எசப்பாட்டு 37: கொல்லப்பட்ட தெய்வங்கள்

By ச.தமிழ்ச்செல்வன்

தமிழகத்தின் பண்பாட்டு வரலாறு ஒன்று இதுவரை எழுதப்படவில்லை. அப்படி எழுதப்பட்டால் கிராம தெய்வங்கள் அல்லது நாட்டுப்புற தெய்வங்கள் என்றழைக்கப்படும் சனங்களின் சாமிகளுக்கு ஒரு முக்கிய இடம் அளிக்கப்பட வேண்டியிருக்கும். இத்தெய்வங்களில் பெரும்பாலானவை பெண் தெய்வங்கள் என்பதும் அவை யாவும் முன்னர் ஒரு காலத்தில் கொல்லப்பட்ட அல்லது தற்கொலை செய்துகொண்ட பெண்களே என்பதும் கவனிக்க வேண்டியவை. ஆண் தெய்வங்களும் அப்படியே. தென் மாவட்டங்களில் அதிகம் வணங்கப்படும் மதுரை வீரன் ஓர் உதாரணம். சாதி மீறிய காதலுக்காகக் கொல்லப்பட்டவன் அவன்.

நீலி கண்ணீரின் நியாயம்

நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் பரவலாக வணங்கப்படும் இசக்கி அம்மன், கணவனால் வஞ்சிக்கப்பட்டுக் கைவிடப்பட்டு, கண்ணீரோடு மாண்டவள். ‘நீலிக்குக் கண்ணீர் நெத்தியிலே’ என்றொரு சொலவடை உண்டு. அந்த நீலி, காதலித்தவனால் கைவிடப்பட்டவள். கண்ணீருடன் ஊராரிடம் நியாயம் கேட்டாள். ஆணாதிக்கச் சமூகம் அவளைக் கைவிட்ட செட்டிக்கு ஆதரவாகப் பேசி, ‘இவள் சும்மா கண்ணீர் வடித்து ஏமாற்றுகிறாள்’ என்று தீர்ப்பளித்தது. அப்போதிருந்துதான் ‘நீலி கண்ணீர்’ என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தச் சொல்லே நியாயம் மறுக்கப்பட்ட பெண்ணின் துயரத்தைச் சுமந்து நிற்கிறது. அதையறியாமல் நாமும், “சும்மா நீலிக்கண்ணீர் வடிக்காதே” என்று பேசிவருகிறோம்.

27CHLRD_GODESSESநல்லதங்காள் கிணறுகள்

தமிழகத்தில் பரவலாக ‘தீப்பாய்ஞ்ச அம்மன்’ கோயில்கள் உண்டு. இவை யாவும் குடும்ப வன்முறையால் அல்லது சாதி மறுத்த காதலுக்காக ஊரார் அவமதிப்புக்கு அஞ்சித் தம் உடலுக்குத் தாமே தீ வைத்துக்கொண்ட பெண்மணிகளின் நினைவாக எழுப்பப்பட்டவைதாம். தமிழகத்தில் நன்கறியப்பட்ட இன்னொரு பெண் தெய்வம் ‘நல்லதங்காள்’. பஞ்ச காலத்தில் தன் ஏழு குழந்தைகளுக்கும் பசியாற்ற வழியின்றித் தன் அண்ணன் வீட்டுக்குப் போய் நல்லதங்காள் கையேந்தி நின்றாள். அண்ணியால் துரத்தப்பட்ட அவள், தன் ஏழு குழந்தைகளையும் பாழுங்கிணற்றில் தூக்கிப்போட்டுத் தானும் குதித்துத் தற்கொலை செய்துகொண்டாள்.

உண்மையில் இந்தக் கதை நடந்தது இன்றைய விருதுநகர் மாவட்டத்தில். ஆனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் “இதுதான் நல்லதங்காள் குதித்த கிணறு” என்று மக்கள் காட்டும் கிணறுகள் பல உண்டு. நல்லதங்காளைப் போல குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட பெண்கள் எல்லா வட்டாரத்திலும் இருந்திருப்பார்கள்தானே. நல்லதங்காளைப் போலச் செத்துட்டாளே என்று பேசப்பட்டு அதுவே பின்னர் காலவெள்ளத்தில் நல்லதங்காள் கிணறு என்றாகிவிட்டிருக்கும்.

ஆகவே, இன்று பல நல்லதங்காள் கிணறுகள் காணக் கிடைக்கின்றன. ஒவ்வொரு கிணறும் ஒரு பெண்ணின் துயரக்கதையைப் பேசும் சின்னமல்லவா? நல்லதங்காள் மாண்டது தாது வருடப் பஞ்சத்தில் என்பாரும் உண்டு. தாதுவருடப் பஞ்சம் என்பது 1876-ல் பரவிய பஞ்சம்.

