களம் புதிது: ஒலிம்பிக்கே எங்கள் இலக்கு

By பி.எம்.சுதிர்

ஓயாத கடல் அலைகளைப் போலத்தான் சில சாதனை மனிதர்களும். அவர்களது அகராதியில் ஓய்வென்பதே இருக்காது. புதிது புதிதாகச் சாதனைகளைப் படைக்கத் தொடர்ந்து முயன்றுகொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட சாதனை மனிதர்களில் ஒருவர், ‘பய்யோளி எக்ஸ்பிரஸ்’ என்று இந்தியர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் தங்க மங்கை பி.டி.உஷா

எண்ணத்துக்குச் செயல்வடிவம்

சர்வதேசத் தடகள வரைபடத்தில் இந்தியாவை இடம்பெறச்செய்த பி.டி.உஷா, ஆசியப் போட்டிகள் உட்பட சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்காக வாங்கிக் குவித்த பதக்கங்கள் ஏராளம். 1979-ம் ஆண்டு முதல் இந்தியாவுக்காகப் பல போட்டிகளில் ஓடி சாதனை படைத்த உஷா, 2000-ம் ஆண்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், உஷாவின் மனம் அவரை ஓய்வெடுக்க விடவில்லை. இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் ஒரு வெண்கலப் பதக்கத்தைக்கூடப் பெற முடியவில்லையே என்ற ஏக்கம் அவரது இதயத்தை வருத்திக்கொண்டிருந்தது.

“எத்தனை சர்வதேசப் போட்டிகளில் ஜெயித்தாலும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியவில்லை என்பது எனக்கு ஒரு மனக்குறைதான். நான் மட்டுமல்ல; மில்கா சிங், ஸ்ரீராம் சிங் போன்றவர்கள்கூட ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தவர்கள்தாம். எங்களில் யாராவது ஒருவர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருந்தால் தடகளத்தில் இந்தியாவின் நிலை இன்று மாறியிருந்திருக்கும். எங்களுக்கு கிடைத்த வெற்றியால் கவரப்பட்டு மேலும் பலர் தடகளத்தில் சாதித்திருப்பார்கள்.

ஒலிம்பிக்கில் என்னால் சாதிக்க முடியாததை, நான் உருவாக்கும் வீராங்கனைகளை வைத்து சாதிக்க வேண்டும் என்ற விருப்பத்தில்தான் ‘உஷா ஸ்கூல் ஆஃப் அத்லெடிக்ஸ்’என்ற பள்ளியை 2002-ல் கொயிலாண்டியில் மிகச் சிறிய வாடகைக் கட்டிடத்தில் ஐந்து மாணவிகளுடன் தொடங்கினேன். என் கணவர் ஸ்ரீநிவாசனும் இதற்குப் பேருதவியாக இருந்தார்” என்கிறார் உஷா.

தற்போது அது கோழிக்கோட்டை அடுத்துள்ள கினலூரில் 30 ஏக்கர் பரப்பளவில் சிந்தடிக் டிராக், உலகத் தரம்வாய்ந்த உடற்பயிற்சிக் கூடம் என மாநில அரசு, பொதுமக்கள் ஆகியோரின் உதவியால் வளர்ந்து நிற்கிறது. அது மட்டுமல்ல; கடந்த 15 ஆண்டுகளில் பிரபல ஓட்ட வீராங்கனையும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டு பிரிவுகளில் பதக்கம் வென்றவருமான டிண்டு லுக்கா உட்பட எட்டு சர்வதேச வீராங்கனைகளை இந்தியாவுக்கு இந்தப் பள்ளி அளித்துள்ளது. உஷாவின் இந்தப் பயிற்சிப் பள்ளியில் உருவான வீராங்கனைகள், சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 61 பதக்கங்களை வென்றிருக்கிறார்கள்.

கவனம் ஈர்த்த வெற்றிகள்

முதலில் இந்தப் பள்ளியை யாரும் அத்தனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பி.டி.உஷா ஏதோ விளையாட்டாக இதை நடத்துவதாக நினைத்தார்கள். ஆனால், அதைப் பொய்யாக்க உஷா கடுமையாகப் போராடினார். தன்னிடம் பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளிடம் கட்டணம் வாங்கவில்லை. இலவசமாகத் தங்குமிடம் வழங்கித் தடகளப் பயிற்சி அளித்ததுடன் அருகில் உள்ள பள்ளியில் அவர்கள் படிப்பதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தார். மாநில அளவிலான போட்டிகளிலும் தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இவருடைய மாணவிகள் சாதனைகளைப் படைக்கத் தொடங்கியதும், இவரது பள்ளி மீது கவனம் திரும்பியது.

இவர்களது பள்ளி மாணவிகள் தொடர்ந்து சர்வதேச, தேசியப் போட்டிகளில் பதக்கங்களைக் குவிக்கத் தொடங்கியதும் கேரள அரசு கினலூர் என்ற இடத்தில் 2008-ல் சொந்தமாக நிலம் வழங்கியது.

