அஞ்சலி: வரலாற்றுக் குறிப்புகளில் ஒளிரும் பெண்கள்

By கோபால்

இன்று சென்னையின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள கூகுளைத் தட்டினால் தகவல்கள் வந்து கொட்டுகின்றன. ஆனால், இணையம் பரவலாகியிராத காலத்தில் நூல்களைச் சேகரித்தும் உரைகளை நேரில் சென்று கேட்டும் சென்னையின் வரலாற்றைத் தேடித் தேடித் தொகுத்தளித்தவர் எஸ்.முத்தையா. 2019 ஏப்ரல் 20 அன்று காலமான முத்தையா, இதற்காகவே வாழ்வின் பெரும்பகுதியைச் செலவிட்டவர்.

முன்பு ஆங்கிலத்தில் ‘மெட்ராஸ்’ என்று அழைக்கப்பட்டுவந்த சென்னை மாநகரத்தின் வரலாற்றை ‘தி இந்து’ நாளிதழின் மெட்ரோ பிளஸ் இணைப்பிதழில் திங்கட்கிழமைதோறும் ‘மெட்ராஸ் மிஸ்ஸலனி’ என்ற பத்தித் தொடராக அவர் எழுதினார். 973 அத்தியாயங்களுடன் 20 ஆண்டுகள் நீண்ட இந்தத் தொடர் நூலாகவும் வெளியாகியுள்ளது.

இதில் கலை, அரசியல், சமூகசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கியப் பங்களித்துள்ள பெண்கள் பற்றியும் பெண்களுக்கான அமைப்புகள், போராட்டங்கள் ஆகியவற்றைப் பற்றியும் விரிவாகப் பதிவுசெய்துள்ளார் முத்தையா. அவற்றில் சில முக்கியமான பதிவுகளை நினைவுகூர்வது அவரது எழுத்துக்களை விரிவாக வாசிப்பதற்கான தூண்டுகோலாக அமையலாம்.

விடுதலைப் போராட்டத்தில் சென்னைப் பெண்கள்

2004 டிசம்பரில் எழுதிய பதிவில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற சென்னைப் பெண்களைப் பட்டியலிட்டிருக்கிறார் முத்தையா. இவர்கள் சென்னையில் பிறந்தவர்கள் அல்லது சென்னையில் வசித்தபோது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

நேருவின் அமைச்சரவையில் வெளியுறவுத் துறைத் துணை அமைச்சராக இருந்த லட்சுமி மேனன், கேப்டன் லட்சுமி செகலின் தாயார் அம்மு சுவாமிநாதன் (இவர் பல ஆண்டுகள் எம்.பி. ஆக இருந்தவர்), அம்முவின் உறவினர் ஏ.வி.குட்டிமாலு அம்மா, மதராஸ் மாகாணத்தின் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ருக்மிணி லட்சுமிபதி, ஆந்திர மகிளா சபாவைத் தொடங்கிய வழக்கறிஞர் துர்காபாய் தேஷ்முக் ஆகியோர் இவர்களில் பிரபலமானவர்கள்.

இவர்களைத் தவிர ராயபுரத்தைச் சேர்ந்த சரஸ்வதி பாண்டுரங்கன், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி, புரசைவாக்கத்தைச் சேர்ந்த ராஜம் பாரதி, எஸ்.ஸ்ரீநிவாச அய்யங்காரின் மகள் அம்புஜம்மாள் ஆகியோரும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற சென்னைப் பெண்களே. இவர்களில் ராஜம்பாரதி பின்னாளில் நகராட்சி உறுப்பினர் ஆனார். அம்புஜம்மாள் மாநிலச் சமூக நல வாரியத்துக்குத் தலைமை வகித்தார்.

சுந்தராம்பாளின் அரிய சாதனை

நடிகையும் பாடகியுமான கே.பி.சுந்தராம்பாள் தன் வாழ்க்கைத் துணையான எஸ்.ஜி.கிட்டப்பாவின் மறைவுக்குப் பிறகு பொதுவாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருந்தார். காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தியின் அறிவுரையை ஏற்று விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.

 காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொண்டு தேசபக்திப் பாடல்களைப் பாடினார். 1958-ல் மதராஸ் மாகாண சட்ட மேலவை உறுப்பினராக அன்றைய முதல்வர் காமராஜாரால் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் இந்தியச் சட்டப்பேரவை அமைப்புக்குள் நுழைந்த முதல் திரைக் கலைஞர் என்ற புகழைப் பெற்றார்.

