்காது. பெரிய கட்சிகளோடு போட்டியிட்டு, சுயேச்சைகளால் ஜெயிக்க முடியுமா என்ற நினைப்பிலேயே பலர் சுயேச்சைகளுக்கு வாக்களித்தத் தயங்குவர். ஆனால், கொண்ட கொள்கையில் உறுதியும் எதையும் சாதிக்க முடியும் என்ற தெளிவும் இருந்தால் சுயேச்சையாக நின்றாலும் ஜெயிக்கலாம் எனப் புன்னகைக்கிறார் நாகஜோதி.

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அவற்றைத் தடுக்கவும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்ற சமுதாயத்தை அமைக்கவும்  மக்களவையில் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டியிருக்கிறது.

ஏற்கெனவே பெண் பிரதிநிதிகள் இருந்தாலும் அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்கிறபோது, அவர்கள் எழுப்பும் குரல் நாடாளுமன்றத்துக்குள்ளேயே முடங்கிவிடும். தனது குரல் பெண்களுக்கான தனித்த குரலாக ஒலிக்க வேண்டும் என்ற சிந்தனையில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் ‘தேசியப் பெண்கள் கட்சி’யின் மாவட்டத் தலைவர் கே.நாகஜோதி.  மதுரை திருநகரைச் சேர்ந்த இவர், சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறார்.

மக்களுக்கு எல்லாம் தெரியும்

பெண்களும் குழந்தைகளும் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டுவரும் நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, களத்தில் விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார் அவர். “பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்களே என்னை, செவிலியர் பணியிலிருந்து சமூகப் பணிக்கு மாற்றின. பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமையைத் தடுக்க மக்களவையில் குரல் எழுப்ப வேண்டும் என்பதே என் நோக்கம்.

பெண் பிரதிநிதிகள் மக்களவையில் ஆறு சதவீதம்வரை இருந்தாலும், பெண்களின் பிரச்சினைக்குப் போதுமான அளவு குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு அடிப்படைத் தேவைக்கும் மக்கள் போராட வேண்டியிருக்கிறது. எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் சரியாக இருந்தால் இந்தத் தேவையிருக்காது” என்று சொல்லும் நாகஜோதி மதுரையை ‘மது இல்லா மதுரை’யாக மாற்ற விரும்புவதாகச் சொல்கிறார். “சிறுவர்களுக்கும் மதுபானம் சாதாரணமாகக் கிடைக்கும் நிலை இங்கே உள்ளது. கந்துவட்டிக் கொடுமையால் ஏழைப் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மதுவால் சிலர் தவறான வழிக்கும் தள்ளப்படுகின்றனர். தாயின் பராமரிப்பில் மட்டும் வளரும் குழந்தைகளுக்கு 50 சதவீத கல்விக் கட்டணச் சலுகை வழங்க வேண்டும். பின்தங்கிய நிலையிலுள்ள 60 சதவீதப் பெண்களுக்குத் தொழிற்பயிற்சி கொடுத்து அவர்கள் சொந்தக் காலில் நிற்க வழிவகை செய்ய வேண்டும். குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பில், வீட்டிலுள்ள ஆண்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. பாதுகாப்பற்ற சூழலை அவர்களும் உணர வேண்டும். இது பற்றியெல்லாம் நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். பேருந்து, ரயில் போன்றவற்றில் நடக்கும் பாலியல் தொந்தரவும்  அதிகரித்துவருகிறது.

சமூக ஊடகங்கள், இளைஞர்கள் வெகுவாக ஈர்ப்பதால் அவற்றின் மூலமும் எனது தேர்தல் வாக்குறுதிகளைப் பரப்பிவருகிறேன். இளைஞர்கள் சரியான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். நாட்டில் என்ன நடக்கிறது என அவர்களுக்குத் தெரியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகிறவர்களின் அரசியல் பின்னணியை மக்கள் மறந்துவிட மாட்டார்கள் என்பதை என் களப்பணி அனுபவத்தில் உணர்ந்தேன்.

மக்களிடம் கிடைத்த அனுபவங்களையே வாக்குறுதியாகத் தயாரித்துள்ளேன். எங்கள் அமைப்பின் தேசியத் தலைவர் டாக்டர் சுவேதா ரெட்டி எனக்காகப் பிரச்சாரம் செய்ய மதுரை வருகிறார். மக்களவையில் பெண்களுக்காக என் குரல் ஓங்கி ஒலிக்கும்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் நாகஜோதி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்