கரோனாவை எதிர்கொள்வதில் கைவிடப்பட்ட மற்ற நோயாளிகள்

By செய்திப்பிரிவு

ச.லெனின்

கரோனா தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிவதும் சானிடைசர் பயன்படுத்துவதும் தற்போது கட்டாயமாகிவிட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கரோனா என்ற வார்த்தையை யாரும் அறிந்திராத காலத்தில், முகக்கவசமும் சானிடைசருடனும்தான் நான் கழித்தேன்.

தனிநபர் இடைவெளியைப் பராமரிப்பது, கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது, அவ்வப்போது சோப்பு போட்டு கைகளைக் கழுவுவது, சுகாதாரமான சூழலைப் பராமரிப்பது போன்றவை அப்போதே எனக்குக் கட்டாயமாகிப்போயின.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பதினைந்து, இருபது நாட்களுக்கு சுயதனிமையைப் பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது. நான் அப்போதே மூன்று மாதங்களுக்கு மேல் சுயதனிமையைக் கடைப்பிடித்தேன். 2016–ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குக் காரணம்.

கரோனா நோய்த்தொற்று இல்லாத காலத்திலேயே அவ்வளவு பாதுகாப்பு தேவைப்பட்டது. இன்றைய கரோனா தொற்றுப்பரவல் காலத்தில் என்னைப் போன்று உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்கு ஆளானவர்கள், மற்றவர்களைவிடக் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பாதுகாப்பு கருதி இந்த ஊரடங்கு காலத்தில் இதுவரை மருத்துவப் பரிசோதனைக்காக ஒரேயொரு முறை மட்டுமே வீட்டைவிட்டு நான் வெளியே சென்றிருக்கிறேன்.

உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை

மனித உடலில் பல்வேறு காரணங்களால் உடல் உள்ளுறுப்புக்கள் செயலிழந்துபோகின்றன. அவ்வாறு செயலிழந்த உறுப்புக்களைச் சீர்செய்யமுடியாத நிலையில், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மூளைச் சாவு அடைந்தவர்க ளிடமிருந்து தானமாகக் கிடைக்கும் உறுப்புக்களைக் கொண்டு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புக்கள் மட்டும் உயிரோடிருக்கும் உறவினர்களிடம் தானமாகப் பெறப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் பொருத்தப்படுகின்றன. எனக்குத் தானமாகக் கிடைத்த என்னுடைய அக்கா ஸ்வீட்லின் சுபிதாவின் சிறுநீரகமே, இப்போது நான் செயலாற்ற உதவுகிறது.

உடல் உறுப்பைத் தானமாகப் பெறுவதில் தொடங்கி அதைப் பொருத்துவது, அதைப் பராமரிப்பது என அனைத்துச் செயல்பாடுகளும் பெரும் கவனத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டிய கடினமான பணிகள். ஊரடங்குக்குப் பிந்தைய இயல்பு வாழ்க்கை எப்படிப் பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்குமோ, அதுபோலவேதான் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய என் நிலையும் இருந்தது.

தடுப்பாற்றலைக் கையாளுதல்

உடலில் புதிதாகப் பொருத்தப்படும் சிறுநீரகம் என்பது நமது உடலின் நோய்த் தடுப்பாற்றலைப் பொறுத்தவரை, ஓர் அந்நியப் பொருள்தான். பொருத்தப்பட்டுள்ள சிறுநீரகம் உடல்நலனுக்காகப் பொருத்தப்பட்டுள்ளது என்பதை அது அறியாது. எனவே, புதிய சிறுநீரகம் என்கிற அந்நியப் பொருளை எதிர்த்து, நமது உடலின் நோய்த் தடுப்பாற்றல் போராடும். புதிய சிறுநீரகத்தை அது தாக்கும். இந்தத் தாக்குதலை அனுமதித்தால் புதிய சிறுநீரகம் செயலிழந்துவிடும். எனவே, உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் பொருட்டு உடலில் இயற்கையாக உள்ள நோய்த் தடுப்பாற்றலின் அளவைக் குறைப்பதற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

நோய்த் தடுப்பாற்றலின் அளவைக் குறைப்பதன் மூலமாகவே புதிதாகப் பொருத்தப்பட்ட சிறுநீரகத்தைக் காக்க முடியும். அதேநேரம் உடலில் நோய்த் தடுப்பாற்றல் குறைவதால், வேறு நோய்கள் எளிதில் தொற்றிக்கொள்ளக் கூடுதல் சாத்தியம் உண்டு. சளி, காய்ச்சல் உள்ளிட்ட சாதாரண நோய் தொடங்கி கரோனா போன்ற பெரிய நோய்த்தொற்றுவரை உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்களை எளிதில் தாக்கும். எனவே, என்னைப் போன்றவர்கள் இந்தக் காலத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

அறுவைசிகிச்சை நடைபெற்ற பிறகு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் புதிதாகப் பொருத்தப்பட்ட சிறுநீரகத்தைப் பாதுகாக்க நோய்த் தடுப்பாற்றலைப் பெருமளவு குறைக்கும் மருந்துகள் எனக்கு வழங்கப்பட்டன. அப்போது மற்றவர்களிடமிருந்து நோய்த்தொற்று என்னை எளிதில் தொற்றிக்கொள்ளும் சாத்தியமிருந்தது. அதனால்தான், தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல் முகக்கவசத்தோடும் சானிடைசரோடும் நான் இருந்தேன்.

