பெண்கள் 360: கணக்கில் புலி

By முகமது ஹுசைன்

கணக்கில் புலி

ஒன்றுபட்ட சோவியத் யூனியனில் இருந்த கோலோகிரிவ் எனும் சிற்றூரில் 1922-ல் ஓல்கா லாடிஷென்ஸ்கயா பிறந்தார். அவருடைய தந்தை, கணித ஆசிரியர். தந்தையின் ஊக்கத்தினால் சிறுவயதிலேயே அல்ஜீப்ரா மீது ஓல்காவுக்கு ஆர்வம்  ஏற்பட்டது. அவருடைய 15 வயதில், ‘நாட்டின் எதிரி’ என முத்திரை குத்தப்பட்டு அவருடைய தந்தைக்கு மரணதண்டனையை சோவியத் அரசு நிறைவேற்றியது. தந்தையின் மறைவுக்குப்பின், அவரது குடும்பம் வறுமையில் மூழ்கியது.

Kanakkil-Pulijpgright

பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தபோதும், அவருக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டது. ஆரம்பப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். பல வருடங்களுக்குப் பிறகு, மாஸ்கோ ஸ்டேட் யுனிவர்சிட்டியில் மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு ஓல்காவுக்குக் கிடைத்தது. அங்கே முனைவர் பட்டமும் பெற்றார்.

வகைக்கெழு சமன்பாடுகளை (partial differential equations) விளக்கி, 250-க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகளை எழுதினார். 1959-ல் ‘செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மேத்தமெட்டிக்கல் சொசைட்டி’யில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1990-ல் அந்தக் குழுமத்தின் தலைவரானார். கணிதத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்காக அவருக்கு எண்ணற்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கணிதத்தின் மீது மட்டுமல்லாமல் இயற்கையின் மீதும் கலையின் மீதும் தீராத காதல் கொண்டவராக இருந்தார்.

2004-ல் இவ்வுலைகை விட்டுப் பிரிந்தார். அவரது 97-வது பிறந்தநாளைக் கொண்டாடும்விதமாக மார்ச் 7 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது

பெண் என்றால் இழுக்கா?

மார்ச் 5 அன்று ஏபிபி செய்தி அலைவரிசையின் விவாத நிகழ்ச்சியில் பாரதிய  ஜனதா கட்சியின் சார்பில் பேசிய கௌரவ் பாட்டியாவும் காங்கிரஸ் கட்சியின் ஊடகத் தொடர்பாளரான ரோஹன் குப்தாவும் கலந்துகொண்டனர். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஆதரவாக கௌரவ் பேசினார். விவாதம் காரசாரமாகச் சென்றது.

ஒருகட்டத்தில் பொறுமையிழந்த கௌரவ், ரோஹனைப் பார்த்து, “வீட்டுக்குப் போய் பெண்களின் உள்ளாடைகளை அணிந்துகொள்ளுங்கள்” என்றார். சற்று இடைவெளிக்குப் பிறகு, “வளையலும் அணிந்துகொள்ளுங்கள்” என்றார். கௌரவ்வின் பேச்சுக்கு நெறியாளர் ஆட்சேபனை தெரிவித்து, மன்னிப்பு கேட்கும்படி சொன்னார். அதற்கு கௌரவ், “நான் பேசியதில் என்ன தவறு இருக்கிறது?” என்று வாதாடினார். பெண் அமைச்சருக்கு ஆதரவாகப் பேசியவருக்கு, தான் பெண்களை இழிவுப் படுத்துகிறோம் என்று தெரியாமல் இருப்பது வேடிக்கையே.

அமைதிக்காகக் களமிறங்கிய பெண்கள்

புல்வாமா தாக்குதலுக்குப் பின், இந்தியாவையும் பாகிஸ்தானையும் போர் மேகம் சூழ்ந்தது. என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத சூழலில், அமைதியை வேண்டி இரு நாட்டுப் பெண்களும் சமூக வலைத்தளங்களின் மூலம்  பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். ‘வுமன் டூ வுமன் அக்ராஸ் பார்டர், வுமன் ஃபார் பீஸ், சே நோ டு வார் போன்ற ஹேஷ்டேக்குகளை அவர்கள் ட்விட்டரில் டிரெண்டாக்கினர்.

