ஆடும் களம் 18: சென்னை முதல் ஆக்ஸ்ஃபோர்டு வரை

By டி. கார்த்திக்

தொண்ணூறுகளில் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் ஒரு சில பெண்கள் மட்டுமே இந்தியாவில் கோலோச்சிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ரூபா உன்னிகிருஷ்ணனும் ஒருவர். காமன்வெல்த் துப்பாக்கிச்சுடும் போட்டியில் முதன் முறையாகப் பதக்கம் வென்ற இந்தியப் பெண். இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் மகுடம் சூடிய இவர், சென்னையைச் சேர்ந்தவர்.

துப்பாக்கி மீது காதல்

ரூபாவுடைய தந்தை உன்னிகிருஷ்ணன் போலீஸ் உயர் அதிகாரியாக இருந்தவர். தந்தை போலீஸ் அதிகாரியாக இருந்ததாலோ என்னவோ துப்பாக்கிச் சுடுதல் இயல்பாகவே ரூபாவுக்குப் பிடித்துப்போனது. கடலூரில் ஒரு முறை தந்தையுடன் துப்பாக்கிச் சுடும் மையத்துக்குச் சென்றிருந்தபோது, துப்பாக்கியைப் பிடித்துப் பார்க்கும் வாய்ப்பு ரூபாவுக்குக் கிடைத்தது. அன்று முதல் துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்குச் செல்ல ரூபா விரும்பினார்.

மகளின் ஆசைக்கு அணை போடாத அவருடைய தந்தை, சென்னையில் உள்ள ரைஃபிள் கிளப்பில் சேர்த்துவிட்டார். அப்போது ரூபாவுக்கு 12 வயது. அன்று முதல் துப்பாக்கிச் சுடும் போட்டியில் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் களத்தில் இறக்கி ஜொலிக்கத் தொடங்கினார். 

தங்கம் சுட்ட தருணம்

ஒரு சில ஆண்டுகளிலேயே துப்பாக்கிச் சுடும் வீராங்கனையாக உருவாக்கிவிட்ட ரூபா, 1984-ம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் முதன் முறையாகக் களம் கண்டார். சப் ஜூனியர் பிரிவில் பங்கேற்ற அவர், முதல் போட்டியிலேயே தங்கப் பதக்கத்தை வசப்படுத்தினார்.

அதற்கு அடுத்த ஆண்டு கேரளாவில் துப்பாக்கிச் சுடும் சாம்பியன் போட்டியில் பங்கேற்றார். இந்தப் போட்டியில் பங்கேற்ற அனைத்துப் பிரிவுகளிலும் பதக்கங்களை அள்ளிக்கொண்டு வந்தார் ரூபா. இப்போது இருப்பதுபோல அப்போது ஜூனியருக்கெனத் தனிப் போட்டிப் பிரிவு கிடையாது. ஆனால், பொதுப் பிரிவில் பங்கேற்றுதான் எல்லாப் பதக்கங்களையும் அள்ளிக்கொண்டு வந்தார்.

இதன் பிறகு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை ரூபா பெற்றார். 1985-ம் ஆண்டு டெல்லியில் தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. தமிழகம் சார்பில் ரூபா பங்கேற்றார். இதில் ரூபா இடம்பெற்ற மகளிர் அணி பிரிவு வெள்ளிப் பதக்கம் பெற்றது. இதேபோல 1987-ம் ஆண்டில் அகமதாபாத்தில் தேசிய துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று ஸ்டாண்டர்டு ரைஃபிள், புரோன் பிரிவுகளில் வெண்கலப் பதக்கதோடு ரூபா திரும்பினார். அதற்கு அடுத்த ஆண்டும் அகமதாபாத்தில் நடைபெற்ற தேசியத் துப்பாக்கிச் சுடும் போட்டியில் ரூபா பங்கேற்றபோது தங்கப் பதக்கம் பெற்று அசத்தினார்.