பண்பாட்டுச் சேகரிப்பு

மதுரையில் ‘கருத்துக் கூடம்’ ஒன்றை நாங்கள் அமைத்து நாட்டுப்புறப் பண்பாட்டு அடையாளங்களைச் சேகரித்த நாட்களில் நான்கு தென் மாவட்டங்களிலிருந்து மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற தெய்வங்களின் தோற்றக் கதைகளைச் சேகரித்தோம். அவற்றில் பெரும்பாலானவை கொல்லப்பட்ட பெண் தெய்வங்களே. இதெல்லாம் ஏதோ ஒரு காலத்தில் நடந்தவை என்றுதான் எல்லாரையும்போல நாங்களும் கருதிக்கொண்டிருந்தோம். ஆனால், எங்கள் சேகரிப்புகளை வாசிக்கையில் இன்றும் இத்தகைய கொல்லப்பட்ட தெய்வங்கள் வந்துகொண்டே இருப்பதைக் காண முடிந்தது

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூனம்பட்டி என்ற கிராமத்தில் குடியிருக்கும் தெய்வம் சர்க்கரையம்மாள். அவளுடைய கணவன் மகாலிங்கம் பெருங்குடிகாரன். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். அவர்களைக் காப்பாற்ற அவள் அன்றாடம் கூலி வேலைக்குப் போனாள்.

பொறுப்பில்லாத கணவன் குடித்துவிட்டு வந்து அடிப்பதும் குடிக்கக் காசு கேட்பதும் என ஒரு நரக வாழ்க்கையில் அவளைத் தள்ளிக்கொண்டிருந்தான். வெறுத்துப்போன சர்க்கரையம்மாள், நல்லதங்காளைப் போல தன் பிள்ளைகளைக் கிணற்றில் போட்டுத் தானும் குதித்தாள். அதில் ஒரு குழந்தை மட்டும் உயிர் தப்பி நடந்த கதையைச் சொன்னது. இது 1980-ல் நடந்தது. இன்றைக்கு அந்தக் கிணற்றடியில் நடுகல் நாட்டி சர்க்கரையம்மாள், அவளுடைய பிள்ளைகள் மகாலட்சுமி, மல்லிகா, விநாயகமூர்த்தி ஆகிய நால்வரும் தெய்வங்களாக நிற்கிறார்கள்.

27CHLRD_GODESSES.1rightதொடரும் கொலைகள்

பெண்கள் தெய்வங்களாக்கப்படுவது பழங்கதை அல்ல.

சிவகங்கை அருகே உடைகுளத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் என்பவருடைய மகள் தமிழ்ச்செல்வி, வயது 19. கடந்த 2015 மார்ச் 3-ம் தேதி, பெற்ற தந்தையாலேயே அவள் எரித்துக் கொல்லப்பட்டாள். பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பூமிநாதனும் காதலித்துவந்தனர். இதற்கு தங்கராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தந்தைக்கும் மகளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

தங்கராஜின் எதிர்ப்பையும் மீறி தமிழ்ச்செல்வி, பூமிநாதனுடன் பழகிவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், மகள் தமிழ்ச்செல்வியை எரித்துக் கொலை செய்தார். இதற்கு உடந்தையாக தங்கராஜின் நண்பர்களான பரோட்டா மாஸ்டர்கள் ஐந்து பேர் இருந்துள்ளனர்.

சம்பவத்தன்று இரவு ஊருக்கு வெளியே உள்ள கொக்குபத்தை காட்டுப்பகுதிக்குத் தன் மகளை தங்கராஜ் அழைத்துச் சென்றார். அவரை ஒரு மரத்தில் கட்டி மரக்கட்டைகளை அடுக்கினார்கள். தமிழ்ச்செல்வி தனது தந்தையிடம், “என்னை விடுங்கப்பா” எனக் கெஞ்சினார். ஆனாலும் தங்கராஜின் மனம் கரையவில்லை.

“சரி. என்னை உயிரோடு விடமாட்டீங்க. தம்பி கார்த்திக் ராஜ், தங்கச்சி அபிநயாவை நல்லா பார்த்துக்குங்க. நான் தீயில் எரியப் போறேன்; என் நகைகளை தங்கச்சிகிட்ட கொடுங்க” என்று கழற்றிக் கொடுத்தார். மூக்குத்தியைக் கழற்ற முடியவில்லை. சிறிது நேரத்தில் விறகுகட்டையால் அவரைத் தலையில் தாக்கி, கழுத்தை இறுக்கிக் கொன்றார்கள். பின், விறகின் மேல் உடலை வைத்து, பெட்ரோலை ஊற்றி எரித்தார்கள். “ஒரு எலும்புகூட மிஞ்சக் கூடாது என்பதற்காக விடிய விடிய அங்கேயே இருந்தோம்’ என்று பின்னர் வாக்குமூலம் அளித்தார்கள்.

வழிபட்டால் சரியாகிவிடுமா?

கொல்லப்பட்ட பெண்களைக் கொன்ற ஆண்களும் குடும்பத்தாரும் ஆணாதிக்க-சாதிய சமூகமுமே பிறகு ஏன் வழிபடுகிறார்கள்? தங்கள் குற்ற மனதைச் சமன் செய்துகொள்ளும் ஓர் உளவியல் இதில் செயல்படுகிறது. தலைமுறைகள் தாண்டும்போது நடந்த கதை மறந்துபோகும். குற்ற மனதும் கரைந்து போகும். குல தெய்வ வழிபாடு என்னும் வெறும் சடங்காக அது மிஞ்சி நிற்கும்.

கால இயந்திரத்தில் ஏறிப் பயணித்தால் காலவெளியெங்கும் கொலைக்களங்களில் பெண்கள் கதறும் ஒலியே நிரம்பித் தளும்புவதைக் கேட்க முடியும். இன்னும் எழுதப்படாத இந்தப் பண்பாட்டு வரலாறு நம்மீது சுமத்தும் குற்ற உணர்வை எந்தச் சமுத்திரத்தின் தண்ணீரால் நாம் கழுவப்போகிறோம்?

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: tamizh53@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்