பக்கத்து வீடு: புள்ளியில் விரியும் பிரபஞ்சம்!

By எஸ்.சுஜாதா

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஓவியக் கண்காட்சி. ஒரு டிக்கெட்டின் விலை 1,750 ரூபாய். ஒருவருக்கு 30 நொடிகளே பார்வையிட அனுமதி. காரணம், அந்தக் கண்காட்சியைக் காண 90 ஆயிரம் பேர் குவிந்துவிட்டனர்!

உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய ஓவியர் யாய்வாய் கிசாமாவின் கண்காட்சிதான் அது. பார்த்தவுடனேயே சட்டென்று மாய உலகத்துக்கு அழைத்துச் சென்று, நம் துயரத்தை எல்லாம் துடைத்துவிடும் ஆற்றல் இவரது ஓவியங்களுக்கு உண்டு.

யார் இந்த கிசாமா?

ஜப்பானில் வசதியான குடும்பத்தில் பிறந்தவருக்கு மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் வாய்க்கவில்லை. அப்பாவுக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் இவருடைய அம்மா மனக் குழப்பத்துடன் இருந்தார். கணவருக்கு யாரிடமெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதை அறிய, உளவாளியாக கிசாமாவை அனுப்பிவைப்பார். அங்கே அவர் கண்ட காட்சி, பிஞ்சு மனதைப் பாதித்தது.

pakkathu-3jpg

பூக்கள் விற்பனை செய்யும் தொழில் செய்ததால் அந்தக் குடும்பத்துக்குச் சொந்தமாகப் பெரிய தோட்டம் இருந்தது. அங்கே சென்று மணிக் கணக்கில் அமர்ந்திருப்பார். ஒருநாள் வண்ணப் பூக்கள் அவருடன் பேச ஆரம்பித்தன. கிசாமா ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோதே, அவரது கையைப் பிடித்து ஒரு மாய உலகத்துக்குள் அவை அழைத்துச் சென்றன. மனம் நிறைய மகிழ்ச்சி. கற்பனைகள் சிறகடித்துப் பறந்தன. தன்னைப் புது மனுசியாக உணர்ந்தார் கிசாமா.

தூரிகையை எடுத்தார். நேரம், காலம் பார்க்காமல் வரைந்தார். விரைவிலேயே தனக்கெனத் தனி பாணியிலான ஓவியத்தை அவர் கண்டடைந்தார். சிற்பங்கள் மீதும் அவருக்கு ஆர்வம் வந்தது. மிகப் பெரிய பறங்கிக்காயில் வண்ணம் தீட்டி, அதன் மீது போல்கா புள்ளிகளை வரைய ஆரம்பித்தார். எப்போதும் ஓவியம் தீட்டிக்கொண்டிருக்கும் மகளை நினைத்து எரிச்சலடைந்த அவருடைய அம்மா, வரையும்போதே ஓவியங்களைக் கிழித்துவிடுவார்.

ஒரு கட்டத்தில் ஓவியத்திலிருந்து மகளை மீட்க முடியாது என்று உணர்ந்த பெற்றோர், அவர் விருப்பப்படி ஓவியம் பயில அனுமதித்தனர். கிசாமாவின் எல்லை விரிவடைந்தது. ஒருநாள் இரவு அறையில் அமர்ந்து ஏதோ யோசித்துக்கொண்டிருந்தார். மேஜை விரிப்பில் இருந்த வண்ணமும் ஓவியங்களும் அப்படியே வழிந்து நாற்காலி, தரை, சுவர், மேற்கூரை என்று பரவின. அந்தக் காட்சியைக் கண்டு கிசாமா பிரமித்துப் போனார். தானும் இதேபோல் மயக்கும் ஓவியத்தை தீட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார். இப்படித்தான் கண்ணாடிப் (mirrored-room) பிரதிபலிப்பு ஓவியம் உருவானது.

ஓவிய உலகில் புதுப்புது நுட்பங்களைப் பரிசோதிப்பதும் சஞ்சரிப்பதுமாக இருந்த கிசாமாவுக்குத் திருமணம் செய்துவைக்கப் பெற்றோர் முடிவெடுத்தனர். திருமணம் என்ற சொல்லே அவருக்கு வெறுப்பைத் தந்தது. சிறு வயதிலேயே அப்பாவின் நடவடிக்கைகளைக் கண்டதால், அவருக்குத் தாம்பத்தியத்தின் மீது அளவற்ற வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அது மோசமான செயல் என்ற எண்ணமும் ஆழமாகப் பதிந்திருந்தது. ஆனால், பெற்றோர் அதைப் புரிந்துகொள்ளவில்லை.

