நலவாழ்வின் நிஜ நாயகர்கள்: உலக சுகாதாரப் பணியாளர்கள் வாரம் ஏப். 8 - 12

By மு.வீராசாமி

‘அம்மை ஊசி குத்த வர்றாங்க ஓடுடா டோய்’ என்று சுகாதாரப் பணியாளர்களைப் பார்த்தவுடன் சிறுவயதில் ஓட்டமாக ஓடி ஒளிந்துகொண்டிருந்தது ஒரு காலம். சிறுவர்கள்தான் என்றில்லை, பெரியவர்களும்கூட அப்போது ஓடி ஒளிந்துகொண்டிருந்தார்கள். அனைவருக்கும் அந்த ஊசியின் மேல் அவ்வளவு பயம்.

கையில் ஒரு டிரேயுடன் மருத்துவப் பணியாளர்கள் வருவதைத் தூரத்தில் பார்த்துவிட்டால் எல்லோரும் பிடித்துக்கொண்டிருந்தார்கள் ஓட்டம். ஊசிபோட்டால் காய்ச்சல் வரும், ஊசி போட்ட இடம் வீங்கிப் புண்ணாகும் என்று பயந்து அவ்வளவு எளிதில் யாரும் ஊசி போட்டுக்கொள்ள முன்வந்ததில்லை.

நீதிமன்றத் தண்டனை

1965-66 அம்மை நோய் தாண்டவமாடிக் கொண்டிருந்த காலம். அப்போது அந்த நோயால் மக்கள் இறந்தும் போயிருக்கிறார்கள். நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு கடுமையாகப் போராடியது. பொதுச் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறையுடன் இணைந்து, தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அம்மை நோய் கட்டுப்படுத்தப்பட்டது. இது இக்காலத் தலைமுறைக்குத் தெரிந்திருக்காது.

அம்மை தடுப்பூசிபோட மறுத்தவர்களை நீதிமன்றக் கூண்டில் ஏற்றி அபராதம் விதிக்கப்பட்டதும் தெரிந்திருக்காது. நீதிமன்றப் படி ஏறுவது கேவலம் என்று கருதிப் பலரும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். கிராம முன்சீப்பின் பங்கை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இவர்கள், வீடு வீடாகக் கிராமக் காவலர்களை அனுப்பித் தடுப்பூசி போடாதவர்களைக் கண்டுபிடித்து அழைத்துவந்து போடச் செய்திருக்கிறார்கள்.

அதேபோல ‘பெரியம்மை நோய் கண்டிருப்பவர்களைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும்’ என்று அரசு சுவரொட்டி விளம்பரம் செய்ததும் நினைவிருக்கிறது. இப்படித்தான் அம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டது.

இடையறாத பணி

இதுபோலத் துரத்தித் துரத்தி ஒரு நோய் கட்டுப்படுத்தப்பட்டதும் கட்டுப்படுத்த வரும் ஊழியர்களைப் பார்த்து மக்கள் பயந்ததும் இன்னமும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. ஆனால், அதுபோன்ற மருத்துவக் களப்பணியாளர்களால்தான் நாம் இன்றைக்கு நலவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சிக்குன் குன்யா, டெங்கு எனத் தீவிர நோய்கள் பரவும் போதெல்லாம் இவர்களுடைய பணி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இப்போதும் சுகாதாரப் பணியாளர்கள் நம்மைத் தேடி வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். எங்கேனும் தண்ணீர் தேங்கியிருக்கிறதா என்று பார்ப்பதற்காக; தேங்கியிருக்கிற தண்ணீரில் கொசு முட்டைகள் இருந்தால் அதை அழிப்பதற்காக; ஊரில் தீவிரக் காய்ச்சல் பரவியிருந்தால் தேவையான சிகிச்சை தந்து தக்க வழிகாட்டுவதற்காக; பொதுமக்களிடம் நலவாழ்வு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக என்று இவர்களுடைய பணி நீள்கிறது.