தேவதாசி முறையை ஆதரித்த சங்கம்

தமிழகத்தில் நடைமுறையில் இருந்த தேவதாசி முறை தடைசெய்யப்படக் காரணமாக இருந்தவர்களில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் ஒருவர். இவர்

1927-ல் மதராஸ் மாகாணத்தின் அன்றைய ஆளுநரால் மதராஸ் சட்ட மேலவையின் முதல் பெண் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மேலவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் அந்தப் பதவியைப் பெற்ற முதல் பெண் என்ற புகழையும் அடைந்தார். இதுபோல் முத்துலட்சுமி ரெட்டி பற்றிய பல தகவல்களைப் பதிவுசெய்துள்ள முத்தையா, தேவதாசி முறை ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக தேவதாசி சமூகத்திடமிருந்து எழுந்த எதிர்ப்பையும் பதிவுசெய்துள்ளார்.

தேவதாசி மரபு தொடர்பாக முத்தையா எழுதிய பத்திக்கு எதிர்வினையாக சென்னையின் வரலாற்றாசிரியர் வி.ஸ்ரீராம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ‘மதராஸ் தேவதாஸி சங்கம்’ பற்றி ஸ்ரீராம் விவரித்துள்ளார். அந்தத் தகவல்களைத் தன் அடுத்த பத்தியில் வெளியிட்டிருக்கிறார் முத்தையா. தேவதாசியாக இருந்த பெங்களூர் நாகரத்னம்மாள் என்பவர் தொடங்கிய இந்தச் சங்கம் சென்னையில் முருகப்பன் தெருவில் இயங்கியது.

வீணை தனம்மாள். அவருடைய மகள்கள் ராஜலட்சுமி, லட்சுமிரத்தினம், சேலம் மீனாட்சி, மயிலாப்பூர் கெளரி (கபாலீஸ்வரர் கோயிலில் தேவதாசியாக இருந்தவர்) ஆகியோர் அதில் உறுப்பினர்களாக இருந்தனர்.

1920-களின் இறுதியில் இந்த அமைப்பினர் தேவதாசி முறை தடைசெய்யப்படுவதை எதிர்த்து ஒரு விரிவான மனுவைப் புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த சட்டப்பேரவைக்கு நேரில் சென்று அளித்தனர். ஆனால், 1947-ல் தமிழகச் சட்டப் பேரவையில் உரிய சட்டம் நிறைவேற்றப்பட்டு தேவதாசி முறை தடை செய்யப்பட்டது.

சென்னையில் தோன்றிய பெண்கள் இயக்கம்

அன்னி பெசண்ட், மார்க்கரட் கசின்ஸ், டோரதி ஜினராஜதாஸா ஆகியோரால் 1917-ல் சென்னையில் உள்ள அடையாறில் தொடங்கப்பட்ட ‘இந்தியப் பெண்கள் இயக்கம்’ இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் இயக்கங்களில் ஒன்று என்பதைப் பதிவு செய்திருக்கிறார் முத்தையா.

நாடு முழுவதும் கிளைபரப்பிய இந்த இயக்கம் கல்வி மறுப்பு, குழந்தைத் திருமணம், தேவதாசி முறை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான சமூகக் கொடுமைகளை நீக்கப் போராடியது. நாடு முழுவதும் பெண்களைக் கல்வி, அரசியல், சமூக சீர்திருத்தச் செயல்பாடுகளில் பங்கேற்க ஊக்குவித்தது. 

கைம்பெண் சிறுமியர் இல்லமான ஐஸ் ஹவுஸ்

சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் ஆங்கிலேயர் காலத்தில் பனிக்கட்டிகளைப் பாதுகாத்து வைப்பதற்கான கிடங்காக இருந்த ஐஸ் ஹவுஸ் பிற்பாடு விவேகானந்தர் இல்லமானது. இடைப்பட்ட காலத்தில் இந்த இடம் குழந்தைத் திருமணம் செய்விக்கப்பட்டுக் கணவனை இழந்த சிறுமியருக்கான இல்லமாக இயங்கிவந்தது.

1886-ல் மயிலாப்பூரில் பிறந்த ஆர்.எஸ்.சுப்புலட்சுமிதான் ‘சகோதரி சுப்புலட்சுமி’ என்று அழைக்கப்பட்டார். இவரும் சிறுமியாக இருந்தபோதே கணவனை இழந்தவர். 1912-ல் இவர் தொடங்கிய சாரதா ஆசிரமம், கணவனை இழந்த 35 சிறுமியருக்கு அடைக்கலம் அளித்துவந்தது.

இது போன்று சென்னை நகரத்தின் வரலாற்றில் பெண்களின் பங்கைத் தன் எழுத்தின் வழியாகத் தொடர்ந்து பதிவுசெய்த எஸ்.முத்தையாவின் பணியை வரலாறு மறக்காது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

50 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

55 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்