கரோனாவும் சேர்ந்துகொண்டால்...

பொருத்தப்பட்ட சிறுநீரகம் உடலுடன் ஓரளவு ஒத்துப்போன பிறகு, நோய்த் தடுப்பாற்றலைக் குறைக்கும் மருந்தின் அளவும் குறைக்கப்பட்டது. ஆனாலும், தற்போதுவரை நோய்த் தடுப்பாற்றலைக் குறைப்பதற்கான மருந்துகளை உட்கொண்டே வருகிறேன். இறுதிவரை இந்த மருந்தை உட்கொண்டாக வேண்டும். பொருத்தப்பட்ட சிறுநீரகத்தைப் பாதுகாக்க நோய்த் தடுப்பாற்றல் குறைக்கப்பட்டுப் பராமரிக்கப்படும். அதனால் கவனமின்றி இருந்தால், நோய்த்தொற்றுக்கு நாங்கள் எளிதில் ஆளாகக்கூடும்.

கரோனா தொற்றிலிருந்து விடுபட இதுவரை மருந்து எதுவும் கண்டறியப்படவில்லை. உடலில் நோய்த் தடுப்பாற்றலை அதிகரிக்கும் வகையில் உணவு, சத்து மாத்திரைகளை உட்கொள்வதன் மூலமாக மட்டுமே, கரோனாவை எதிர்கொண்டு வருகிறோம். உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் நோய்த் தடுப்பாற்றலை உயர்த்தி கரோனாவை எதிர்கொள்ள முடியாது. இவர்களுக்கு நோய்த் தடுப்பாற்றல் உயர்ந்தால், பொருத்தப்பட்ட சிறுநீரகம் பாதிக்கப்படும். அதேநேரம் சிறுநீரகத்தைப் பாதுகாக்க நோய்த் தடுப்பாற்றலைக் குறைத்தால் கரோனாவால் பாதிப்புக்கு உள்ளாக வேண்டியிருக்கும். உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டவர்களை கரோனா தாக்கினால், மற்றவர்களைப் போல் எளிதில் அவர்களால் மீளமுடியாது.

ஊரடங்கு காலத்தில்...

உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்தின் அளவை மாற்றி எடுத்துக்கொள்ள வேண்டும். ஊரடங்கால் இதைப் பின்பற்றுவது பெரும் சிரமமாக இருந்தது.

ஒருவேளை கூடத் தவறாமல் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இந்த மாத்திரைகள் பரவலாகப் பயன்படுத்தப்படாதவை என்பதால் எல்லா மருந்தகங்களிலும் கிடைக்காது. அதனால், 30 முதல் 40 நாட்களுக்கான மாத்திரைகளை எப்போதும் வாங்கிவைத்துக்கொள்வேன். இந்த மாத்திரைகளின் விலை அதிகம் என்பதால், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தின் விற்பனை மையத்திலேயே சலுகை விலையில் நேரடியாக வாங்குவேன்.

கரோனாவைக் கட்டுப்படுத்தும் ஒரு வழிமுறையாகப் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த தெருவை முழுமையாக அடைத்துவைக்கும் நடைமுறையைச் சென்னை மாநகராட்சி தொடக்கத்தில் கடைப்பிடித்தது. நான் மாத்திரை வாங்கிக்கொண்டிருந்த விற்பனை மையம் அமைந்திருந்த தெரு, இப்படியாகப் பதினைந்து நாள்கள் மூடப்பட்டது. என்னிடம் கைவசம் இருந்த மாத்திரைகள் தீர இருந்த நிலையில், அத்தெரு இயல்புநிலைக்குத் திரும்பியதால் எனக்குப் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இல்லையேல் மாத்திரைக்காக அலைந்து திரிந்திருக்க வேண்டியிருந்திருக்கும். போதுமான மாத்திரைகள் கைவசம் இல்லாதவர்கள் திடீர் ஊரடங்கால் நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

கணக்கில்கொள்ள வேண்டாமா?

கரோனாவைப் போல் ஆயிரக்கணக்கான நோய்களும் அவற்றை எதிர்கொள்ளத் தனித்தனி வழிமுறைகளும் உள்ளன. அப்படியான நோய்களை எதிர்கொள்ள மருத்துவப் பரிசோதனை, மருத்துவரின் கண்காணிப்பு, மருந்து மாத்திரை இல்லாமல் வாழ்வது சாத்தியமற்றுப்போன பலர் இருக்கிறார்கள். அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

எனது குடும்பமும் நண்பர்களும் உடனிருந்து உதவுவதால் மருந்து மாத்திரைகள் வாங்குவதில் சிக்கல்கள் இல்லாமல், அலைக்கழிப்பு இல்லாமல் கரோனா கால நெருக்கடியை, இதுவரை சமாளித்து விட்டேன். என்னைப் போலன்றி ஆதரவற்ற, வாய்ப்பு வசதி குறைவாக உள்ள பலர் இந்தக் காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கவே சாத்தியம் அதிகம். ஆனால், அது பற்றிய எந்தச் சிந்தனையும் இல்லாமல்தான் ஊரடங்கையும் கரோனாவையும் அரசு நிர்வாகம் அணுகியுள்ளது என்றே எனது அனுபவம் உணர்த்துகிறது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: lenin.red@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்