மக்களின் பங்களிப்போடு

‘உஷா ஸ்கூல் ஆஃப் அத்லெடிக்ஸ்’ பள்ளியில் தற்போது 15 மாணவிகள் உள்ளனர். “இவர்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இங்கே தங்கி பயிற்சிபெறத் தேவையான உதவிகளைச் செய்துவருகிறோம். தடகளப் பயிற்சி மட்டுமின்றி அவர்களின் பள்ளி, கல்லூரிப் படிப்புகளையும் கவனித்துக்கொள்கிறோம்” என்கிறார் பி.டி.உஷா.

ஆரம்பத்தில் தொழிலதிபர்கள், மாநில அரசு ஆகியோரின் உதவிகளுடன் இந்தப் பள்ளி நடந்துவந்தாலும் தற்போது புதிதாக ‘கிரவுட் ஃபண்டிங்’ முறையை அறிமுகப்படுத்தியுள்ளார் பி.டி.உஷா.

“இந்தத் திட்டத்தின்படி உங்களால் முடிந்த பணத்தைச் செலுத்தி எங்களிடம் பயிற்சிபெறும் தடகள வீராங்கனைகளுக்கு ஸ்பான்சர் செய்லாம். இதற்கு வருமான வரி விலக்கு உண்டு என்பது ஒருபுறம் இருந்தாலும், நம்மாலும் இந்திய விளையாட்டுத் துறைக்கு ஏதோ செய்ய முடிந்தது என்ற திருப்தியும் உங்களுக்குக் கிடைக்கும். பணம் மட்டும்தான் என்றில்லை. விளையாட்டுக் கருவிகள் அறைகலன்கள் என்று எதை வேண்டுமானாலும் கொடுத்து உதவலாம்.

உங்களுக்குத் தெரிந்து யாராவது இளம் விளையாட்டு வீராங்கனைகள் போதிய உதவியின்றித் தவித்தால் அதையும் எங்களுக்குத் தெரியப்படுத்தலாம். நாங்கள் அவர்களைக் கவனித்துக்கொள்வோம். மொத்தத்தில் இந்திய விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் ஓர் இயக்கமாகவே இதை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம்” என்கிறார் உஷா.

இடைவிடாத பயிற்சி

100 மீ, 200 மீ, 400 மீ என எல்லா வகையிலான ஓட்டங்களிலும் கலந்துகொண்டவர் பி.டி.உஷா. “குறிப்பிட்ட ஏதாவது ஓர் ஓட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் என்னால் ஒலிம்பிக்கில் சாதித்திருக்க முடியும் என்று நினைக்கிறேன். அதனால்தான் என்னிடம் பயிற்சி பெற வருபவர்களுக்கு ஏற்ற தடகள விளையாட்டு எது என்பதை அறிந்து குறிப்பிட்ட விளையாட்டில் அவர்களுக்குத் தீவிரப் பயிற்சி அளிக்கிறேன்” என்கிறார்.

ஒலிம்பிக்கில் தன்னால் பெற முடியாத பதக்கத்தை 2020-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக்கில் தன் மாணவிகள் மூலம் பெற வேண்டும் என்பதே உஷாவின் தற்போதைய லட்சியம்.

“800 மீ ஓட்டத்தில் டிண்டுவும் 400 மீ ஓட்டத்தில் ஜிஸ்னா மேத்யூவும் என் கனவை நனவாக்குவார்கள் என்று நம்புகிறேன். தடகளப் போட்டியில் நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் அவர்கள் இருவரும் தீவிரப் பயிற்சி எடுத்துவருகிறார்கள். அதைத் தவிர வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் என் மாணவிகள் பதக்கத்தை அள்ளி வருவார்கள் என நம்புகிறேன்” எனச் சொல்லும்போது பி.டி.உஷாவின் கண்களில் நம்பிக்கை ஒளி வீசுகிறது.

“கடுமையாக முயற்சி செய்யுங்கள். எந்தக் கட்டத்திலும் தளராதீர்கள். சில தோல்விகள் வந்தாலும் சோர்ந்துவிடாமல் கடுமையாக முயலுங்கள். வெற்றி நிச்சயம் கிட்டும்” எனச் சொல்லும் பி.டி.உஷாவின் வார்த்தைகள், ஒவ்வொரு இளம் விளையாட்டு வீரருக்கும் உந்து சக்தி!

பயிற்சிப் பள்ளியில் சேர...

ஒவ்வோர் ஆண்டும் கினலூரில் உள்ள தனது பயிற்சிப் பள்ளியில் தடகளத் தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களைப் பள்ளியில் சேர்த்துக்கொள்கிறார் உஷா. இந்த ஆண்டுக்கான தேர்வு, வரும் பிப்ரவரி 9-ல் நடக்கிறது. திறமையும் விருப்பமும் இருப்பவர்கள் தங்கள் பயோ டேட்டா, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் காலை 8 மணிக்குள் நேரில் அணுகலாம். இது பற்றி மேலும் தகவல்களைப் பெற விரும்புபவர்கள் உஷா ஸ்கூல் ஆஃப் அத்லெடிக்ஸின் +91 496 2645811, +91 496 2645812 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம். ushaschool@rediffmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

43 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

வணிகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்