கற்பிதமல்ல பெருமிதம் 39: புத்தக உலகில் பயணம்!

By செய்திப்பிரிவு

இன்று பேப்பர் சீக்கிரம் வந்துவிட்டது. வீட்டில் உள்ளவர்கள் இன்னமும் எழுந்திருக்கவில்லை. காபியை ஒரு கையில் வைத்துக்கொண்டு பேப்பரைப் படிக்க ஆரம்பித்தாள் சுதா. இப்படி ஆற அமர காலையில் பேப்பர் படிப்பது எப்போதாவதுதான் அமைகிறது. பத்து நிமிடம்தான் ஆகியிருக்கும். எழுந்து வந்த கணவன் காபி ரெடியா என்று கேட்டான். எல்லா சந்தோஷங்களுக்கும் அற்ப ஆயுசுதான் என்று நினைத்தபடி காபி போடப் போனாள் சுதா.

கீதாவுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. கல்யாணத்துக்குப் புடவைக்கும் நகைக்கும் காசு செலவழிக்கத் தயாராக இருந்த அப்பாவும் அம்மாவும் அவள் கேட்ட புத்தக அலமாரியைப் பணம் அதிகம் என்று சொல்லி வாங்கித் தர மறுத்துவிட்டார்கள். அவள் சேமித்துவைத்த காசில் வாங்கவும் அனுமதிக்கவில்லை. வெட்டிச் செலவாம். திருமணத்துக்குப் பிறகு அவள் கணவனுடன் குடியிருக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் வீட்டில் அலமாரிகள் குறைவு.

வரப்போகிற கணவனிடம் புத்தகப் பிரச்சனைகளைப் பற்றிச் சொன்னாள். அவன் சுலபமாக ஒரு தீர்வு சொன்னான். “உன் அம்மா வீட்டிலேயே இந்தப் புத்தகங்கள் இருக்கட்டும். வாரம் ஒரு முறை படிப்பதற்கான நான்கு, ஐந்து புத்தகங்களை மட்டும் கொண்டுவா. அதைப் படித்த பிறகு அடுத்த முறை போகும்போது அடுத்த செட் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வரலாம்” என்றான்.

சுதாவுக்கு விசித்திரமாக இருந்தது. நினைத்தபோது எடுத்துப் படிக்க புத்தகம் இல்லா விட்டால் எப்படி? “படித்த புத்தகத்தையே எத்தனை தடவை படிப்பே?” என்றான் வரப் போகிறவன். திருமண வாழ்வில் சமரசத்தில் முதல் வெட்டு புத்தகங்களுக்கு விழுந்தது.

படிக்க எது தடை?

சிறு வயதில் இருந்தே பாடப் புத்தகத்தால் வந்த விளைவோ என்னவோ, கலாவுக்குப் புத்தகங்கள் என்றாலே அலர்ஜி.

நியூஸ் பேப்பர், புத்தகம் என ஒரு அறையை முழுக்க ‘குப்பையாக’ போட்டு வைத்திருப்பது குறித்து அவளுக்கும் அவள் கணவனுக்கும் சண்டை வராத நாளே இல்லை. புத்தகங்களின் காதலர்களுக்கும் புத்தகங்களோடு உறவில்லாதவர்களுக்கும் இப்படியான மோதல் இருந்துகொண்டேதான் இருக்கும். ஆண், பெண் இருவரும் புத்தக உலகில் உலவுபவர்களாக இருந்தாலும் பெண்களுக்கும் புத்தகங்களுக்குமான உறவைத் தீர்மானிப்பதில் பாலினப் பேதத்துக்கும் அதிகாரத்துக்கும் பெரிய பங்கு இருக்கிறது.

பொதுவாகப் புத்தகங்கள் படிக்கிற பெண்கள்கூடக் காலையில் பேப்பர் படிப்பது பற்றியோ அரசியல் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவது குறித்தோ அதிக அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இது உண்மையாக இருந்தாலும் இதற்கான காரணம் என்ன?

ஆண்கள் தூங்கி எழுந்தவுடன் பேப்பர் படிக்க உட்கார்வதுபோல் பெண்களால் உட்கார முடிவதில்லை. இதற்கு முட்டுக் கட்டையாக இருப்பவர்கள் ஆண்கள் என்று சொல்ல வரவில்லை. காலம் காலமாகப் பெண்களின் மண்டைக்குள் ஏற்றப்பட்ட சில கருத்தாக்கங்கள் பெண்களின் ரத்த நாளங்களில் போய்ப் படிந்துவிட்டன. வாசிப்பு என் சுவாசிப்பு என்று செயல்படுவதற்கு இது பெரும் தடையாக இருக்கிறது.

பொறுப்புகளைப் பகிர்வோம்

காலையில் காபி போட, டிபன் செய்ய அடுக்களையை நோக்கி நகரும் கால்களை இழுத்துப் பிடித்து நிறுத்த முடியவில்லை.

காலையில் எல்லா வேலை களையும் முடித்த பிறகு பேப்பர் படிப்பதற்கான மனநிலை வாய்ப் பதில்லை. பிரச்சினை பெண்களின் மண்டைக்குள்ளும் உள்ளது. வாழ்க்கையில் புதிதாகக் கற்றுக்கொள்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நாம் ஏற்கெனவே கற்றுக்கொண்ட பல விஷயங்களில் இருந்து விடுபடுவது. அதற்காகப் பொறுப்புகளில் இருந்து விலகிவிடச் சொல்லவில்லை.

