பள்ளி திறப்பு: தேவை நிதானம், முன்னெச்சரிக்கை

By முகமது ஹுசைன்

கரோனா பெருந்தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டு 19 மாதங்கள் முடிந்துவிட்டன. இது மாணவர்களின் கல்வியை மட்டுமல்ல; சமூகத்தை அவர்கள் எதிர்கொள்ளும் திறனையும் சேர்த்துக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. ஏனென்றால், பள்ளிகள் மாணவர்களின் கல்வியுடன் மட்டும் தொடர்புடையவை அல்ல; அவர்கள் சமூகத்தை எதிர்கொள்ள உதவும் சமூக அறிவையும் சேர்த்தே வழங்குபவை.

இந்த நிலையில் ஒன்பதாம் வகுப்புக்கு மேற்பட்ட பள்ளி வகுப்புகளும் கல்லூரிகளும் இரண்டு மாதங்களாகச் செயல்பட்டுவருகின்றன. கரோனா பரவல் தொடர்ச்சியாக மட்டுப்பட்டிருப்பதால், நவம்பர் 1 முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்தே பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. கரோனா முற்றிலும் முடிவுக்கு வராத சூழலில், கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வீட்டிலிருந்து படிப்பது மாணவர்களுக்கு இயல்பாகி இருக்கக்கூடும். இதனால், பெற்றோரைப் பிரிந்து பள்ளி செல்வதும், பாதுகாப்பான, பழகிய சூழலிருந்து மற்றவர்கள் கூடும் பள்ளிக்குச் செல்வதும் நண்பர்களைச் சந்திப்பதும் சில குழந்தைகளுக்கு அச்சம் அளிப்பதாக இருக்கலாம். இந்த மனத்தடையை அகற்றி அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்குப் பெற்றோர் செய்ய வேண்டிய ஐந்து எளிய வழிமுறைகள்:

அன்றாட நடவடிக்கைகள்

கரோனா பொதுமுடக்கத்தால், மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகள் சீர்குலைந்து இருக்கின்றன. பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழலில், அவர்களின் பழக்கவழக்கங்களை கரோனாவுக்கு முந்தைய நிலைக்கு மாற்றியமைப்பது அவசியம். ஒரு நிலையான, குறித்த நேரத்தில் உறங்க வைப்பது, விழிக்கச் செய்வது, சாப்பிடச் செய்வது போன்ற மாற்றங்களுக்குக் குழந்தைகளைப் பெற்றோர் மெதுவாகப் பழக்கப்படுத்த வேண்டும். இதைக் கண்டிப்புடன் அமல்படுத்தாமல், அவர்களிடம் பேசிப் புரிய வைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

நேரம் கொடுங்கள்

பள்ளிக்குச் செல்வதால், மாணவர்களுக்கு உற்சாகமோ, மனச்சோர்வோ, அச்சமோ கவலைக்கு உள்ளாக்கும் பிற உணர்வுகளோ ஏற்படலாம். குழந்தைகளுக்கு வீடே பாதுகாப்பான இடம். எனவே, விரக்தி, சோர்வு, பயம் போன்ற எதிர்மறை எண்ணங்களை வீட்டில் வெளிப்படுத்தவும்பகிர்ந்துகொள்ளவும் குழந்தைகளுக்கு உதவுங்கள். பொறுமையுடன் கேட்பதே அவர்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும், ஆசுவாசப்படுத்தும்.

கவலைகளை அங்கீகரியுங்கள்

கரோனா காலத்தில் பள்ளிக்குச் செல்வது குறித்த அச்சத்தைக் குழந்தைகள் வெளிப்படுத்தினால், அதை அக்கறையுடன் அணுகுங்கள். நீங்களும், ஆசிரியர்களும் அவர்களைப் பொறுப்புடன் பார்த்துக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். அவர்களின் அச்சத்துக்கான காரணம் எதுவாக இருந்தாலும், அதை அங்கீகரித்துக் குழந்தைகளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள்.

பரிவு காட்டப் பழக்குங்கள்

கரோனா காலத்தில் ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு விதமான அனுபவங்களை, சவால்களை, இன்னல்களை எதிர்கொண்டிருக்கக்கூடும். பிறரின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதற்கு உங்கள் குழந்தையைப் பழக்குவது, பிற மாணவர்களின் நிலையை அவர்கள் புரிந்துகொண்டு, பரிவுடன் அணுக உதவும். அவர்களுக்கு நல்ல நட்பையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.

நம்பிக்கையை விதையுங்கள்

சூழல் எவ்வளவு சவாலானதாக இருந்தாலும், அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு குழந்தைகள் எளிதில் தகவமைத்துக் கொள்வர். பள்ளிகளில் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களைக் குழந்தைகளுக்கு நினைவூட்டுங்கள். அது அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும். பள்ளி செல்லும் ஆவலை அதிகரிக்கும். பள்ளியிலிருந்து திரும்பும் குழந்தையின் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றம் தெரிந்தால், உடனே பள்ளியைத் தொடர்புகொள்ளுங்கள். தேவைப்பட்டால் மருத்துவ உதவியைப் பெறத் தயங்காதீர்கள்.

ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்?