ஆனால், நடைமுறையில் இந்தக் களப்பணியாளர்களுக்கு மேற்சொன்ன பொதுச் சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதில் பல சிரமங்கள். களப்பணி ஆய்வுக்கு வரும்போது சில இடங்களில் மக்கள் போதிய ஒத்துழைப்பு தருவதில்லை. இதனால் சில நேரம் பிரச்சினைகளை உடனே கட்டுப்படுத்துவதில் சுணக்கம் ஏற்படுவது உண்டு.

போலியோ ஒழிப்பு எனும் திருவிழா

இன்று நம் நாட்டில், போலியோவை முற்றிலுமாக ஒழித்ததில் களப்பணியாளர்களின் பங்கு அதிகம். கடந்த பல வருடங்களாக நடைபெற்று வரும் ‘தீவிரப் போலியோ சொட்டு மருந்து இயக்கம்’அனைவருக்கும் தெரிந்ததே. இன்று போலியோ இல்லாத நிலை உருவாகி இருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் சுகாதாரப் பணியாளர்களின் சேவை மனப்பான்மையுடன் கூடிய கடும் உழைப்பு இருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது.

ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெற்றுவரும் இந்தத் தீவிரச் சொட்டு மருந்து முகாம், ஏறக்குறையத் திருவிழா போலத்தான் நடைபெறும். ஒரு வாரத்துக்கு முன்னரே ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிடும். மருத்துவமனையைப் பார்ப்பதற்குத் திருமணம் நடக்கும் வீடுபோல இருக்கும். அனைத்துப் பணிகளையும் இரவே சரிபார்த்து ஊழியர்கள் தயார்படுத்துகிறார்கள்.

சொட்டுமருந்து போடும் நாளன்று எந்தக் குழந்தைக்கும் சொட்டுமருந்து கொடுப்பது விடுபடாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. மீறி விடுபட்டவர்களுக்கு அடுத்த நாட்களில் களஆய்வு செய்து கொடுக்கப்படுகிறது.

சில இடங்களுக்கு அவ்வளவு எளிதில் சொட்டுமருந்தைக் கொண்டுபோய்விட முடியாது. பேருந்தோ, ஜீப்போ செல்ல முடியாத இடங்களுக்குக் கழுதை அல்லது குதிரை மூலமாகக் கொண்டு செல்கிறார்கள். இதேபோல மலைப்பகுதிகளில் கரடுமுரடான பாதையில் பல கி.மீ. தூரம் சொட்டுமருந்துப் பெட்டியைத் தலையில் சுமந்து செல்ல வேண்டியும் வரும்.

ஆரோக்கியக் காவலர்கள்

அண்மையில்கூட, பல மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள், களப்பணியாளர்கள் கும்பகோணம் மகாமகப் பெருவிழாவுக்கு அனுப்பப்பட்டுச் சீரிய முறையில் பணியாற்றினார்கள். மகாமகக் குளத்து நீரை எடுத்து அடிக்கடி ஆய்வு செய்து தரத்தை உறுதிப்படுத்தினார்கள். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதை உறுதிசெய்தார்கள். மருத்துவ முகாம் மூலம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளைச் செய்து தந்தார்கள்.

அடுத்தமுறை சுகாதாரக் களப்பணியாளர்கள் உங்கள் பகுதிக்கு வரும்போது இன்முகத்தோடு அவர்களுடைய பணிகளை நினைவுகூர்ந்து பாராட்டுங்கள். அவர்களுடைய பணி மேலும் சிறக்க அது உதவியாக இருக்கும். நம்முடைய நலவாழ்வில், அவர்களுடைய பங்கு கணிசமானது என்பதை மறக்காமல் இருப்போம்.

கட்டுரையாளர்,
மதுரை தேசிய கண் மருத்துவ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

14 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

உலகம்

21 mins ago

வணிகம்

37 mins ago

வாழ்வியல்

33 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

ஆன்மிகம்

51 mins ago

விளையாட்டு

56 mins ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்