புழுதியோடு புறப்படும் நோய்கள்

By டி. கார்த்திக்

வெள்ளத்துக்குப் பிறகு சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுப் பிரச்சினை முளைத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று புழுதிப் படலம். சாலையை வேகமாகக் கடக்கும் வாகனங்கள் கிளப்பும் புழுதி, மக்களை மூச்சு முட்ட வைத்துக்கொண்டிருக்கிறது.

சென்னையில் கொட்டித் தீர்த்த கன மழையாலும், பெருக் கெடுத்து வந்த வெள்ளத்தாலும் சாலைகள் பெயர்ந்துவிட்டன. பல சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. சில தார் சாலைகள் பெயர்ந்து காணாமல் போய்விட்டதால் மண் மேடுகளாகவும் குழியுமாகவும் சாலைகள் காட்சியளிக்கின்றன. இந்தச் சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கிளம்பும் புழுதியும் தூசியும் சாலையில் செல்வோரைப் பதம் பார்த்து வருகிறது. குறிப்பாகச் சென்னைப் புறநகரில் இந்தப் பிரச்சினை அதிகரித்துள்ளது. சாலைகளில் கிளம்பும் புழுதி, தூசியைக் கண்டு கொள்ளாமல்விட்டால் பல்வேறு பிரச்சினைகள் வரக்கூடும்.

என்ன பிரச்சினை?

ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கும் சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கும் குளிர்காலம் எப்போதுமே அலர்ஜியாகவே இருக்கும். இப்போது சாலையை மறைக்கும் அளவுக்குப் புறப்படும் புழுதி, சுவாசக் கோளாறு கொண்டவர்களுக்குச் சிக்கலை அதிகரித்துள்ளது.

வழக்கமாகக் குளிர்காலத்தில் வைரஸ்கள், பாக்டீரியாக்களின் வளர்ச்சி எக்குத்தப்பாகவே இருக்கும். எனவேதான் குளிர்காலத்தில் ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள், சுவாசக் கோளாறு கொண்டவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோருக்குப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

வழக்கமாகக் குப்பை, தூசி, புழுதியில் ‘ரெஸ்பரேட்டரி ட்ராப்லெட் நியூசிலியா’ என்ற நோய்க் கிருமி இருக்கும். புழுதி, தூசியுடன் அழுக்குபோல இது கலந்திருக்கும். இது காற்றில் கலக்கும்போது, அதை சுவாசிக்கும் மனிதர்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் வரலாம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

தாக்கும் நோய்கள்

என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பது குறித்துப் பொதுநல மருத்துவர் நா. எழிலன் விளக்குகிறார்: “நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள்ளவர்களுக்குக்கூடத் தும்மல், இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஏற்படலாம். இது ஐந்து நாட்களுக்குள் சரியாகிவிடும். ஆஸ்துமா நோயாளிகள், சுவாசக் கோளாறு கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முதியவர்கள், குழந்தைகளுக்குச் சுவாச உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

அது மட்டுமல்ல காசநோயாளி ஒருவர் சாலையில் எச்சிலை துப்பினால், அதிலுள்ள ஆயிரக்கணக்கான கிருமிகள் புழுதி, தூசியோடு ஒன்றாகிக் காற்றில் கலந்துவிடும். அதை சுவாசிக்கும் ஒருவருக்குக் காச நோய் வரலாம்” என்கிறார் எழிலன்.

இந்தியாவில் சாலையில் எச்சில் துப்புவதும், சிறுநீர் கழிப்பதும் மிகவும் சாதாரணமாக இருக்கிறது. பொது இடங்களில் இதைச் செய்யும்போதும் அதிலிருந்து வெளிப்படும் கிருமிகள் தூசி, புழுதியில் கலந்து பெரும் பாதிப்புகளை மனிதர்களுக்கு ஏற்படுத்திவருவது நிதர்சனமான உண்மை. இந்தப் பிரச்சினையைப் போக்க வழியே கிடையாதா? காற்றிலுள்ள நச்சுகளை வடிகட்டும் முகமூடிகளைப் பயன்படுத்துவது, தூசியைத் தடுப்பதற்கான நல்ல வழி.

“புழுதியும் தூசியும் அதிகமாக எழும் இடங்களில் முகமூடி அணியலாம். இது 100 சதவீதம் பாதுகாப்பைத் தரும் என்பதில்லை. ஆனால், காற்றிலுள்ள 80 - 85 சதவீதம் நச்சுகளை வடிகட்டிவிடும். வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் ஏற்படும் புழுதிப் படலத்தில் இருந்து தப்பிக்க, இதுதான் சிறந்த வழி” என்கிறார் எழிலன்.

புழுதியை இனிச் சாதாரணமாக நினைக்க வேண்டாம், எச்சரிக்கையாக இருந்து ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்வோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

5 mins ago

ஓடிடி களம்

12 mins ago

விளையாட்டு

17 mins ago

க்ரைம்

22 mins ago

வணிகம்

39 mins ago

தமிழகம்

43 mins ago

சுற்றுலா

47 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

57 mins ago

கல்வி

1 hour ago

கல்வி

26 mins ago

மேலும்