பெண்கள் 360: அபஸ்வரங்கள்

By முகமது ஹுசைன்

#Metoo புகார்களின் எதிரொலியாக, 7 பிரபல கர்னாடக இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை சென்னை மியூசிக் அகாடமி அதிரடியாக ரத்துசெய்துள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த அகாடமியின் தலைவர் என். முரளி, “எங்கள் துறையைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னரே இந்த முடிவை எடுத்துள்ளோம். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நாங்கள் கூறவில்லை. ஆனால், யார் கச்சேரியில் பங்கேற்கலாம் யார் பங்கேற்கக் கூடாது என்பதை முடிவு செய்யும் உரிமை எங்களுக்கு உள்ளது” எனத் தெரிவித்தார். பாலியல் புகார் சுமத்தப்பட்ட சித்ரவீணா ரவிகிரண், ஓ.எஸ். தியாகராஜன், மன்னார்குடி

ஏ. ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜா ராவ், நாகை ஸ்ரீராம், ஆர்.ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோர் கர்னாடக இசை உலகின் ஜாம்பவான்கள். அதையும் மீறி, அவர்கள்மீது துணிச்சலாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த அதிரடி நடவடிக்கை, #Metoo இயக்கத்தின் எழுச்சியையும் சமூகத்தின் மீதான அதன் தாக்கத்தையும் உறுதிப்படுத்துவதாகப் பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.

 

தந்தையானாலும் குற்றம் குற்றமே

`அழகி’, `கன்னத்தில் முத்தமிட்டால்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நந்திதா தாஸ். தேர்ந்த நடிகை, சிறந்த இயக்குநர் என்பதைத் தாண்டி, ஒரு தீவிர பெண்ணியச் செயற்பாட்டாளரும்கூட. பத்மபூஷன் விருதுபெற்ற பிரபல ஓவியர் ஜதின் தாஸ்தான் நந்திதா தாஸின் தந்தை. சமீபத்தில், ஜதின் தாஸின் மீது #MeToo குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டை `மலிவானவை’ என்ற ஒற்றைச் சொல்லில் ஜதின் தாஸ் முற்றிலுமாக நிராகரித்தார்.

இந்த விஷயத்தில் நந்திதா தாஸ் கருத்து ஏதும் சொல்ல மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நந்திதா தாஸ், `எனது தந்தைக்கு எதிராகப் பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து #MeToo மூலம் கருத்து தெரிவிக்கும் பெண்களுக்கு ஆதரவாகத்தான் நான் இருப்பேன். இது கேட்பதற்கான நேரம். பாதிக்கப்பட்ட பெண்களோ ஆண்களோ பேசும்போது, அதை நாம் செவிமடுத்துக் கேட்க வேண்டும். உண்மையே நிலைக்கும்’ என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

பேசியே ஆக வேண்டும்

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பல பெண்கள் தாமாகவே முன்வந்து வைரமுத்துவின் மீதும் பாலியல் புகார் கூறினர். லீனா மணிமேகலை, அமலாபால் ஆகியோர் இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் புகார் கூறினார். அர்ஜுன், சிம்பு போன்ற திரையுலகப் பிரபலங்கள் மீதும் பாலியல் புகார்கள் எழுந்தன. `இத்தனை வருடங்கள் அவர்கள் ஏன் மௌனம் காத்தனர்?’, `குற்றம் சாட்டியவரின் சாதி என்ன’, என்ற ரீதியில் பல கேள்விகள் எழுப்பப்பட்டு, குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

வைரமுத்து, அர்ஜுன் ஆகியோர் குற்றச்சாட்டை மறுத்தனர். சுசி கணேசன் மறுப்போடு மட்டுமல்லாமல் மிரட்டவும் செய்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நடிகைகள் சமந்தா, வரலட்சுமி சரத்குமார், ஸ்வர்ணமால்யா, நடிகர் சித்தார்த், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பாக நடிகர் சித்தார்த் தனது டிவிட்டரில், ``அச்சம் என்பது மிகப் பெரிய மௌனம். இந்த மௌனத்தால் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் சில ஆண்டுகளாகவோ அல்லது எப்போதுமே அமைதியாக இருக்கக்கூடும்.

