விவாதம்: கட்டிப்போடும் கற்பிதச் சங்கிலிகள்

By க்ருஷ்ணி

எத்தனையோ விசித்திர வழக்குகளைச் சந்தித்த நீதிமன்றத்துக்கு அந்த வழக்கு விசித்திரமாகத் தெரியவில்லை. நிதர்சனத்தின் ஓர் அங்கமாகவே அதைப் பார்த்தார்கள். அனைத்துக் குற்றங்களுக்கும் சட்டப்படி நீதி வழங்க வேண்டும் என்பதுதான் சட்டத்தின் விதி என்றாலும் சில நேரம் மனிதத் தன்மையோடும் குற்றங்களை அணுக வேண்டும் என்பதையும் நீதி மன்றங்கள் நிரூபிக்கத் தவறுவதில்லை. அந்த வகையில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பும் அடங்கும்.

கணவனைக் கொன்ற மனைவியைக் கொலைக் குற்றவாளியாகக் கருத முடியாது எனக் கூறி அவரது தண்டனையைப் பத்து ஆண்டுகளாகக் குறைத்தது உச்ச நீதிமன்றம். கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனைதானே வழங்க வேண்டும் என யோசிக்கலாம். அதற்கும் நீதிமன்றம் விளக்கம் அளித்திருக்கிறது. கணவனைக் கொன்ற அந்தப் பெண்ணை அவருடைய கணவர் இன்னொருவருடன் தொடர்புபடுத்திப் பேசியிருக்கிறார்.

அவரைச் சந்தேகப்பட்டுத் தொடர்ந்து துன்புறுத்தியிருக்கிறார். ‘பாலியல் தொழிலாளி’ எனவும் வசைபாடியிருக்கிறார். தங்களது மகளையும் பாலியல் தொழிலுக்கு மனைவி அழைத்துச் சென்றுவிடுவார் எனவும் திட்டியிருக்கிறார். “கணவன் தன்னை ‘பாலியல் தொழிலாளி’ என்று அழைத்ததால் கோபத்தால் தூண்டப்பட்டே கணவரைக் கொன்றிருக்கக்கூடும்.

நம் சமூகத்தில் கணவன் தன்னை ‘பாலியல் தொழிலாளி’ என்று அழைப்பதை எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டார். அதுவும் அந்தச் சொல்லைத் தன் மகளைப் பார்த்தே சொல்வதை எப்படிப் பொறுத்துக்கொள்வார்?” என்று சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

பெண்ணைச் சிதைக்கும் ஆயுதம்

நீதி மன்றங்களின் இதுபோன்ற அணுகு முறை வரவேற்கத்தக்கதே. ஆனால், ஒரு பெண் மீது அதிகபட்ச வன்முறையை ஏவ விரும்புகிறவர்கள் அந்தப் பெண்ணின் ஒழுக்கத்தைச் சிதைக்கும் ஆயுதத்தைத்தான் முதலில் கையில் எடுக்கிறார்கள். ஒழுக்க வரையறைகள் ஆணுக்கு ஒன்றாகவும் பெண்ணுக்கு ஒன்றாகவும் இருக்கும் நிலையில் பெண் எப்போதும் தன் கண்ணியத்தை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.

யாரிடமும் எந்த அவப் பெயரும் வாங்காமல் வாழ்வதே பெரும்பாலான பெண்களின் லட்சியம் எனக் கற்பிக்கப்படுகிறது. காலம் காலமாகப் பெண்களைப் பிணைத்து வைத்திருக்கும் இந்தக் கற்பிதச் சங்கிலிதான் தன் நடத்தை குறித்து யாராவது ஏதாவது சொன்னால் பெண்ணை வெகுண்டெழச் செய்கிறது. சில நேரம் குற்றவுணர்வுக்கு ஆளாக்கி உடைந்துபோகச் செய்கிறது. கோபப்படுகிறவர்கள் அதன் உச்சகட்டமாக அப்படிச் சொன்னவரை அழிக்க நினைக் கிறார்கள்; குற்றவுணர்வுக்கு ஆளாகிறவர்கள் தங்களையே அழித்துக்கொள்கிறார்கள்.

யார் ‘நல்ல’ பெண்?

நடத்தை குறித்த கற்பிதங்களைக் கையாளத் தெரிந்த பெண்கள் துணிந்து நிற்கிறார்கள். “நீ என்னை அப்படிச் சொல்லி அழைப்பதாலேயே நான் அப்படியானவள் என்று பொருள் அல்ல. என் நடத்தை குறித்தும் செயல்பாடு குறித்தும் எனக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள். அந்தப் புரிதல் இல்லாதவர்களும் புரிந்துகொள்ள அனுமதிக்கப்படாதவர்களும்தான் இங்கே அதிகம்.

இவர்களில் ஆண்களும் அடக்கம். அதனால்தான் பெண்ணின் நடத்தை சார்ந்த குற்றச்சாட்டை ஆண் கையில் எடுப்பதும் அதற்குப் பயந்து பெண் நடப்பதும் ஆண்டாண்டு காலமாக நடந்துவருகிறது. தவிர, ஆணை வசைபாடும் சொற்கள்கூடப் பெண்ணையும் அவளது நடத்தையையும் மையப்படுத்தியவையாகவே இருக்கின்றன. ‘நல்ல’ தாய்க்குப் பிறந்த யாரும் இப்படிச் செய்ய மாட்டார்கள் என்று பலராலும் அடிக்கடி உதிர்க்கப்படும் வசவில் ‘நல்ல’ என்பது எதைக் குறிக்கிறது.

அந்த வீட்டுப் பெண்ணின் நடத்தையோடு நேரடியாகத் தொடர்புகொண்டதுதானே அந்தச் சொல்? வீட்டில் யார் என்ன தவறு செய்தாலும் அதற்கும் அந்த வீட்டுப் பெண்ணின் நடத்தை தான் பொறுப்பேற்க வேண்டுமா? இது மிகச் சாதாரணமான அடிப்படையான வசவு. இதிலிருந்துதான் ஒவ்வொன்றாக வெவ்வேறு தளத்தில் கிளைத்துச் செழிக்கின்றன. அனைத்தும் பெண்ணைச் சிதைக்கும் வல்லமையோடு உருவாக்கப்படுபவை.

ஆணைக் காயப்படுத்தும் வசவுகளும் உண்டு. ஆனால், பெண்கள் எதிர்கொள்ளும் வேதனைகளோடு ஒப்பிடுகையில் அவை மிகக் குறைவே.

நீங்க என்ன சொல்றீங்க?

கணவன் தன்னை ‘பாலியல் தொழிலாளி’ என்று சொன்னதுமே மனைவி கோபப்படுவதோ உடைந்துபோவதோ எதனால்? ஆணுக்கும் பெண்ணுக்கும் நடத்தை சார்ந்த வசவுகளைக் கையாளத் தெரிந்திருக்கிறதா? இருவரும் ஒருவரை இன்னொருவர் தாக்கிக்கொள்ள ஏன் பெரும்பாலும் நடத்தை சார்ந்த குற்றச் சாட்டுகளையே கையில் எடுக்கின்றனர்? அவற்றில் பெரும்பாலானவை பெண்ணைத் தாக்குவதாகவே இருப்பது எதனால்? இதில் உங்கள் கருத்து என்ன? எங்களுக்கு எழுதி அனுப்புங்கள், விவாதிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்