வேலூர் வாசகியரின் வெற்றிக் களிப்பு!

By வ.செந்தில்குமார்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் நடத்தப்படும் மகளிர் திருவிழா, கடந்த வாரம் வேலூர் வாசகியரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. கடலூர், மதுரை, கோவை, ஈரோடு, நெல்லை, திருச்சி ஆகிய ஊர்களில் நடைபெற்ற மகளிர் திருவிழா முத்தாய்ப்பாக மார்ச் 10 ஞாயிற்றுக்கிழமையன்று கோட்டை நகராம் வேலூரில் நிலைகொண்டது. வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி யில் நடைபெற்ற மகளிர் திருவிழாவில் வெளி யூர்களில் இருந்தும் வாசகியர் பங்கேற்றனர்.

சாதிக்கும் பெண் சக்தி

வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினார். ‘‘அந்தக் காலத்தில் பெண்கள் மீது செயல்படுத்தப்பட்ட அடக்குமுறைகள் இன்று ஒப்பீட்டளவில் குறைவு. நம் பாட்டிகள் யாரும் படித்திருக்க மாட்டார்கள். நம்முடைய அம்மாக்கள் ஓரளவுக்குப் படித்திருப்பார்கள். தற்போது நாம் கல்லூரிப் படிப்பை எளிதாகப் படிக்க முடிகிறது. இது நல்ல முன்னேற்றம். பிளஸ் 2 முடித்ததும் எனக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். குழந்தை பிறந்த பிறகு தொலைதூரக் கல்வியில் எம்ஏ., பி.எட் முடித்து ஆசிரியராகப் பணியாற்றினேன். ஆசிரியர் பணியில் இருந்து தற்போது அரசியல் பணிக்கு வந்திருக்கிறேன். நான் மேயராகப் பணியாற்றுவதற்கும் கல்வியே காரணம்.

பெண்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாவும் கலைஞரும் பெரியாரின் பெண் முன்னேற்றக் கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்தார்கள். தமிழக அரசின் பெரும்பான்மையான திட்டங்கள் பெண்களை மையப்படுத்தியவையே. கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டம், அரசுப் பள்ளிகளில் படித்துக் கல்லூரி செல்லும் மாணவியருக்குப் புதுமைப் பெண் திட்டம் போன்றவை முக்கியமானவை. தமிழ்நாட்டில்தான் அதிகமான கல்லூரிகள் இருக்கின்றன. அரசின் நலத் திட்டங்களைப் பயன்படுத்தி பெண்கள் அனைவரும் படித்து முன்னேற வேண்டும். அந்தக் காலத்தில் எப்படி இருந்தோம் என்கிற வரலாற்றை நாம் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இப்போது நாம் அடைந்திருக்கும் உயர்வு புரியும். வேலூர் மாவட்டத்தில் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், மேயர், மாநகராட்சி ஆணையர், துணை ஆணையர் என எல்லாரும் பெண்கள்தாம். இப்படி எல்லாத் துறைகளிலும் பெண்கள் பங்களிக்க வேண்டும். பெண்கள் அரசியலுக்கும், அரசு உயர் பதவி களுக்கும் வர வேண்டும். பெண்களால் அனைத்துத் துறைகளிலும் சாதிக்க முடியும். இதற்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது. பெண்கள் முன்னேறினால் அவர்களது குடும்பத்தோடு நாடும் முன்னேறும்’’ என்று சுஜாதா ஆனந்தகுமார் பேசினார்.

திருமணம் தடையல்ல

வேலூர் கிராமியக் காவல் நிலைய ஆய்வாளர் ஏ.சுபா, பெண்கள் பாதுகாப்பு குறித்துப் பேசினார். “ஒரு பக்கம் நிறைய துறைகளில் பெண்கள் முன்னேறி வந்துள்ளனர். இன்னொரு பக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்தபடி இருக்கின்றன. குறிப்பாகக் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் நமக்கு நன்கு அறிமுகமான நபர்களால்தான் நடக்கின்றன. பெற்றோரின் அஜாக்கிரதையும் பொறுப்பற்ற தன்மையும்தான் இதற்குக் காரணங்கள். தங்கள் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் குறித்துப் பெற்றோர்தான் புரிய வைக்க வேண்டும். பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளிடம் பெற்றோர் மனம்விட்டுப் பேச வேண்டும். பள்ளியில் என்ன நடந்தது, யாராவது தவறாக நடந்துகொண்டார்களா என்பதையெல்லாம் கேட்டறிய வேண்டும். குழந்தைகள் ஏதாவது சொன்னால் பெற்றோர் அதற்குச் செவி சாய்க்க வேண்டும். நாம் அவர்களை நம்புகிற போதுதான் குழந்தைகளும் நம்மிடம் அனைத்தையும் பகிர்ந்துகொள்வார்கள்.

