பெண்ணும் ஆணும் ஒண்ணு 28: மணமுறிவு யாருக்கு நல்லது?

By ஓவியா

மணமுறிவுகள் பெருகிவருவது குறித்துத் தற்போது பலரும் புலம்புகிறார்கள். அதிலும் பட்டிமன்றப் பேச்சாளர்கள், ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள், சமுதாய அறிவுரைப் பேச்சாளர்கள் பலருக்கும் அவர்கள் சொற்பொழிவுக்கான சரக்குச் சுரங்கம் இந்த மணமுறிவு விவகாரம். உலகப் பொருளாதார மையம் தனது ஆய்வில் பாலினச் சமத்துவத்தில் (அதாவது பெண்களின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், அரசியல் பிரதிநிதித்துவத்தில்) 144 நாடுகளில் 108-வது இடத்தில் இந்தியா இருப்பதாகக் கூறுகிறது. ஆனால், நமது நாட்டின் சொற்பொழிவுகளில், உரையாடல்களில் இது தலையாய பிரச்சினை என்று யாராவது பேசுகிறார்களா?

பெண்களின் உரிமைகளைப் பேணுங்கள் என்கிற அறிவுரைகூட அவர்களைக் குடும்ப அமைப்புக்குள் தக்கவைக்கும் நோக்கத்தில்தான் முன்வைக்கப்படுகிறது. பெருகிவரும் மணமுறிவுகள்தாம் நாட்டின் எந்தவொரு சீரழிவுக்கும் முதன்மைக் காரணமாகவும் முதன்மை எடுத்துக்காட்டாகவும் முன்வைக்கப்படுகின்றன. மணமுறிவுகள் நடக்கக் கூடாது என்பதில் காட்டப்படுகிற அக்கறையில் நூற்றிலொரு பங்காவது இந்த மணமுறைக்குள் பெண் படுகின்ற பாடு பற்றிக் காட்டப்பட்டிருக்கிறதா? உண்மையில் இன்னும் கூட மணமுறிவு விகிதம் ஒரு சதவீத்த்தைக் கூட தொடவில்லை

போராடிப் பெற்ற உரிமை

சென்னை போன்ற நகரங்களில் மணமுறிவுகள் அதிகரித்திருக்கின்றன. இப்போது உள்நகரங்களிலும் குடும்ப நல நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நாடளவிலேயே இந்த மணமுறிவுகள் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. மணமுறிவுகள் அதிகரிப்பது நல்லதா கெட்டதா என்பதைத் தாண்டி மணமுறிவு என்பது நம் நாட்டில் பெண்கள் இயக்கங்கள் போராடிப் பெற்ற உரிமை என்பதை மறக்கக் கூடாது. விவாகரத்து வழக்குகளைத் தொடுத்துவிட்டு நீதிமன்றங்களிடம் மாட்டி அல்லல்படும் பெண்கள் மற்றும் ஆண்களைப் பற்றிதான் நாம் கவலைப்படுகிறோம். முதலில் மணமுறிவு என்பது ஒரு பாவம் என்கின்ற சிந்தனையிலிருந்து நாம் விடுபட்டாக வேண்டும். இங்கு ‘நாம்’ என்பதில் நீதிபதிகளும் உள்ளடங்குவர். இரண்டு பேர் சேர்ந்து வாழ்ந்தார்கள். அவர்கள் பிரிய விரும்புகிறார்கள். அது நியாயமா இல்லையா என்று தீர்மானிக்கும் உரிமை மூன்றாவது நபர் எவருக்கும் இருக்கக் கூடாது.

அரசுக்கும் பொறுப்பு உண்டு

நிபந்தனையற்ற உரிமையாக விவாகரத்து கொடுத்துவிட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்ற சிந்தனையும் இருக்கிறது. இது மாதிரியான சூழல்களில் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மறுத்துவிட முடியாது. ஆனால், மணமுறிவு பெற வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்ட பிறகு, ஒரே வீட்டில் சண்டை சச்சரவு களுடன் வாழும் தம்பதியரால் குழந்தைகள் மனநலம் பாதிக்கப்படுவது பற்றியும் யோசிக்க வேண்டும். தற்போது பள்ளிகளில் குழந்தைகள் வழியாக, ‘பெரியவர்கள் சண்டை போட்டுக்கொள்ளக் கூடாது’ என்று பெற்றோர்களுக்கு அறிவுரை சொல்கிறார்கள். சிறுவயதிலேயே குழந்தைகளைப் பெரியவர்களுக்கு அறிவுரை வழங்கவைப்பது எப்படிச் சரியான குழந்தை வளர்ப்பாகும்? அது தவிர கணவன் - மனைவி சண்டைகள் எப்போதுமே அற்ப காரணங்களுக்காகவே நிகழ்கின்றன என்கிற கருத்தின் அடிப்படையிலேயே இது போன்ற நடவடிக்கைகள் தோன்றுகின்றன. உண்மையில் மிக ஆழமான விரிசல்கள் அற்பமான காரியங்களைச் சாக்கிட்டு வெளிப்படுபவை என்பதே பல இடங்களில் உண்மை. இதற்கு மணமுறிவுகளைத் தடுத்து மனங்களைக் கட்டிப் போடுவதால் மட்டும் தீர்வு கிடைத்துவிடாது. குழந்தைகளின் மீதான தனிநபர் பொறுப்பை வெகுவாகக் குறைக்கும் விதத்தில் அரசின் பொறுப்பு நிறுவன ரீதியாகவே அதிகரிக்கப்பட வேண்டும். குழந்தை வளர்ப்பில் அரசின் பங்கு அதிகரிக்கப்பட வேண்டும். கல்வி வணிகமயமாவது பெருமளவில் தடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் சிறுவர்கள் பெற்றோரைச் சார்ந்திருக்கும் சூழலை அது வலுவாக்கும்.