ஆண், பெண் சமத்துவம் நிறைந்த சமுதாயம் மலர வேண்டுமென்றால் அதற்கான ஒரே தீர்வு பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதுதான்.

நீங்கள் பொறுப்பானவர் என்பது நீங்கள் பொறுப்பேற்றுச் செய்யும் வேலையால் தீர்மானம் ஆகவில்லை. பொறுப்புகளைப் பகிரத் தெரிந்தவர்தான் சிறந்த நிர்வாகி. அவர்கள்தாம், என்ன வேண்டும் எப்படி வேண்டும் என்பதை உணர்ந்து தங்கள் வாழ்க்கையைக் கையில் எடுத்தவர்கள். தியாகியாகாமல் பொறுப்பானவர்களாக இருப்பது இதுதான்.

தினமும் படிப்பது நல்லது

புத்தகங்களுக்கு வருவோம். புத்தகங்கள் நம் உலகை விரிவுபடுத்துகின்றன. ஆழப்படுத்துகின்றன.

வெறும் தகவல்களாக மட்டும் விஷயங்களை அறிந்து கொள்ளாமல், வாழ்தல் பற்றிய நோக்கத்தைக் கூர்மைப் படுத்திக் கொள்ள இவை உதவுகின்றன. சில புத்தகங்கள் நம் பொழுதைச் சந்தோஷமாகக் கழிக்க உதவு கின்றன. எனக்கு யார் இருக்காங்க என்ற கேள்விக்கான பதில், உங்களுக்காகக் கோடிக் கணக்கான நூல்கள் இருக்கின்றன.

எத்தனை வகையான கதை மனிதர்கள். உறவின் சிக்கல்களை, மனித மனத்தின் உணர்வுகளைப் பல்வேறு பரிமாணங்களில் நாம் அறிய புத்தகங்கள் உதவுகின்றன.

பொழுது போகவில்லை, போர் அடிக்கிறது என்ற வார்த்தையை இன்றைக்கு மூன்று வயது குழந்தைகளே சொல்ல ஆரம்பித்துவிட்டன. நமக்கு அவர்களை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. நமக்கு நம் பொழுதையே சுவாரசியமாக்கிக்கொள்ளத் தெரியாததால்தான் நம் குழந்தைகளைப் புத்தகங்களின் உலகத்துக்குக் கொண்டுசெல்ல முடியவில்லை.

டி.வி. நம் உலகை ஆக்கிரமிப்பதிலிருந்து விடுபட வேண்டுமென்றால், எல்லா வீடுகளிலும் ஒரு வாசிப்பு நேரத்தைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

எவ்வளவுதான் வேலைப் பளு இருந்தாலும் பெண்கள் படிப்பதற்கென்று தங்களுக்கான ஒரு நேரத்தைத் தினமும் திட்டமிட வேண்டும். நடைப்பயிற்சிபோல் ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், பழகப் பழக அது நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சமாகிவிடும்.

என்ன படிப்பது, எப்படிப் படிப்பது?

படிப்பதையே வாழ்வாகக்கொண்டு செயல்படுகிறவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். எளிதாகப் புரியும் மொழிநடையில் உள்ள புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கனத்த மொழிநடைக்கு நகரலாம். படித்ததைப் பற்றி மற்றவர்களோடு பேசுங்கள். அது உங்கள் புரிதலைத் தெளிவுபடுத்தும். புரியாததைத் திரும்பத் திரும்ப படிப்பதன் மூலம் சுலபமாக்கிக்கொள்ளலாம்.

ஆங்கிலம் வராது, புரியாது என்று தள்ளுவதைவிட்டு, டிக்‌ஷனரியைக் பக்கத்தில் வைத்துக்கொண்டு தினமும் ஒரு பக்கமாவது படிக்க முயலுங்கள். அதேபோல், குழந்தைகளைப் படிக்கவும் எழுதவும் ஊக்குவியுங்கள். தமிழ் கலக்காமல் ஆங்கிலத்திலும், ஆங்கிலம் கலக்காமல் தமிழிலும் பேசவும் எழுதவும் சிறு வயதில் இருந்தே பழகினால்தான், நினைத்ததை வெளிப்படுத்த முடியும்.

வாட்ஸ் அப், டிவிட்டர் போன்றவை நம் மொழி வளத்தைக் காவு வாங்கிக்கொண்டே இருக்கின்றன. எமோடிகான்களும் Great என்பதைக்கூட Gr8 என்னும் விதமாகப் பயன்படுத்துவதும் நாளடைவில் நம் மொழி வளத்தில் குறைபாட்டை உருவாக்கும்.

புத்தகங்களோடு உறவாடுங்கள். புதுப் புத்தகம், பழைய புத்தகம் என எல்லாவற்றுக்கும் வெவ்வேறு மணமுண்டு. அதை நுகருங்கள்.

புதுத் துணிகள் வாங்கப் பணம் ஒதுக்குவதுபோல் புத்தகங்கள் வாங்குவதை பட்ஜெட்டில் ஒரு அங்கமாக்குங்கள். உங்கள் ஊரில் பொது நூலகங்கள் எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்.

எழுதுவோம், படிப்போம், பரந்த உலகில் பயணிப்போம்.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com
| ஓவியம்: அ. செல்வம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

31 mins ago

விளையாட்டு

22 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்