முகங்கள்: பறத்தல் என் உரிமை!

By மானா பாஸ்கரன்

புறநானூறு மட்டுமே 500 ஆண்டு காலத் தமிழர்களின் வாழ்வைக் கற்பனை கலப்பின்றிச் சொல்கிறது என்று சொல்லும் நா.நளினிதேவி, ‘புறநானூறு: தமிழர்களின் பேரிலக்கியம்’ எனும் ஆய்வுநூலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். பெரியாரின் நெறிமுறைகளைப் பின்பற்றும் மதுரைக்காரரான இவர் ஓய்வுபெற்ற பேராசிரியை.

பேராசிரியர்களுக்கே உரிய கல்விப்புல குணநலன்களைக் கடந்து  ஒரு படைப்பாளியாக 74 வயதிலும்  மிளிர்கிறார்.  ஓர் அறுவை சிகிச்சையில் தனது செவித்திறனையும் பேச்சுத் திறனையும் இழந்தவர்.  ஆர்ப்பரிக்கும் படைப்பூக்கத்துடன் இருக்கும் அவருடனான தேநீர் உரையாடலிலிருந்து....

தன்னால் இயல்பாக மற்றவர்களுடன் உரையாட இயலவில்லையே... மற்றவர்கள் சொல்வதைக் காதுகுளிரக் கேட்க முடியவில்லையே என்ற ஏக்கமோ கவலையோ துளிக்கூட இல்லாமல் இருக்க உங்களால் எப்படி முடிகிறது என்ற கேள்வியுடன் ஆரம்பித்தோம்.

தனது  பதில்கள் அத்தனையையும் எழுதிக் காட்டிய விதத்தில் இருந்தே, மொழி மீதான அவரது ஈடுபாடே அவரை உற்சாக நதியாக ஓடவைத்துக்கொண்டிருக்கிறது என்பது புரிந்தது.

நீங்கள் பேராசிரியையாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து ஓய்வுபெற்றவர். பல பேராசிரியர்கள் கல்வியாளர்களாகவும் விருதுகளை வாங்கித் தரும் ஏஜெண்டாகவும் இருக்கிறார்களே?

பேராசிரியப்  பெருமக்களில் பலர் இலக்கியங்களைப் பொழிப்புரை, பதவுரை என்ற அளவில் மட்டுமே பார்க்கின்றனர். இலக்கியங்களின் பின்னணியை, அதன் வரலாற்றை, உட்பொருளை, சமகாலத்துக்கான கருத்துகளைப் பார்ப்பதே இல்லை. அதனால்தான் அவர்களால் அந்த நிலையில் இருந்து எழுந்து படைப்பாளியாக முடியவில்லை. பயிற்றுவிக்கும்போதே ஆசிரியர் என்ற உணர்வே இன்றி இலக்கிய மனிதராகவே  ஒன்றி நின்று பயிற்றுவிப்பதுதான் எனது பழக்கம். இலக்கியம் எழுந்த காலத்துக்குள் புகுந்து அக்கால மனிதராகவே மாறி மாணவியரை வகுப்பறை என்ற உணர்வின்றி அழைத்துச் சென்றுவிடுவேன்.

உங்கள் எழுத்தில் தொடர்ந்து  பெரியாரை வலியுறுத்துவதற்கான காரணம்?

பெரியார், பெண் விடுதலைக்கான வரையறையைச் சரியான கோணத்தில் சிந்தித்துத் துணிச்சலுடன் கூறியவர். சமுதாய ஏற்றத்தாழ்வுகளைப் போக்கச் சரியான தீர்வுகளை வழங்கியவர். ஆனால், இத்தீர்வுகளுக்கான அவருடைய அணுகுமுறைகளையே இன்றும் பின்பற்றுகிறோமே தவிர, இலக்கை எட்ட அடுத்த கட்டத்துக்கு நகராமலும் இருக்கிறோம் என்பது என் கருத்து. இதைத்தான் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அவரைப் பேசாமல் எப்படி இருக்க முடியும்?

திருமணம் என்ற நிறுவன அமைப்பை உடைத்து வெளியேறுவதுதான் குடும்பம் என்னும் கட்டமைப்பைக் குலைப்பதுதான் பெண்ணுரிமை என்று சிலர் பேசுவது பற்றி?