வேண்டாமே அதிகாரம்

மணமுறிவு வழக்குகளில் சட்டமும் நீதிமன்றமும் முறைப்படுத்தும் வேலையைத்தான் செய்ய வேண்டுமே தவிர அதிகார அமைப்புகளாகச் செயல்படக் கூடாது. அந்த வாழ்க்கை அந்தத் தனிமனிதர்களுக்குச் சொந்தமானது. அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று தீர்மானிப்பது அவர்களின் உரிமை. அந்த அடிப்படையில் சட்டம் சொல்கிற காரணங்களுக்காக மட்டுமே மணமுறிவு பெற வேண்டும் என்றிருக்கும் நிலையே ஒரு தரப்பினரைச் சட்டரீதியாக மன உளைச்சலுக்கு ஆளாக்கக்கூடியது. பாதிக்கப்படுவது ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம். சேர்ந்து வாழ முடியாத மனநிலையில் பிரிந்து போவதற்காக நீதிமன்ற வாசல்களில் வழக்கறிஞர்களின் தயவில் ஆண்டுக்கணக்கில் காத்திருப்பது கொடுமையிலும் கொடுமை.

சட்டம் இல்லாச் சிக்கல்

பிரிந்து போகும்போது கோரப்படும் நஷ்ட ஈடு தொடர்பாகவும் பேச வேண்டும். 10-15 ஆண்டுகள் ஒரு கூட்டு வாழ்க்கையில் தங்கள் உழைப்பைச் செலுத்தியவர்கள் பிரிந்துபோகும்போது எவ்வாறு தங்கள் உடைமைகளைப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்கிற கணக்கீட்டை வழங்குவதற்கான அடிப்படைச் சட்டமே நம்மிடம் இதுவரை இல்லை. இது எவ்வளவு பெரிய மோசடி! ஒரு தொழிலாளிக்கான ஊதிய வரம்பை நிர்ணயிக்கும்போது உண்மையில் அவரைப் பராமரித்து, அலுவலகம் அனுப்பும் மனைவியின் உழைப்பின் மதிப்பும் அடங்கியே இருக்கிறது.

நம் மரபில் ‘அறுத்துக் கட்டும்’ சாதியினர் உண்டு. பெண் கொண்டுவந்த சொத்தைத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்ற நீதியை அவர்கள் வகுத்திருந்தனர். ‘அறுத்துக் கட்டும் வழக்கம்’ இருந்த சமுதாயங்கள் பெரிய சொத்துடைமைச் சமுதாயங்கள் அல்ல. எனவே ஏதோ பாத்திரம், பண்டம், சில நகைகளுடன் பெண் தனது பிறந்த வீட்டுக்குத் திரும்பிவிடுவாள். மறுமணம் நடக்கும் வாய்ப்பிருப்பதால் இன்னொரு ஆணின் பாதுகாப்புக்குள் அல்லது பொருளாதார வளையத்துக்குள் அவள் சென்று சேர்ந்துவிடுவாள். ஆனால், இன்றைய சட்டத்தில் ஆண் வருமானத்துக்கேற்ப அந்தப் பெண்ணுக்கு வாழ்வூதியம் தர வேண்டுமென்றிருக்கிறது. அந்தப் பெண் படித்து, வருமானமுள்ளவளாக இருந்தால் அவளுக்கு அந்த வாழ்வூதியம் பெறும் உரிமை கிடையாது.

இதுநாள்வரை அந்தக் குடும்பத்தில் அவர்கள் செலுத்திய உழைப்புக்கு என்ன நஷ்டஈடு என்பதுதான் இங்கு பல பெண்களின் குமுறல். உண்மையில் இதற்கான வலுவான அல்லது தெளிவான சட்டப் பின்புலமில்லாத நிலையில் வழக்கறிஞர்களின் வாதங்களை நம்பியே வழக்குத் தொடுப்பவர்கள் நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. நீதிபதிகளின் மனச் சாய்வுகளை நம்பி வழக்கறிஞர்கள் நிற்கிறார்கள். சட்டங்கள் தெளிவாக இருந்தால், இந்த நிலையை வெகுவாக மாற்றலாம் என்பதுடன் பெரிய அளவில காலதாமதத்தைக் குறைக்கலாம்.

பொதுவாக இது மாதிரியான வழக்குகளில் உண்மை வெல்லாது என்பதைவிட, உண்மையையே சொல்ல முடியாது என்கிற நிலைதான் அதிகம். என்ன சொன்னால் சட்டத்தில் என்ன தீர்வு என்பதைக் கவனத்தில் கொண்டு சொல்ல வேண்டுமென்றாகிவிடுகிறது. ‘பொய்மையும் வாய்மையிடத்து’ என்று வள்ளுவர் கொடுத்த இடத்தை எவ்வளவுதான் நீட்டுவது? மணமுறிவு வழக்குத் தொடுப்பவர்களுக்கு வேறொரு வாழ்க்கைக்கான தேவை இருக்கிறது. அதன் நியாயத்தையும் நாம் உணர வேண்டும்.

(இன்னும் தெளிவோம்)

கட்டுரையாளர், பெண்ணியச் செயல்பாட்டாளர்

தொடர்புக்கு:oviacs2004@yahoo.co.uk

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்