‘ஆண்களால் தொடங்கப்படும் போரினால் பாதிப்புக்குள்ளாகுவது பெண்களும் குழந்தைகளுமே’ என்று பாகிஸ்தானின் சோஷியலிஸ் - ஃபெமினிஸ்ட் அமைப்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது. இந்தியப் பாடலாசிரியர் சாஹிர் லூதியானாவின் கீழ்க்கண்ட கவிதையைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாகிஸ்தானின் பெண் ஊடகவியலாளரான செஹ்ர் மிஸ்ரா பதிவிட்டார்.

நமது ரத்தமோ அவர்களது ரத்தமோ

அது மனித குலத்தின் ரத்தம்

கிழக்கோ மேற்கோ எங்கு நடந்தாலும்

அமைதியை போர் கொல்லும்

வீட்டிலோ எல்லையிலோ எங்கு விழுந்தாலும்

ஆன்மாவின் கோயிலை குண்டுகள் தகர்க்கும்

போரே ஒரு பிரச்சினை, அப்படியிருக்கப்

போர் எப்படிப் பிரச்சினைக்குத் தீர்வாகும்?

நெருப்பு உமிழும் போரினால்

இன்று ரத்த மழை கொட்டும்

நாளை பஞ்சம் தலைவிரித்தாடும்.

காதல் சரணாலயம்

சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் வர்க்க பேதங்களையும் கேள்விக்குள்ளாக்கும் காதல்கள் மொட்டிலேயே நசுக்கப்படுகின்றன. சாதிய மறுப்பு அரசியலால் கட்டமைக்கப்பட்ட தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல.  இந்நிலையில் கலப்பு மணம் புரியும் இளம் தம்பதியருக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் அளிக்கும் நோக்கில் திருச்சியில் ஒரு இல்லம் தொடங்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக இருக்கும் ஐந்து நண்பர்கள் ஒன்றுகூடி இந்த இல்லத்தைத் தொடங்கியுள்ளனர். ‘சாதி மதம் ஒழிய கலப்பு மணமே தீர்வு’ என்பதே இந்த இல்லத்தின் நோக்கம். இந்த இல்லத்தில் வசதிகள் குறைவு என்றாலும், பாதுகாப்பு  அதிகம் என அந்த நண்பர்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.

எண்ணமும் சொல்லும்: ஆண்களிலும் பல வகை உண்டு

ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; எங்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனால், பெண் குழந்தைகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இதை எதிர்த்துப் பேசினால்  கெட்டவள் என்று முத்திரை குத்தப்படுகிறாள். அனைத்துவிதமான ஆண்களையும் கொண்ட இந்தச் சமூகத்தில் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்தப் பாகுபாடு? குடும்ப குத்துவிளக்கு என்று கூறியே ஒரு கூட்டுக்குள் பெண்ணை அடக்கிவிடுகிறார்கள்.

ennamumjpgright

என் தோழிகள் பலர் கஷ்டங்களை அனுபவித்துவந்த போதிலும், அவற்றை வெளியே சொல்லவே அஞ்சுகிறார்கள். இதைத்தான் நான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். எல்லோருக்கும் உணர்வுகள் உள்ளன. அதை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெண்கள் அதிகாரம் பெற்றால் மட்டுமே, அவர்களுக்கு மகிழ்ச்சி கிட்டும்.

பெண்கள் ஜாலியாக இருக்கக் கூடாதா? பெண்கள் குடிப்பதையும் புகைப்பதையும் கஞ்சா அடிப்பதையும் மட்டும் நான் இந்தப் படத்தில் காட்டவில்லை. வேறு சில விஷயங்களும் இதில் உண்டு. என்னுடைய படம் எதையும் மாற்றிவிடாது. முதிர்ச்சியுள்ள ரசிகர்களுக்காக வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய படத்தை நான் எடுத்துள்ளேன். அந்த வகை ரசிகர்கள் இதைப் புரிந்துகொள்வார்கள்.

- அனிதா உதிப், ‘90 எம்.எல்’ திரைப்பட இயக்குநர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

வலைஞர் பக்கம்

41 mins ago

கல்வி

34 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

37 mins ago

ஓடிடி களம்

44 mins ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்