மரபு மருத்துவம்: சேற்றுப்புண், பித்தவெடிப்பை எப்படிச் சமாளிப்பது?

By மருத்துவர் எஸ்.காமராஜ்

எப்போதும் நீரில், சேற்றில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கும், தொடர் மழைக் காலத்தில் வெள்ளம் சூழ்ந்து தண்ணீரில் தத்தளிக்கும் மக்களுக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை சேற்றுப்புண், பித்தவெடிப்பு.

காரணம் என்ன?

மழைநீர், சேற்றுநீர், சுகாதாரமற்ற நீரில் நடப்பது மற்றும் நீண்ட நேரம் நிற்பது, உடல் எடை அதிகமாக இருப்பது, காலில் செருப்பு அணியாமல் கரடு, முரடான பாதையில் நடப்பது, தேய்ந்து போன ஒழுங்கற்ற - தரமற்ற செருப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது, குளிக்கும்போது பாதங்களை அழுக்கு தேய்த்துக் குளிக்காதது, பாதம், குதிகாலில் அழுக்கு சேர்வது போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

சொரியாசிஸ் என்ற காளாஞ்சகப் படை தோல் நோய், கரப்பான், தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நாள்பட்ட தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட நேரம் - நீண்ட நாட்களுக்குச் செருப்பு மற்றும் தரமற்ற ஷூக்களைப் பயன்படுத்துவது, வெளியில் சென்று வந்தபிறகு - தோட்ட வேலை - வீட்டு வேலை செய்து முடித்த பிறகு கை, கால்களைச் சரியாக, சுத்தமாகக் கழுவாததாலும், நாள்பட்ட நோய் நிலைகளிலும், வைட்டமின் சத்து குறைவாலும், ஒரு சில மருந்துகளின் ஒவ்வாமையாலும், நாள்பட்ட மருத்துவச் சிகிச்சையின் பக்க விளைவாலும், தொற்றுநோய் கிருமிகளாலும், நாள்பட்ட, தீராத மலக்கட்டு இருந்தாலும் சேற்றுப் புண், பித்த வெடிப்பு ஏற்படலாம்.

நோய் அறிகுறி

கால் ஓரங்களில் வெடிப்பு, புண், தடிப்பு, குறிப்பாகக் குதிகாலில் வெடிப்பு, புண், நடந்தால் தாங்கமுடியாத வலி, குத்தல், நீண்ட நேரம் நிற்க முடியாமை, கால்களில் செருப்பு இல்லாமல் நடக்க இயலாமை, செருப்பு போட்டாலும் ஒரு சிலருக்குத் தாங்க முடியாத வலி, வேதனை, சில நேரங்களில் வெடிப்பிலிருந்து ரத்தம் வருதல், கைவிரல், கால்விரல் இடுக்குகளில் புண், வலி, நீர் வடிதல், நெறி கட்டுதல், சுரம், காலில் ஷூ, சாக்ஸ் அணிய முடியாமை, ஒருவித துர்நாற்றம் போன்றவை அறிகுறிகளாக ஏற்படக் கூடும்.

வராமல் தடுப்பது எப்படி?

வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் கை, கால், முகத்தை நன்கு கழுவ வேண்டும். குளிக்கும்போது உடலின் அழுக்கு, மலம், ஜலத்தை வெளியேற்ற வேண்டும். ஒழுங்கற்ற தரைத் தளங்களில் காலணி இல்லாமல் நடப்பதைத் தவிர்க்கவும். தரமற்ற காலணிகளை அணிவதைத் தவிர்க்கவும்.

வாரம் ஒருமுறை அல்லது இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ளக் கூடாது. சத்துள்ள காய், கீரை, பயறு, பழ வகைகளைத் தினசரிச் சேர்த்துக்கொள்ள வேண்டும். தோல் நோய், வேறு நோய்கள் இருந்தால் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தொற்றுநோய்கள் தாக்காமல் இருக்கவும் உடலின் எதிர்ப்புச் சக்தி குறையாமல் இருக்கவும் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். சரியான நேரத்தில், சரியான முறையில் உணவை உட்கொண்டுவந்தால் தொற்று நோயிலிருந்தும், சேற்றுப் புண், பித்த வெடிப்பு வராமலும் தடுக்க முடியும்.

மருந்துகள்

சர்க்கரை நோய், தைராய்டு நோய், உடல் பருமன், தொற்று நோய், சத்துக் குறைபாடு போன்றவற்றுக்கு உரிய சிகிச்சை, உணவுக் கட்டுப்பாடுகளுடன் மருந்தையும் உட்கொள்ள வேண்டும். சேற்றுப்புண், பித்தவெடிப்புக்கு உள்மருந்து எடுத்துக்கொள்ளும் முன் சித்தர்கள் விதிப்படி வருடத்துக்கு இரண்டு முறை பேதிக்குச் சாப்பிட்டு உணவுப் பாதையைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

உள்மருந்து

முக்குற்றங்களான வாத, பித்த, கபத்தைச் சமநிலைபடுத்தக்கூடிய மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். சிவனார்வேம்பு, லவங்கப்பட்டை, இலவங்கபத்திரி, சிறுநாகப்பூ, ஏலம் சேர்த்த மருந்து, கார்போக அரிசி, ஆவாரம்பூ, ரோஜா மொக்கு, கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், கசகசா, பூலாங்கிழங்கு, சந்தனம் சேர்ந்த மருந்து, பரங்கிப்பட்டை சேர்ந்த மருந்து, அன்னபேதி, நற்பவளம் சேர்ந்த மருந்துகள் நல்ல பலனைத் தரும்.

வெளிமருந்து

கிளிஞ்சல், நெல்லிக்காய், சிற்றாமணக்கு நெய் சேர்ந்த மருந்து, வங்கச் செந்தூரம், மிருதார்சிங்கி, மயில்துத்தம், வெண்ணெய் சேர்ந்த மருந்து, வீரம், பசுவெண்ணெய் சேர்ந்த மருந்து, ஊமத்தை இலைச்சாறு, தேங்காய் நெய் சேர்ந்த மருந்து, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த மருந்து, படிகார நீர் போன்ற வெளிப்பூச்சு மருந்துகள் பயன்படுத்தினாலும் சேற்றுப் புண், பித்த வெடிப்பு விரைந்து குணமடையும்.

கட்டுரையாளர், திருச்சி இ.எஸ்.ஐ. சிறப்பு நிலை சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drkaamaraaj@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

3 mins ago

தொழில்நுட்பம்

7 mins ago

தமிழகம்

11 mins ago

சினிமா

19 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

33 mins ago

வணிகம்

39 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

56 mins ago

மேலும்