சிறகுகள் இல்லாத பறவை

By பா.பானுமதி

பெண் என்பவள் ஆணாதிக்கச் சமூகத்தில் சிக்கித் தவிக்கும், சிறகுகள் இல்லாத பறவை. அந்தப் பறவைக்கு அனைத்து சுதந்திரமும் கொடுத்து விட்டோம். ஆனால், பறவை கூண்டைவிட்டு எங்கும் செல்லக் கூடாது என்ற ஒரே ஒரு கட்டுப்பாட்டை மட்டும் செயல்படுத்த வேண்டும் என்கிறது இந்தச் சமூகம். அப்படியும் சில பறவைகள் கூண்டைவிட்டு வெளியே வந்து வானில் சிறகு விரித்து பறக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், இன்னும் சில பறவைகளுக்கோ வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

கட்டுப்பாடு

மனிதனின் அடிப்படை உரிமையான உடையில்கூட பெண்ணுக்குக் கட்டுப்பாடுதான். பெண்களை விலைப் பொருட்களாக மாற்றிவிட்ட ஊடகங்களும், திரைப்படங்களும்தான் இதற்குக் காரணம். பொழுதுபோக்குதானே, இதை ஏன் பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்று பலர் கேட்கலாம். ஆனால் இன்றைய தலைமுறையினர் அதிலிருந்து கற்றுக்கொள்ளக் கூடாததை எல்லாம் நிறைய கற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

படிப்பு

விரும்பியத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவும் பெண்களுக்கு அனுமதியில்லை.பெண்களின் படிப்பு சார்ந்த முடிவுகளை பெரும்பாலான வீடுகளில் ஆண்களே எடுக்கிறார்கள் .அதையும் மீறி வெளியே வந்தாலும் சமூகம் அதற்கு இடம் தருவதில்லை. பெண்களுக்கென்றே சில படிப்புகளை ஒதுக்கி விடுகிறார்கள் பெரும்பாலான பெற்றோர்கள். பாதுகாப்பு என்ற போர்வையிலேயே பெண்கள் வளர்க்கப்படுகிறார்கள். உண்மையில் பெண்களுக்கு அந்தப் பாதுகாப்பு கிடைக்கிறதா? நீங்கள், நான் என்று ஒவ்வொருவருமே ஏதோ ஒரு வகையில் பெண்களுக்கான கொடுமைகளைச் செய்துகொண்டேதான் இருக்கிறோம். இங்கே யாரையும் தனித்துக் குறை கூறுவதிற்கில்லை.

தற்காப்பு

எத்தனை வீடுகளில் பெண் குழந்தைகளுக்குத் தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தருகிறோம்? இதெல்லாம் பெண் பிள்ளைகளுக்கு எதற்கு என்று விட்டுவிடுகிறோம். விளைவு, அநீதி நடக்கும் நேரங்களில் வேறொருவரின் துணையை நாட வேண்டியுள்ளது. சாதுவாக, அமைதியாக இருப்பதற்குப் பெண்மை என்று பெயரில்லை. பெண்மை என்பது வீரம் நிறைந்தது. ஆனால் அந்தப் பெண்மையை இந்தச் சமூகம் தன் கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்துக் கொள்கிறது.

மாற்றம் முதலில் பெண்ணிடம் இருந்தே வர வேண்டும். தனக்கு என்ன தேவையோ அதைத் துணிச்சலோடு எடுத்துச் சொல்லும் மன உறுதி பெண்களுக்குத் தேவை. பெண்கள் தங்களுக்குத் தேவையான உரிமைகளுக்காக யாரிடமும் யாசகம் கேட்கத் தேவையில்லை. இந்தச் சமூகம் பெண்ணை கண்ணே, மணியே என்று பாராட்டி, வேலைக்காரியாக மட்டுமே வாழப் பணிக்கிறது. எப்போதும் எதற்காகவும் பெண் ஒரு குறுகிய வட்டத்துக்குள் தன்னை குறுக்கிக் கொள்ளக் கூடாது.

கனவுகள் சுமந்த பெண்ணே, கலங்கி நிற்காதே. விடியும் பொழுது உனக்காகத்தான் !

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்