சர்வதேசப் பயணம்

ரூபாவின் சர்வதேசப் பயணம் 1990-ம் ஆண்டில்தான் தொடங்கியது. அந்த ஆண்டு ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் 45-வது உலகத் துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில்  இந்தியாவின் சார்பில் ரூபா பங்கேற்றார். இதுதான் அவரது முதல் சர்வதேசப் போட்டி. இந்தப் போட்டியில் பதக்கம் வெல்லாவிட்டாலும் சர்வதேச அனுபவத்தைப் பெற இந்தத் தொடர் உதவியது.

ஆனால், 1991-ம் ஆண்டு இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் பெற்ற முதல் சர்வதேசப் பதக்கம் இதுதான். 1992-ம் ஆண்டில் கொழும்பில் தெற்காசியத் துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். முந்தைய ஆண்டில் விட்ட தங்கத்தை இந்த முறை கைப்பற்றினார். 1993-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கப் பதக்கம் இவர் வசமானது.

1994-ம் ஆண்டு ரூபாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. அந்த ஆண்டு கனடாவில் உள்ள விக்டோரியாவில் 15-வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் ‘ஸ்மால் போர்’ பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார் ரூபா. 

இதற்கு முன்புவரை காமன்வெல்த்தில் மகளிர் அணி துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்றிருந்தாலும் பதக்கம் வென்றதில்லை. அந்தக் குறையை ரூபாதான் போக்கினார். காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் சூடிக்கொண்டார்.

aadum 2jpg

காமன்வெல்த்தில் தங்கம்

1996-ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள ம்யூனிக், இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்றுத் திறமையை மேலும் வளர்த்துக்கொண்டார். இந்த அனுபவம் 1998-ம் ஆண்டில் ஜார்ஜியாவில் நடைபெற்ற உலக கிராண்ட் ஃபிரீ துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வெல்ல ரூபாவுக்கு உதவியது. இந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு இணையாக ரூபாவும் புள்ளிகளைக் குவித்ததால் சர்வதேச அளவில் அவருக்குப் பெருமை கிடைத்தது.

1998-ம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 16-வது காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. இந்த முறை எப்படியும் தங்கப் பதக்கத்தை வெல்வது என உறுதியாக இருந்தார் ரூபா. அவரது நம்பிக்கை பொய்க்கவில்லை. நினைத்ததுபோலவே தங்கப் பதக்ககத்தைக் கைப்பற்றியதோடு புதிய உலக சாதனையையும் படைத்தார். துப்பாக்கிச் சுடும் போட்டியில் கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறிவந்துகொண்டிருந்த தருணத்தில், படிப்பையும் கவனிக்க வேண்டியிருந்தது. சென்னையில் கல்லூரிப் படிப்பை முடிந்திருந்த ரூபா, மேற்படிப்புக்காக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

பல்கலைக்கழகத்தில் சாதனை

அங்கேயும் பல்கலைக்கழம் சார்பிலும் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்கத் தொடங்கினார். 1996 முதல் 1998 வரை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத் துப்பாக்கிச் சுடும் அணியில் இடம்பெற்று அனைத்துப் பதக்கங்களையும் வென்றுள்ளார். அதோடு பல்கலைக்கழங்களுக்கு இடையேயான போட்டியில் கேம்பிரிட்ஜ் அணியை வென்று 18 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டம் வெல்லக் காரணமாக இருந்தார்.

பிரிட்டிஷ் பல்கலைக்கழக விளையாட்டுச் சங்கத்தில் முன்னணி துப்பாக்கிச் சுடுவோர்களின் பட்டியலில் இடம்பெற்ற 5 பேரில் ரூபாவும் ஒருவர். துப்பாக்கிச் சுடுதலில் சிறந்து விளங்கியதற்காக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்  ‘ஃபுல் ப்ளூ’ என்ற பட்டம் வழங்கி கவுரவித்தது. இத்தகைய பட்டத்தைப் பெற்ற முதல் இந்திய வீராங்கனை ரூபாதான்.

துப்பாக்கிச் சுடுதலில் மகளிர் அணிக்குப் பெயர் பெற்றுக்கொடுத்த ரூபாவுக்கு 1999-ம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த ரூபா, தற்போது மேலாண்மை ஆலோசனை மையம் ஒன்றை நிறுவி, அதை நிர்வகித்துவருகிறார்.

(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

13 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

22 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்