முகங்கள்: டெல்லிப் பெண்ணுக்கு ஐ.நா. விருது

By எம்.சூரியா

டெ

ல்லியைச் சேர்ந்த இளம்பெண் ரியா ஷர்மா, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய தன்னார்வ அமைப்பின் சேவையைப் பாராட்டி சிறப்பு விருதை அளித்திருக்கிறது ஐ.நா சபை. அமில வீச்சால் வாழ்க்கையே சூனியமாகிவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த நூற்றக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் ரியா, தான் தொடங்கிய அமைப்பை நிரந்தரமாக மூடும் காலமே தனக்கு மகிழ்ச்சியைத் தரும் எனச் சொல்கிறார்!

சகோதரியின் அரவணைப்பு

பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த போது, ஆவணப்படம் எடுப்பதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வாய்ப்பு ரியாவுக்குக் கிடைத்தது. அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை படம்பிடிக்கச் சென்றவர், அவர்களின் துயரத்தையும் சமூகத்தில் இருந்து அவர்கள் புறக்கணிக்கப்படுவதையும் கண்டு மனம் வெதும்பினார். அருகில் இருந்து கவனித்தபோதுதான், அவர்களுடைய வலி ரியாவுக்குப் புரிந்தது. மற்றவர்கள் முகம் சுளித்துக்கொண்டு சென்றபோது, பாதிக்கப்பட்ட பெண்களை ஒரு சகோதரிபோல் அரவணைத்தார் ரியா.

இவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. அதன் விளைவாக உருவானதுதான் Make Love Not Scars (MLNS) தொண்டு நிறுவனம். 2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பிற்குத்தான் விருது வழங்கி கவுரவித்திருக்கிறது ஐ.நா. கடந்த மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ணத் தூதரான பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் கையால் Global Goals 2017 விருதைப் பெற்றிருக்கிறார் ரியா ஷர்மா.

ஆதரவும் வேலைவாய்ப்பும்

அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவது, அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவுவது, அமில வீச்சுக்கு இலவச சிகிச்சையை உறுதிசெய்வது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகிய இலக்குகளை மையமாகக் கொண்டு MLNS தொண்டு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதுதவிர அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்டரீதியாக நியாயம் கிடைக்கவும் இந்த அமைப்பு உதவுகிறது.

அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு மையத்தை டெல்லியில் கடந்த ஆண்டு தொடங்கியதில் ரியாவுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. இந்த மையத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கென்றே பிரத்யேகமாக ஒரு இணையதள சேவையையும் ரியா தொடங்கினார். அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு உள்ள திறமைகளை இந்த இணையதளத்தில் வெளிப்படுத்தி, வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் அதனை வடிவமைத்துள்ளார் ரியா. பல நிறுவனங்கள், அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களை வேலைக்குச் சேர்த்துள்ளன.

ரியாவுக்குக் கிடைத்த ஐ.நா. விருது சார்பாக வெளியிடப்பட்ட வீடியோவில், “அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் யாருமே இல்லை என்ற நிலை உருவாகி அதன் காரணமாக MLNS அமைப்பை நிரந்தரமாக மூடும் காலம் வந்தால் மகிழ்வேன்” எனக் கூறியிருக்கிறார் ரியா ஷர்மா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

உலகம்

13 mins ago

வணிகம்

29 mins ago

வாழ்வியல்

25 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

ஆன்மிகம்

43 mins ago

விளையாட்டு

48 mins ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்