இளம் தலைமுறையினர் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. செல்போனிலேயே மூழ்கி வாழ்க்கையைத் தொலைப்பதற்குப் பதிலாக அதையே நம்மைக் காக்கும் ஆயுதமாகவும் பயன்படுத்தலாம். பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் பெருகிவரும் நிலையில் உங்கள் படங்களை யாராவது தவறாகச் சித்தரிக்க முயன்றால் பயப்படாமல் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள். சைபர் குற்றப்பிரிவு சேவை தொடர் பாக 1930 என்கிற எண்ணையும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1098 என்கிற எண்ணையும் தொடர்புகொள்ளலாம். பெண்களின் பாதுகாப்புக்காக ‘காவலன் எஸ்.ஓ.எஸ்’ என்கிற செல்போன் செயலியைத் தமிழகக் காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களது செல்போனில் அதைத் தரவிறக்கம் செய்து தேவையான நேரத்தில் பயன்படுத்தலாம்.

அரசுப் பள்ளியில் படித்த நான் திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்த பிறகுதான் காவல் துறையில் சேரக் கடுமையான பயிற்சி எடுத்தேன். திருமணத்துக்குப் பிறகு தொலைதூரக் கல்வியில் பட்டப்படிப்பு முடித்து உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தேன். திருமணம் முடிந்துவிட்டால் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்கக் கூடாது. நிறைய வாய்ப்புகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. அவற்றைப் பெண்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், வேலூர் மாவட்டம் காட்பாடி பெரியபுதூர் கிராமத்தைச் சேர்ந்த எம்.கே.சந்தியா, புரோ கபடி போட்டியின் நடுவராகக் கடந்த ஐந்து சீசன்களில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ‘உஜாலா லிக்விட் டிடர்ஜென்ட்’ நிறுவனத்தினரால் ‘வுமன் ஆஃப் சப்ஸ்டன்ஸ்’ விருதும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன.

திடீர்க் கேள்விகள், உடனடிப் பரிசுகள்

பேச்சரங்கத்தைத் தொடர்ந்து குடியாத்தம் ஜனனி சோபியா கரகாட்டக் குழுவினரின் கரகாட்டம் வாசகியரைத் தாளம்போட வைத் தது. கரகாட்டக் கலைஞர்களோடு வாசகியரும் கல்லூரி மாணவியரும் இணைந்து ஆட, மகளிர் திருவிழா களைகட்டியது. வாசகியருக்கு பலூன் ஊதி உடைத்தல், கயிறு இழுத்தல், ஃபேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வென்றவர்களுக்கு மட்டுமல்லாமல், பங்கேற்ற அனைவருக்குமே பரிசுகள் வழங்கப் பட்டன. போட்டிகளுக்கு இடையே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுச் சரியான விடையளித்தவர்களுக்கு உடனடிப் பரிசுகள் வழங்கப்பட்டன. இருவருக்கு பம்பர் பரிசுகள் வழங்கப்பட்டன.

சின்னதிரை தொகுப்பாளினி தேவி கிருபா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். வேலூர் மகளிர் திருவிழாவை ‘இந்து தமிழ் திசை’யுடன் உஜாலா லிக்விட் டிடர்ஜென்ட் இணைந்து நடத்தியது.பிரெஸ்டா உமன்ஸ் வேர், ரோஷன் பேக்ஸ், மாதங்கி டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடட் நெமிலி, சத்யா ஹோம் அப்ளையன்ஸ், காஞ்சிபுரம் பச்சையப்பா சில்க்ஸ், தமிழ்நாடு துணிக்கடை-ஆற்காடு, திவ்யா சாரி சென்டர்- சேத்துப்பட்டு, செய்யாறு குமரன் பிரைவேட் லிமிடெட், லலிதா ஜுவல்லரி, அம்பாலால் எலக்ட்ரானிக்ஸ், வேவ்ஸ் ஷோரூம்-விருதம்பட்டு வேலூர், வெங்கடேஸ் வரா பாலிடெக்னிக் கல்லூரி அடுக்கம்பாறை, ஜே.சி.ஐ வேலூர் கிங்ஸ், ரோட்டரி கிளப் ஆப் வேலூர் கிங்ஸ், சரண்யா ஸ்டுடியோ, வேணு ஃபுட்ஸ் குடியாத்தம் உள்ளிட்ட நிறு வனங்களும் அமைப்புகளும் இணைந்து நடத்தின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

11 mins ago

தமிழகம்

1 min ago

இந்தியா

11 mins ago

விளையாட்டு

20 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்