#Metoo இயக்கத்தின் இன்றைய எழுச்சி அவர்களின் நெடிய மௌனத்தைக் கலைத்துள்ளது. இனி குற்றவாளிகள் மௌனமாகிவிடக்கூடும். ஊடகங்களும் அரசும் தமிழ் சினிமாவும் தங்கள மௌனத்தைக் கலைக்க வேண்டும். இது குறித்து பேசியே ஆக வேண்டும். அதுவும் இப்போதே!” எனக் குறிப்பிட்டார்.

 

ஆதரவாய் நீளும் கரங்கள்

இயக்குநர் சுபாஷ் கபூர் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஆமீர்கான் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். பாலிவுட் தயாரிப்பாளர் குல்ஷன் குமாரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இந்தப் படம் `மொகல்' என்ற பெயரில் எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அண்மையில் சுபாஷ் கபூர் மீது கீதா தியாகி என்ற நடிகை அளித்த பாலியல் புகாரையடுத்து அந்தப் படத்திலிருந்து விலகுவதாக ஆமீர் கான் அறிவித்தார். ஆமீர் கானுடன் இணைந்து இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்க இருந்த டி-சீரிஸ் நிறுவனம், `மொகல்' புராஜெக்டிலிருந்து சுபாஷ் கபூரை அதிரடியாக நீக்கியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் அக் ஷய் குமார் நடிக்கும் ‘ஹவுஸ்புல்’ 4, படத்தின் இயக்குநர் சஜித்கான் மீது நடிகை ரேச்சல், உதவி இயக்குநர் சலோனி சோப்ரா, பத்திரிகையாளர் கரிஷ்மா உபாத்யாய் ஆகியோர் பாலியல் புகார்களைக் கூறினர். இதைக் கேள்விப்பட்ட அக் ஷய்குமார் அந்தப் படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்தார். மேலும், விசாரணை முடியும்வரை குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் நடிக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

 

எண்ணமும் சொல்லும்: கொடூரக் குற்றவாளிகளைக் களையெடுப்போம்

சேலம் ஆத்தூரில் குழந்தை ராஜேஸ்வரி மீது நடத்தப்பட்டிருக்கும் வன்முறையும் கொலையும் நம்மை அதிரவைக்கின்றன. குடும்பத்தினர் குற்றவாளியை உடனே காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டபோதும், சமூக ரீதியாகக் காப்பாற்றும் பொருட்டு அவருக்கு மனநிலை சரியில்லை என்று சொல்கிறார்கள்.

நான் அவர்களிடம் வைக்க விரும்புகின்ற கேள்வியெல்லாம், இத்தகைய ஒரு மனிதனை உங்களுக்கு முன்பே அடையாளம் தெரிந்து இருக்கும்தானே? அப்போதே நீங்கள் ஏன் அவருக்கெதிராகச் செயல்படவில்லை? குடும்ப உறுப்பினர் என்ற அடிப்படையில் இப்படித்தான் ஒவ்வொரு குற்றவாளியும் காப்பாற்றி வைக்கப்படுகிறான்.

கடைசியில் ஒரு மிதமிஞ்சிய குற்றச் செயல் நடைபெறும்போது கையறு நிலைக்கு ஆளாகிறார்கள். நம்முடைய வீடுகளில் ஒரு மனிதன் அசாதாரணமான குணங்களோடு தென்பட்டால் அவர்களைத் திருத்துவதற்கு மருத்துவ ரீதியாக முயற்சி எடுக்க வேண்டும். முடியாவிட்டால் அவர்கள்மீது குடும்பமே முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளைக் குறைப்பதற்கான அடிப்படை அணுகுமுறையாக இது இருக்க வேண்டும்.

- ஓவியா, செயற்பாட்டாளர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்