ஜப்பானிலிருந்து அமெரிக்காவுக்கு…

27 வயதில் ஜப்பானிலிருந்து அமெரிக்கா செல்லும் முடிவை கிசாமா எடுத்தார். அந்தக் கால அமெரிக்க ஓவிய உலகம் ஆண்களுக்கானதாக இருந்தது. புதிய நாடு. ஆங்கிலமும் நன்றாகத் தெரியாது. வீட்டிலிருந்து பணம் அனுப்பாததால், போராட்டமாக மாறியது வாழ்க்கை. தன்னுடைய பட்டு கிமோனோ ஆடைகளை விற்று, வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு புகழ்பெற்ற அமெரிக்க ஓவியர்களின் பார்வையில் இவரது ஓவியங்கள் பட்டன. அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது. புகழ்பெற ஆரம்பித்தார் கிசாமா.

ஜோசப் கர்னல் என்ற ஓவியரின் நட்பு கிடைத்தது. அது காதலாக மலர்ந்தது. கவிதைகள், கடிதங்கள் எழுதி ஜோசப்புக்கு அனுப்புவார். தொலைபேசியில் பேசிக்கொள்வார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றோ தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்றோ நினைக்காததால், அந்தக் காதல் 10 ஆண்டுகள் நீடித்தது. திடீரென்று கர்னல் இறந்து போனார்.

அந்தத் துயரத்தை இவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டது. மன அழுத்தம் ஏற்பட்டது. அமெரிக்காவில் இருந்த ஜப்பானிய மருத்துவரால் இவரது பிரச்சினையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் சிறு வயதில் தன்னைப் புரிந்துகொண்டு, மருத்துவம் பார்த்தவரிடம் சிகிச்சை பெறுவதற்காக ஜப்பான் திரும்பினார்.

இந்தக் காலகட்டத்தில் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றை எழுதித் தள்ளினார். ஆனாலும், அவரால் மனப் பிரச்சினையிலிருந்து வெளிவர முடியவில்லை. பல முறை தற்கொலைக்கு முயன்றார். இறுதியில் தானே தன்னுடைய பிரச்சினையைக் கண்டுகொண்டு, மனநல மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார்.

புகழ் மறைந்தது. மனநல மருத்துவர் ஓவியங்கள் மூலமே கிசாமாவை மீட்க முடியும் என்பதை அறிந்து, சிகிச்சை முறையை மாற்றினார். கொஞ்சம் கொஞ்சமாகக் குணமடைய ஆரம்பித்தார். மீண்டும் ஓவியங்களில் கவனம் செலுத்தினார். சில ஆண்டுகளில் விட்ட இடத்தைப் பிடித்துவிட்டார் கிசாமா.

மீண்டும் வெற்றிப் பயணம்

பல்வேறு நாடுகளில் கண்காட்சி நடத்தினார். புகழும் பணமும் கொட்ட ஆரம்பித்தன. கண்காட்சிகளிலிருந்து கிடைக்கும் வருமானத்தைப் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு கிசாமா வழங்கிவருகிறார். சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களுக்குத் தொடர்ந்து நிதி அளித்துக்கொண்டிருக்கிறார்.

11 வயதில் இவர் வரைந்த பறங்கிக்காய் போல்கா புள்ளிச் சிற்பம், இன்றுவரை 5 லட்சம் டாலர்களுக்கு மேல் சம்பாதித்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. போல்கா புள்ளிகள் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் கிசாமா, தன்னுடைய உடை, மேஜை, நாற்காலி, சுவர் ஓவியம், கார் என்று அனைத்திலும் புள்ளிகளை வரைந்து வைத்திருக்கிறார்.

“இந்தப் பூமியே பிரபஞ்சத்தில் ஒரு சிறு புள்ளிதான். பிரபஞ்சத்தைப்போலவே போல்கா புள்ளிகளுக்கும் முடிவில்லை. அதுபோலத்தான் என்னுடைய ஓவியங்களும்” என்கிறார் கிசாமா.

42 ஆண்டுகளாக இரவு நேரத்தைப் பெரும்பாலும் டோக்கியோவில் உள்ள மனநல மருத்துவமனையில்தான் கழிக்கிறார். அருகிலேயே சொந்தமான ஐந்து மாடிக் கட்டிடத்தில் கேலரியும் ஸ்டுடியோவும் வைத்திருக்கிறார்.

“ஓவியங்களுக்குத் துயர் துடைக்கும் சக்தி இருப்பதை என் மூலம் அறிந்துகொண்டேன். என் ஓவியங்கள் உலகம் முழுவதும் இருக்கும் ஏராளமான மக்களின் துயரைத் துடைக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் இந்த வயதிலும் உற்சாகமாக வரைந்துகொண்டிருக்கிறேன். நான் இறந்துபோகும் கணம்வரை வரைந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என்கிறார் தன்னுடைய 90-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் கிசாமா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

ஜோதிடம்

19 mins ago

ஜோதிடம்

34 mins ago

ஜோதிடம்

47 mins ago

வாழ்வியல்

52 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்