பள்ளிக்கு வரும் மாணவர்களில் சிலர் மன அழுத்தம், பதற்றம், அச்சம், சோகம் போன்ற மனச்சிக்கல்களுடன் இருக்கலாம். சிலர் வீட்டில் நிகழ்ந்த வன்முறைகளாலோ இழப்புகளாலோ பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். இத்தகைய குழந்தைகளைப் புரிந்துகொண்டு அவர்களை இயல்புநிலைக்குக் கொண்டுவரும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. கற்றலையும் மாணவர்களின் உணர்வுச் சமநிலையையும் உறுதிசெய்ய உதவும் எளிய வழிமுறைகள்:

செவிகொடுங்கள்

மாணவர்களின் குறைகளை அக்கறையுடன் கேட்பதும், அதைப் பரிவுடன் அணுகுவதுமே ஒரு ஆசிரியராக உங்கள் முன் இருக்கும் தலையாய பணி. ஒவ்வொரு மாணவரும் தனியாகச் சந்தித்து உரையாடுவதற்கு வாய்ப்பு கொடுங்கள். கவலைகொள்ள வைக்கும் அளவுக்கு முக்கியமான விஷயத்தை மாணவர்கள் பகிர்ந்தால், தாமதிக்காமல் உரியவர்களின் கவனத்துக்கு எடுத்துச்செல்லுங்கள்.

கவனியுங்கள்

மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் முன்னர், அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள நேரம் ஒதுக்க வேண்டும். சிலருக்குக் கவனம் செலுத்துவதில் சிரமம் இருக்கலாம், கற்றலின் வழக்கமான நிலைக்குத் திரும்ப அதிக காலம் தேவைப்படலாம். மாணவர்கள் ஓய்வெடுக்கவும், பள்ளிகளில் நிம்மதியாக உலவவும், நண்பர்களுடன் மீண்டும் இணையவும் தேவைப்படும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுங்கள்.

சரியான தகவல்களைத் தெரிவியுங்கள்

கோவிட்-19 பற்றிய மாணவர்களின் கேள்விகளுக்குத் துல்லியமாகப் பதிலளிக்க, அறிவியல் சான்றுகளின் அடிப்படையில், குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற ஆதாரங்களைப் பயன்படுத்துங்கள். கரோனா அபாயங்களைக் குறைக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தெரிவியுங்கள். அவற்றைப் பின்பற்ற வலியுறுத்துங்கள். வகுப்பறையில் கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டால் என்ன செய்வது என்பது உட்படப் பள்ளிப் பாதுகாப்பு நெறிமுறைகளைக் குழந்தைகளுக்கு நினைவூட்டுங்கள்.

ஆலோசனை கேளுங்கள்

வகுப்பறையைப் பாதுகாப்பானதாகவும் வசதியான இடமாகவும் மாற்றும் முயற்சியில் மாணவர்களை ஈடுபடுத் துங்கள். ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளைக் குழந்தைகளும் உங்களுக்கு வழங்கலாம்; வகுப்பறையின் சுவர்களை வண்ணமயமானதாகவும் வரவேற்கும் செய்திகளால் அலங்கரிப்பதிலும் அவர்களை ஈடுபடுத்துங்கள். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது, எந்தவொரு சவாலையும் எளிதில் சமாளிக்க உதவும் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். குழந்தைகளின் பங்களிப்புகளையும் முயற்சிகளையும் பாராட்ட மறக்காதீர்கள்.

முன்மாதிரியாக இருங்கள்

ஆசிரியர்களே மாணவர்களுக்கு நேர்மறையான முன்மாதிரி. உங்களைப் பார்த்து, மன அழுத்தச் சூழ்நிலை களைச் சமாளிக்கத் தேவைப்படும் திறன்களை மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள். எனவே அமைதியாகவும், நேர்மை யாகவும், அக்கறையுடனும் இருங்கள், மாணவர்களிடம் நேர்மறையான அணுகுமுறையை வெளிப்படுத்துங்கள்.

பள்ளிகள் என்ன செய்ய வேண்டும்?

l கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பெற்றோர்களை வலியுறுத்துங்கள்.

l பள்ளி வளாகத்தினுள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குங்கள்.

l தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்துங்கள்.

l மாணவர்கள், ஆசிரியர்களின் நடமாட்டம் குறைவாக இருக்குமாறு வகுப்புகளையும் வகுப்பறைகளையும் மாற்றியமையுங்கள்.

l இருக்கையிலோ திறந்தவெளியிலோ சிறு குழுவாக மாணவர்கள் உணவு உண்ணுமாறு அறிவுறுத்துங்கள்.

l வகுப்பறையில் காற்றோட்டம் இருக்குமாறு ஜன்னல், கதவுகளைத் திறந்துவையுங்கள்.

l மாணவர்களின் உடல் வெப்பத்தைத் தினமும் பரிசோதியுங்கள்.

l பள்ளி வளாகத்தையும் வகுப்பறையையும் சுத்தமாகப் பராமரியுங்கள், கிருமிநாசினி தெளியுங்கள்.

l மாணவர்கள் தனிப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவியுங்கள். பள்ளி வாகனம் என்றால், தகுந்த இடைவெளியுடன் அமர வையுங்கள்.

இது ஒரு கொண்டாட்டம்

நவம்பர் 1 அன்று தமிழகத்தில் ஒன்றரைக் கோடிக் குழந்தைகள் பள்ளி செல்ல இருக்கிறார்கள். இது மாணவர்களின் கல்வியுடன் மட்டும் தொடர்புடைய சாதாரண நிகழ்வு அல்ல. கரோனா பெருந்தொற்று காரணமாக எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டுள்ள நம் சமூகத்துக்குத் தேவைப்படும் புத்துணர்வை, மகிழ்ச்சியுடன் பள்ளி செல்லும் மாணவர்கள் அளிக்கக்கூடும். அதே வேளையில் அவர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்வோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்