குடும்பம் என்ற கட்டமைப்பை உடைக்கத் தேவையில்லை.  இது தவறான பெண்ணியம். குடும்பத்துக்குள் ஆண் - பெண் சமம் என்ற நிலை உருவாக வேண்டும். நீண்ட கால நோய்க்கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்வதைப் போன்றது இது.

வீட்டு வேலைகள்,  குழந்தை வளர்ப்பு போன்றவற்றைச் சமமாகப் பகிர்ந்துகொள்வதுடன், பெண் என்பவள் குடும்பத்திலும் ஒரு தனி அலகு (UNIT) என்று கருதினாலே போதும். பெண்ணின் இருப்பை (சுயம்) ஆண்கள்  ஆதிக்க உணர்வின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும்.  நான் உறுதியான குரலில் சொல்கிறேன், சமநிலையே பெண் விடுதலை!

‘சபரி மலையில்  பெண்களுக்கு அனுமதி’ என்ற நீதிமன்றத் தீர்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு பெண்ணாக  இந்தத் தீர்ப்பை முழுமையாக, மனதார வரவேற்கிறேன். இன்னும் சொல்லப்போனால்  ஒரு கோயிலுக்குள் போவதற்கு நீதிமன்ற அனுமதி தேவையே இல்லை. பெண்களின் பிறப்புரிமை இது.

இன்றைய பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும்போதெல்லாம் அந்தப் பெண்களின் உடை அதற்கு  ஒரு காரணம் என்று சொல்லும் ஆண்களின் பிலாக்கணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

உடை என்பது அவரவர் விருப்பம். பெண்களைப் பாலியல் பொருளாகவே பார்ப்பதால் உடைகளில் அவர்கள்  பெண்களைப் பார்க்கிறார்கள். உடம்பு முழுக்கப் போர்த்திக்கொண்டு இருக்கும் பெண்களும்தானே இதுபோன்ற நிலைக்கு ஆளாகின்றனர்?

உங்கள்  பல கருத்துகளில் தமிழ்த் தேசியம் என்பது மைய இழையாக இருக்கிறதே?

தமிழ்த் தேசியம் என்பது கூட்டாட்சியை வலிமைப்படுத்தும் ஒன்றே. உரிமைகள் இல்லாத வாழ்வு வளமான வாழ்வில்லை. மொழி உரிமையும் இன உரிமையும் தமிழ்த் தேசியத்தில்தான் உள்ளதாக நான் கருதுவதால்தான் அதன் தேவையை  வலியுறுத்துகிறேன்.

இதுவரை நீங்கள் எழுதியிருக்கும் நூல்கள் பற்றி?

சமீபத்தில் வெளியிட்ட, ‘புறநானூறு தமிழரின் பேரிலக்கியம்’, ‘காதல் வள்ளுவன்’, ‘என் விளக்கில் உன் இருள்’ ஆகிய மூன்று நூல்களையும் சேர்த்து இதுவரையில் 12 நூல்களை எழுதியுள்ளேன். ‘ராஜம் கிருஷ்ணனின் புதினங்களில் சமுதாய மாற்றம்’ என்ற என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுதான் முதல் புத்தகம். இந்த நூல்களில் ‘கோவை ஞானியின் கவிதை இயல் கொள்கைகள்’, ‘எஸ்.பொன்னுதுரையின் படைப்பும் படைப்பாளுமையும்’, ‘நானும் என் தமிழும்’ ஆகிய நூல்கள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை.

செவித்திறனையும் பேச்சுத் திறனையும் இழந்த பிறகு இவ்வுலகை எப்படி உணர்கிறீர்கள்?

புறத்தே அமைதி. அகத்தில் இரைச்சல். பகிர்தல், சொல்லிடல் இன்றி வெறுமையாகவும் வறுமையாகவும்தான் உள்ளது. ஆனால், என் மொழி என்னை உற்சாகமாக வைத்திருக்கிறது.

திடீரென்று உங்களுக்குச் செவித்திறன் வந்தால் என்ன கேட்க விரும்புவீர்கள்?

தந்தை பெரியாரின் சொற்பொழிவுகளை... கூடவே  எனக்குப் பிடித்த  ஏ.எம்.ராஜா - ஜிக்கியின் பாடல்களை!

நீங்கள் எழுதியவற்றில் உங்களுக்குப் பிடித்த வரிகள்?

 ‘வானம் பொது... பறப்பது என் உரிமை!’

தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

6 hours ago

இலக்கியம்

6 hours ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

11 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

சினிமா

35 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்